2015-12-02 16:07:00

இதுபோன்ற ஒரு தருணம் இனி வராமல் போகலாம்-ஐ.நா. பொதுச் செயலர்


டிச.02,2015. ஒரு புதிய எதிர்கால வரலாற்றை எழுத இங்கு நீங்கள் கூடியுள்ளீர்கள் என்றும், இதுபோன்ற ஒரு தருணம் இனி வராமல் போகலாம் என்றும் ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள் உலகத் தலைவர்களிடம் கூறினார்.

ஐ.நா.அவை, பாரிஸ் மாநகரில் ஏற்பாடு செய்துள்ள காலநிலை மாற்றம் உலக உச்சி மாநாட்டின் துவக்க நிகழ்வில் பேசிய பான் கி மூன் அவர்கள், உலகத் தலைவர்கள் கூடிவந்துள்ளது ஒரு வாய்ப்பு என்றும், அதுவே அவர்களுக்குத் தரப்பட்டுள்ள ஒரு சவால் என்றும் எடுத்துரைத்தார்.

இன்றைய, மற்றும் நாளையத் தலைமுறையினரின் நலமான வாழ்வை உறுதி செய்யும் சக்தி உள்ளவர்கள் பாரிஸ் மாநகரில் கூடியுள்ளனர் என்று சுட்டிக்காட்டிய பான் கி மூன் அவர்கள், காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த எடுக்கப்படும் ஒவ்வொரு நல்ல முடிவும், அனைத்து நாடுகளையும் காப்பாற்றும் என்று வலியுறுத்தினார்.

180 நாடுகள், காலநிலை மாற்றம் குறித்து தாங்கள் எடுத்துள்ள தீர்மானங்களை ஐ.நா. அவையில் சமர்பித்துள்ளன என்பதை மகிழ்வுடன் எடுத்துரைத்த பொதுச் செயலர், பான் கி மூன் அவர்கள், இந்த முயற்சி போற்றுதற்குரிய முதல் முயற்சி என்றும், நாம் செல்லவேண்டிய தூரம் இன்னும் உள்ளது என்றும் கூறினார்.

செல்வம் மிகுந்த நாடுகள், வளர்ந்துவரும் நாடுகளுக்கு ஒவ்வோர் ஆண்டும் அளிப்பதாகக் கூறியுள்ள 100 பில்லியன் டாலர்கள் நிதியை, 2020ம் ஆண்டிற்குள் நடைமுறைப்படுத்துவது மிகவும் முக்கியமான ஒரு பணி என்றும், பான் கி மூன் அவர்கள் உலகத் தலைவர்களிடம் விண்ணப்பித்தார்.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.