2015-12-01 15:01:00

விவிலியத் தேடல் : உவமைகள் - ஒரு முத்தாய்ப்பு


கடந்த ஓராண்டளவாய் நம் ஒலிபரப்பின் முதல் நிமிட நிகழ்ச்சியாக 'கடுகு சிறுத்தாலும்' இடம்பெற்று வருகிறது. இந்நிகழ்ச்சி நம் வானொலிக் குடும்பத்தினர் மத்தியில் நல்ல பல தாக்கங்களை உருவாக்கியுள்ளது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. ஒவ்வொரு வாரமும் எம்மை வந்துசேரும் நேயர் கடிதங்களில், இந்நிகழ்ச்சி குறித்து பலர் கருத்துக்களை வெளியிட்டு வந்துள்ளனர். அதேவண்ணம், தினமும் அனுப்பப்படும் மின்னஞ்சலில், இப்பகுதி, இறுதியில் இணைக்கப்படுவதால், பலர் இப்பகுதியைச் சேகரித்து வருவதாகவும் கூறியுள்ளனர். நம் நேயர் குடும்பத்தில் இந்நிகழ்ச்சி இவ்வளவு ஈர்ப்பையும், தாக்கத்தையும் உருவாக்க காரணம் என்ன? இப்பகுதியில் சொல்லப்படும் கதைகளும், அக்கதைகளின் இறுதியில் சொல்லப்படும் எண்ணங்களுமே, 'கடுகு சிறுத்தாலும்' நிகழ்ச்சியை இவ்வளவு பிரபலமாக்கியுள்ளது.

குழந்தைகளுக்குக் கதை சொல்லிய அனுபவம் உங்களுக்குண்டா? கதை என்று சொன்னதும், அக்குழந்தைகள் மத்தியில் தோன்றும் ஆர்வம், கதையைக் கேட்கும் நேரத்தில் அதில் முற்றிலும் ஆழந்துவிடும் ஈடுபாடு... பார்க்க அழகான ஒரு காட்சி. அந்நேரத்தில் வேறு இடையூறுகள் வந்தால், குழந்தைகளுக்கு ஏகப்பட்ட எரிச்சலும் கோபமும் வருவதையும் பார்த்து இரசித்திருப்போம், இல்லையா? குழந்தைப் பருவத்தில் மட்டுமல்ல, வாழ்க்கை முழுவதும் நமக்கு கதைகள்மீது ஈர்ப்பு உண்டு என்பதை மறுப்பதற்கில்லை.

ஆர்வத்தைத் தூண்டும் ஆற்றல் மட்டுமல்ல, குணப்படுத்தும் ஆற்றலும் கதைகளுக்கு உண்டு என்பது பரவலான கருத்து. இசை, நாடகம், நடனம், ஓவியம் போன்ற கலைப் படைப்புக்கள் வழியாக, 'therapy' எனப்படும் குணமளிக்கும் வழிமுறை உள்ளதுபோல், கதைகள் வழியாக Story therapy அல்லது, Narrative therapy என்ற குணப்படுத்தும் வழிமுறை உள்ளது.

கதைகள் நம்முள் உருவாக்கும் ஈடுபாடு, கதைகளுக்கு உள்ள குணப்படுத்தும் ஆற்றல் என்ற பல்வேறு காரணங்களால், இயேசு, கதைகளை, உவமைகளைப் பயன்படுத்தினார் என்று சொல்லமுடியும். தன் தொடுதலாலும், வார்த்தைகளாலும், இயேசு, மக்களை குணமாக்கினார் என்பதை நாம் அறிவோம். அவரது உவமைகள் வழியாகவும், அவர், பல்லாயிரம் மக்களை, அவர்களது மனக்காயங்களில் இருந்து குணமாக்கியிருப்பார் என்று நிச்சயம் நம்பலாம். இவை அனைத்தையும் விட, இயேசு ஏன் உவமைகள் வழியே கற்பித்தார் என்பதைப் புரிந்துகொள்ள, புகழ்பெற்ற ஆன்மீக வழிகாட்டி, Anthony de Mello அவர்களின் 'One Minute Wisdom' என்ற நூலில் காணப்படும் எளியதொரு கதை உதவியாக இருக்கும்:

குரு எப்போதும் கதைகளையேக் கூறிவந்தார். அவர் கூறிய கதைகள் சீடர்களுக்குப் பிடித்திருந்தன. இருந்தாலும், இன்னும் ஆழமான உண்மைகளை தங்கள் குரு கற்றுத் தரவேண்டும் என்று சீடர்கள் கேட்க ஆரம்பித்தனர். அவர்கள் என்னதான் வற்புறுத்திக் கேட்டாலும், குரு சொன்ன ஒரே பதில் இதுதான்: "மனிதர்களுக்கும், உண்மைக்கும் இடையே உள்ள சுருக்கமான வழி, கதையே. இதை நீங்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை."

நமக்கும் உண்மைக்கும், நமக்கும் உண்மைக் கடவுளுக்கும் இடையே உள்ள சுருக்கமான வழி கதைகளே என்று இயேசு உணர்ந்ததால், அவர் உவமைகள் வழியே அந்த இறைவனை உலகிற்குக் கொண்டுவந்தார்.

உவமைகள் வழியே, இயேசு ஏன் பேசினார் என்பதற்குச் சொல்லப்படும் மற்றொரு காரணம்... கதைகளுக்கு உள்ள ஆயுள்காலம். வெறும் தகவல்களாக, செய்திகளாக நம்மை அடையும் உண்மைகளின் ஆயுள்காலம் குறைவானதே. இதே உண்மைகள் கதை வடிவில் வெளிவரும்போது, அவை நீண்ட காலம் வாழும். 20 நூற்றாண்டுகளைத் தாண்டி, வாழ்வு தரும் சக்தியாக இயேசுவின் உவமைகள் இருப்பது, கதைகளின் ஆயுள் காலத்திற்கு தகுந்த எடுத்துக்காட்டு.

கதைகள் கேட்பது நம் அடிப்படை இயல்பு என்பதைவிட, இதனை ஒரு தேவை அல்லது, தாகம் என்று கூடச் சொல்லலாம். "கதை சொல்வது: விவிலியத்திலிருந்து" (Storytelling from the Bible) என்ற நூலை எழுதிய Janet Litherland என்பவர், கதைகளுக்குள்ள சக்தியைப் பற்றி இவ்விதம் கூறுகிறார்:

"கதைகள் சக்திவாய்ந்தவை. அவை நம்மைக் கவர்ந்திழுக்கும், செயலாற்றத் தூண்டும்... நமக்கு மகிழ்வைத் தரும், கல்வி புகட்டும், சவால் விடும். வாழ்வின் அடிப்படை உண்மைகளைப் புரிந்துகொள்ள கதைகள் உதவி செய்யும். அவை நம் எண்ணங்களில் நீண்டகாலம் பதிந்துவிடும். எனவே, நீண்ட மறையுரைகளைக் காட்டிலும், ஒரு கதை பெரும் சக்தி படைத்தது. ஓர் உண்மையை எடுத்துச்சொல்ல விருப்பமா? கதையாய்ச் சொல்லுங்கள். இயேசு இவ்விதம் சொன்னார். தன் கதைகளை அவர் உவமைகள் என்று கூறினார்."

உண்மையைச் சொல்ல, உவமைகளைச் சொல்ல வேண்டும். உவமைகள், உருவகங்கள் வழியே சொல்லப்படும் உண்மைகளை உலகம் வரவேற்கும் என்பதைக் கூற, யூதப் பாரம்பரியத்தில் கதை ஒன்று உண்டு. நான் இப்போது 'கதை' என்ற வார்த்தையைச் சொன்னதும், நம்மில் பலரது கவனம் இன்னும் சிறிது கூர்மை பெற்றிருக்கும், இல்லையா? கதைகளுக்கே உரிய சக்தி இது. இதோ அந்த யூதக் கதை:

"உவமைகளுக்கு ஏன் இவ்வளவு சக்தி உள்ளது?" என்று யூத குரு Maggidஇடம் அவருடைய சீடர்கள் கேட்டனர். "இக்கேள்விக்கு ஓர் உவமை வழியாக விளக்கம் தருகிறேன்" என்று குரு Maggid தொடர்ந்தார்: "உலகில் உண்மை பிறந்தது. பிறந்ததுமுதல் அது ஆடை ஏதும் அணியாமல், பிறந்த மேனியாய் உலகைச் சுற்றிவந்தது. அதைக் கண்ட அனைவரும் முகம் சுளித்து, ஒதுங்கிச் சென்றனர். நிர்வாணமாய் சுற்றிவந்த உண்மையைக் கண்டு பயந்து ஓடியவர்களே அதிகம்.

தனக்கு நேர்ந்ததைக் கண்டு உண்மை மிகவும் வருத்தம் அடைந்தது. ஒருநாள் உண்மை, உவமையைச் சந்தித்தது. பல வண்ணங்கள் கொண்ட ஓர் உடையணிந்து மகிழ்வுடன் வந்த உவமை, உண்மையைப் பார்த்து, 'ஏன் இவ்வளவு சோகமாய் இருக்கிறாய், நண்பனே?' என்று கேட்டது. உண்மை உவமையிடம், 'எனக்கு வயதாகிக் கொண்டே இருக்கிறது. என்னைக் கண்டு எல்லாரும் வெறுத்து ஒதுக்குகின்றனர். என்ன செய்வதென்று தெரியவில்லை' என்றது. உவமை அதனிடம், 'நண்பா, உன் வயது ஒரு காரணம் அல்ல. பார்... எனக்கும், உனக்கும் ஒரே வயதுதான். ஆனால், எனக்கு வயதாக, வயதாக மக்கள் என்னை இன்னும் அதிகம் விரும்புகின்றனர். இதன் இரகசியம் இதுதான்... மக்கள் எதையும் பல வண்ணங்களில் காண விழைகின்றனர். என்னிடம் உள்ள வண்ண ஆடையொன்றை நீயும் அணிந்துகொள். அதன்பிறகு என்ன நடக்கிறதென்று நீயே பார்' என்று உவமை அறிவுரை சொன்னது.

உவமை சொன்ன ஆலோசனையை உண்மை ஏற்றது. உவமையின் வண்ண ஆடையை உண்மை உடுத்திக்கொண்டது. அன்றிலிருந்து, உண்மையும், உவமையும் இணைபிரியாமல் உலவி வந்தனர். இருவரையும் மக்கள் வெகுவாய் விரும்பி வரவேற்றனர்" என்று குரு Maggid கூறி முடித்தார்.

உண்மை நேரடியாக, வெளிப்படையாகத் தோன்றும்போது, அது நம்மை அச்சத்தில் ஆழ்த்தும். அதை வரவேற்க நாம் தயங்குவோம். அதே உண்மை ஓர் உவமையாக, கதையாக நம்மை அடையும்போது, உள்ளத்தில் ஆழமாய்ப் பதியும்... மாற்றங்களையும் உருவாக்கும். கதைகளுக்கு, உவமைகளுக்கு உள்ள சக்தியை, நன்கு உணர்ந்த இயேசு, அதை ஒரு முக்கிய கருவியாகப் பயன்படுத்தினார்.

காலம் காலமாக மனித குலத்தைப் பயனுள்ள வகையில் பண்படுத்தி வந்துள்ள கதைகளின் சக்தியைப் பற்றி Matthew Fox என்ற எழுத்தாளர் கூறியுள்ள கருத்துக்கள் நம் சிந்தனையைத் தூண்டுகின்றன:

பழங்குடியினரிடையே இருந்த கல்வி முறையில் கதைகள் முக்கிய இடம்பெற்றன. Celtic என்ற பழங்குடியினர் சமுதாயத்தில், கவிஞர்கள் மட்டுமே ஆசிரியர்களாகப் பணியாற்ற வேண்டும் என்ற விதி, எழுதப்படாத பாரம்பரியமாக இருந்தது. ஏன்? மனித இதயத்தின் வழியாகச் செல்லாத அறிவு ஆபத்தானது. அது உண்மையான ஞானமாக இருக்கமுடியாது. இதயத்தைத் தொடாமல், அறிவுத்திறனை மட்டும் வளர்த்துக்கொள்ளும் இளையோரின் வாழ்வு மூச்சடைத்துப் போகும். நாம் வாழும் இன்றைய உலகில் கவிஞர்களும், கதை சொல்பவர்களும் நமது கல்வி முறைக்குப் பொறுப்பாளர்களாக இருந்தால், எத்தனை சீரான மாற்றங்கள் உருவாகும்?"

இதயத்தைத் தொடாமல், நம் அறிவை மட்டும் வளர்த்துவிடும் கல்வி முறையால் இன்று நாம் உலகில் சந்தித்துவரும் பிரச்சனைகளை அனைவரும் அறிவோம்.

ஒரு கவிஞராக, கதை சொல்பவராக விளங்கிய இயேசு, தன் உவமைகள் வழியே நம் இதயங்களில் தலைசிறந்த வாழ்க்கைப் பாடங்களைப் பதித்துள்ளார். அந்தப் பாடங்களைப் பயில நாம் கடந்த மூன்று ஆண்டுகள் ஒரு தேடல் பயணத்தை மேற்கொண்டோம். ஆம், கடந்த மூன்றாண்டளவாக, இன்னும் குறிப்பாகச் சொல்லப் போனால், கடந்த 134 வாரங்களாக, நாம் இயேசுவின் உவமைகளில் விவிலியத் தேடல்களை மேற்கொண்டு வந்துள்ளோம். நற்செய்தியாளர் லூக்கா பதிவு செய்துள்ள 13 உவமைகளிலும், மத்தேயு நற்செய்தியில் காணப்படும் 13 உவமைகளிலும் நமது தேடல் பயணம் தொடர்ந்துள்ளது.

இயேசுவின் உவமைகள் என்ற கரையற்ற கடலில் மூழ்கி முத்தெடுக்க முயன்றோம். பல வேளைகளில் அந்தக் கடற்கரையின் ஓரத்தில் ஒதுங்கிக் கிடந்த சிப்பிகளை மட்டுமே நம்மால் சேகரிக்க முடிந்தது. கடந்த 134 வாரங்களாக நமக்கு இந்த அற்புத அனுபவத்தை வழங்கிய இறைவனுக்கு நன்றி சொல்வோம்.

வருகிற செவ்வாய், டிசம்பர் 8ம் தேதி, கத்தோலிக்கத் திருஅவையில் இரக்கத்தின், அல்லது கருணையின் யூபிலி ஆண்டு துவங்கவிருக்கிறது. இத்தருணத்தை முன்னிட்டு, விவிலியத்தில் கருணை, இரக்கம் ஆகிய கருத்துக்கள் எவ்விதம் பதிவு  செய்யப்பட்டுள்ளன என்பதை, அடுத்த விவிலியத் தேடல் முதல் சிந்திக்க உங்களை அழைக்கிறேன்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.