2015-12-02 14:57:00

இரக்கத்தின் யூபிலி குறித்து திருத்தந்தை அளித்துள்ள பேட்டி


டிச.02,2015. 'இரக்கத்தின் யூபிலி' என்ற கருத்தை நான் தனித்து, சுயமாக உருவாக்கவில்லை, எனக்கு முன் பணியாற்றிய திருத்தந்தையர் இரக்கம் குறித்து கூறிவந்த கருத்தையே நான் தொடர்ந்து வலியுறுத்த விழைகிறேன் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “Credere” என்ற வார இதழுக்கு அளித்த பேட்டியில்  கூறியுள்ளார்.

இரக்கத்தின் யூபிலி என்ற கருத்து திருத்தந்தைக்கு எவ்விதம் வந்தது என்று கேட்கப்பட்ட கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்தத் திருத்தந்தை, தான் வழங்கிய முதல் நண்பகல் மூவேளை செப உரையிலும், வத்திக்கான் பங்குக் கோவிலான புனித அன்னா கோவிலில் ஆற்றிய முதல் திருப்பலியிலும் இரக்கத்தைப் பற்றி தான் பேசியது, தூய ஆவியாரின் தூண்டுதலால்தான் என்று கூறினார்.

துன்பம் நிறைந்த செய்திகளை மீண்டும், மீண்டும் கேட்டுப் பழகிப் போய்விட்ட நமக்கு, இறைவனின் இரக்கத்தை, கருணையைப் பற்றி கேட்பது மிகவும் அவசியம் என்று தன் பேட்டியில் கூறியத்  திருத்தந்தை, திருஅவையானது, போர்க்களத்தில் பணியாற்றும் ஒரு மருத்துவமனை போன்றது என்ற உருவகம் தனக்கு மிகவும் பிடித்த உருவகம் என்று சுட்டிக்காட்டினார்.

மக்களைக் கொல்வதற்கு சக்திவாய்ந்த கொலைக் கருவிகளை உருவாக்குவதிலும், அவற்றை விற்பனை செய்வதிலும் இவ்வுலகம் செய்துவரும் முயற்சிகளை முறியடிக்க, கருணை, இரக்கம், ஒப்புரவு ஆகிய முயற்சிகளை மேற்கொள்வது ஒன்றே, இவ்வுலகை மீட்கும் என்று திருத்தந்தை தன் பேட்டியில் வலியுறுத்தினார்.

தனது 17வது வயதில், தன்னை வழிநடத்தி வந்த ஆன்மீகக் குரு புற்றுநோயால் இறந்ததும், அவ்வேளையில் தன்னை இறைவன் தன் இரக்கத்தால் தொட்டதும் குறித்து இப்பேட்டியில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், "பரிதாபத்திற்குரிய தன்னை, தன் இரக்கத்தால் தேர்ந்தார்" என்பது, தன் பணியின் விருதுவாக்காக அமைந்தது என்பதையும் எடுத்துரைத்தார்.

1994ம் ஆண்டு, நடைபெற்ற உலக ஆயர்கள் மாமன்றத்தில், "மென்மையான, இரக்கம் மிகுந்த புரட்சி"யை நாம் உருவாக்கவேண்டும் என்று தான் குறிப்பிட்டதை இப்பேட்டியில் நினைவுகூர்ந்தத் திருத்தந்தை, அத்தகைய புரட்சியை, இரக்கத்தின் யூபிலி கொணரும் என்று தான் நம்புவதாகக் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.