2015-11-30 15:55:00

பாங்கி அமல அன்னை பேராலயத்தில் புனிதக் கதவு திறப்பு


நவ.30,2015. பாங்கி அமல அன்னை பேராலயம் 1937ம் ஆண்டில் கட்டப்பட்டது. இப்பேராலய வளாகத்தில் இலட்சக்கணக்கில் விசுவாசிகள் கூடியிருந்தனர். திறந்த காரில் இம்மக்கள் மத்தியில் வலம் வந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மலர்களால் அழகுபடுத்தப்பட்டிருந்த அப்பேராலயத்தின் எளிமையான மரப் புனிதக் கதவின் முன் நின்று செபித்தார். பின்னர் விசுவாசிகள் அனைவரையும் பார்த்து, பாங்கி நகர், இன்று உலகின் ஆன்மீகத் தலைநகராக மாறுவதாக! பாங்கி நகர் செபத்தின் ஆன்மீகத் தலைநகராக மாறுவதாக! இரக்கத்தின் புனித ஆண்டு இப்பூமியில் முன்கூட்டியே வந்துவிட்டது. இந்நிலம், போர், வெறுப்பு, புரிந்துகொள்ளாமை மற்றும் அமைதியின்மையால் பல ஆண்டுகளாகத் துன்புறுகின்றது. நாம் எல்லாரும் அமைதிக்காக, இரக்கத்திற்காக, ஒப்புரவிற்காக, மன்னிப்பிற்காக, அன்புக்காகச் செபிப்போம். பாங்கி நகரிலும், மத்திய ஆப்ரிக்க குடியரசிலும் மட்டுமல்லாமல், போரால் துன்புறும் அனைத்து நாடுகளிலும் அமைதி நிலவ வேண்டுமென்று நாம் கேட்போம். நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து அன்பு மற்றும் அமைதியைக் கேட்போம்.... என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உரக்கக் கூறியவுடன், மக்கள் வெள்ளம் ஒருசேர, அன்பு, அமைதி என்று திரும்பத் திரும்பச் சப்தமாகச் சொன்னது. இப்போது இச்செபத்துடன், உலகின் ஆன்மீகத் தலைநகராகிய இங்கு, இன்று புனிதக் கதவைத் திறப்போம் என்று சொல்லி, தனது இரு கரங்களாலும் கதவை அகலத் திறந்தார் திருத்தந்தை பிரான்சிஸ். உடனே மக்கள் வெள்ளத்தின் குலவை ஒலியும், கரவொலியும் வானைப் பிளந்தன. டிசம்பர் 8ம் தேதி வத்திக்கானில் புனிதக் கதவைத் திறந்து வைக்கவுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக, நிலையான அரசு இன்றி, மோதல்களின் இரத்தத்தால் நனைந்துள்ள மத்திய ஆப்ரிக்க குடியரசு மக்களோடு கொண்டிருக்கும் தோழமையுணர்வு மற்றும் செபத்தின் அடையாளமாக, பாங்கி பேராலயத்தில் இஞ்ஞாயிறன்று புனிதக் கதவைத் திறந்து வைத்தார். வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலய புனிதக் கதவைத் திறப்பதற்கு முன்னர், இப்படி நடந்தது திருஅவை வரலாற்றில் இதுவே முதன் முறையாகும். முஸ்லிம் மதத் தலைவர்களும் இப்பெரு விழாத் திருப்பலியில் கலந்துகொண்டனர். எல்லா இடங்களிலும், குறிப்பாக, வன்முறையும், வெறுப்புணர்வும், அநீதியும், அடக்குமுறையும் ஆட்சி செய்யும் இடங்களில், கருணை, இரக்கம், மன்னிப்பு மற்றும் ஒப்புரவின் தலைவர்களாக, கிறிஸ்தவர்கள் சாட்சிய வாழ்வு வாழுமாறு கேட்டுக்கொண்டு இத்திருப்பலியை நிறைவு செய்தார் திருத்தந்தை. இஞ்ஞாயிறு இரவு 7 மணியளவில் பாங்கி பேராலய வளாகத்தில் பல்லாயிரக்கணக்கான இளையோருக்கு செப வழிபாட்டைத் தொடங்கி வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். மத்திய ஆப்ரிக்க குடியரசின் இளையோரின் அடையாளமான வாழைமரத்தை நினைவுபடுத்தி, வாழ்வின் அடையாளமான வாழைமரம் போன்று வாழ இளையோரை ஊக்கப்படுத்தினார். இந்நிகழ்வுடன் இஞ்ஞாயிறு நிகழ்வுகள் நிறைவு பெற்றன. மேலும், “காணாமற்போன மகனின் தந்தை போன்று திறந்த கரங்களுடன் கடவுள் நமக்காகக் காத்திருக்கிறார் என்பதை இரக்கத்தின் யூபிலி ஆண்டு நினைவுபடுத்துகின்றது”. “வன்முறையும், வெறுப்பும் எங்கிருக்கின்றனவோ அவ்விடத்தில் அன்பே உருவான கடவுளுக்குச் சாட்சி பகர கிறிஸ்தவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்” என்ற டுவிட்டர் செய்திகளையும் இஞ்ஞாயிறன்று வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.