2015-11-30 16:00:00

பாங்கியில் ஆப்ரிக்க இவாஞ்சலிக்கல் சபையினர் சந்திப்பு


நவ.30,2015. இஞ்ஞாயிறு உள்ளூர் நேரம் மாலை 4 மணிக்கு பாங்கி நகர் இவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ சபையின்(FATEB) பல்கலைக்கழகத்திற்குச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். ஆப்ரிக்காவில் இக்கிறிஸ்தவ சபையினரின் தேவைகளுக்காக 1974ம் ஆண்டில் இது கட்டப்பட்டது. இங்கு இப்பல்கலைக்கழகத் தலைவரும், ஆப்ரிக்க இவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ சபையின் தலைவரும் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினர். பின்னர் திருத்தந்தையும், நீண்ட காலமாக வன்முறையினால் துன்புறும் ஒரு நாட்டில் கிறிஸ்தவர்களுக்கிடையே நிலவும் பிரிவினை, துர்மாதிரிகையாய் உள்ளது, துன்புறும் மக்களுக்கிடையே இறைவன் பாகுபாடு காட்டுவது கிடையாது என்று கூறினார். கிறிஸ்தவ ஒன்றிப்புக்கு அழைப்பு விடுத்த இச்சந்திப்பை முடித்து பாங்கி பேராலயம் சென்ற வழியில் சிறார் மருத்துவமனைக்குச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். உரோம் "குழந்தை இயேசு" மருத்துவமனையிலிருந்து எடுத்துச் சென்றிருந்த மருந்து பெட்டிகள் பலவற்றைக் கொடுத்தார். அங்கிருந்த நோயாளிகளையும், பணியாளர்களையும் சந்தித்து ஆசிர்வதித்தார். இச்சிறார் மருத்துவமனைக்குத் திருத்தந்தை சென்றது ஏற்கனவே பயணத் திட்டத்தில் திட்டமிடப்படவில்லை. இதற்குப் பின்னர் பாங்கி நோத்ரு தாம்-அமல அன்னை பேராலயத்திற்குச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.