2015-11-30 15:46:00

பாங்கி மசூதியில் முஸ்லிம் சமூகத்தோடு திருத்தந்தை


நவ.30,2015. இத்திங்கள், ஆறு நாள்கள் கொண்ட திருத்தந்தையின் 11வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தின் நிறைவு நாள். கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் சகோதர சகோதரிகள். இதே உணர்வில் நாம் செயல்பட வேண்டுமென்ற டுவிட்டர் செய்தியை இத்திங்களன்று வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், PK5 என்றழைக்கப்படும் கடும் பாதுகாப்புக்கு உட்பட்ட பாங்கி நகரிலுள்ள Koudoukou பெரிய மசூதியில் அந்நாட்டின் முஸ்லிம் சமூகத்தை காலை 8.15 மணிக்குச் சந்திக்கச் சென்றார். இம்மசூதியில் ஐ.நா. அமைதி காக்கும் படையினர் துப்பாக்கிகளுடன் பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்தனர். முஸ்லிம் சமூகத்தின் தலைமை இமாம் Tidiani Moussa Naibi அவர்களுடன் நான்கு பேர் சென்று திருத்தந்தையை வரவேற்று மேடைக்கு அழைத்துச் சென்றனர். தலைமை இமாம் அவர்கள் ஆற்றிய வரவேற்புரையில், திருத்தந்தை அங்குச் சென்றதற்கு நன்றி தெரிவித்தார். நாம் அனைவரும் புரிந்துகொள்ளும் ஓர் அடையாளமாக இச்சந்திப்பு உள்ளது என்றும் கூறினார். பின்னர் திருத்தந்தையும் உரையாற்றினார். ஏறக்குறைய 200பேர் கலந்து கொண்ட இந்நிகழ்வுக்குப் பின்னர், அங்கிருந்து 5.5 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள Barthélémy Boganda கால்பந்து விளையாட்டு அரங்கம் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். மத்திய ஆப்ரிக்க குடியரசில் கிறிஸ்தவ அரசுத்தலைவரை 2013ம் ஆண்டில் முஸ்லிம் புரட்சியாளர்கள், ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கை மூலம் ஆட்சியிலிருந்து அகற்றியதைத் தொடர்ந்து வன்முறை வெடித்தது. 2014ம் ஆண்டின் தொடக்க மாதங்களில் கும்பல்கள் முஸ்லிம்களைத் தெருக்களில் தாக்கி வந்தனர். முஸ்லிம்களின் தலைகளை வெட்டி உடல்களுக்குத் தீ வைத்தனர். பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் குடிமக்கள் அண்டை நாடுகளான சாட் மற்றும் கேம்ரூனுக்குப் புலம் பெயர்ந்தனர். தலைநகர் பாங்கியில் ஒரு காலத்தில் 1,22, 000 முஸ்லிம்கள் இருந்தனர். ஆனால் இன்று அவர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 15 ஆயிரம் என்று Human Rights Watch அமைப்பு கூறியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.