2015-12-01 15:34:00

எய்ட்ஸ் நோய் ஒழிப்பு நடவடிக்கைகள் அதிகரிக்க வேண்டும்


டிச.01,2015. உலக எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு தினத்திற்கென செய்தி வெளியிட்ட ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள், இந்நோயை ஒழிப்பதற்குத் தங்களை அர்ப்பணித்துள்ள நலவாழ்வுப் பணியாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களுக்குத் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

உலகில் HIV நோய்க் கிருமிகளுடன் வாழ்கின்ற ஏறக்குறைய மூன்று கோடியே எழுபது இலட்சம் மக்களின் வாழ்வை மாற்றுவதற்கு உதவும் தற்போதைய சிகிச்சைகள், இருமடங்குக்கு மேல் அதிகரிக்கும்படியாக வலியுறுத்தியுள்ளார் பான் கி மூன்.

கடந்த செப்டம்பரில் உலக நாடுகளின் தலைவர்கள் ஏற்றுக்கொண்ட 2030ம் ஆண்டின் வளர்ச்சித் திட்ட இலக்குகளில் எய்ட்ஸ் நோயை ஒழிப்பதற்கும் ஒருமனதாக இசைவு தெரிவித்திருப்பது, நவீன வரலாற்றில் இடம்பெறும் நடவடிக்கைகளில் முக்கியமான ஒன்று என்றும் குறிப்பிட்டுள்ளார் பான் கி மூன்.

மேலும், இளையோர் HIV நோய்க் கிருமி பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும், இந்நோய் ஒழிப்புக்கு உலக அளவில் இடம்பெறும் நடவடிக்கைகளில் இணைய வேண்டும் என்று, ஐ.நா.வின் UNAIDS எய்ட்ஸ் நோய்க் கட்டுப்பாட்டு அமைப்பின் இயக்குனர் Michel Sidibé அவர்கள், Gabon நாட்டின் Librevilleல் உலகளாவிய எய்ட்ஸ் நோய் ஒழிப்பு நடவடிக்கையை இத்திங்களன்று தொடங்கி வைத்தபோது இளையோரிடம் கேட்டுக்கொண்டார்.

உலகில் HIV நோய்க் கிருமியுடன் வாழும் 3 கோடியே 69 இலட்சம் பேரில் ஒரு கோடியே 71 இலட்சம் பேருக்கு, தாங்கள் இந்நோய்க் கிருமியுடன் வாழ்வதாகத் தெரியாமல் உள்ளனர் என்று, UNAIDS அமைப்பு கணித்துள்ளது.

ஆதாரம் : UN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.