2015-11-30 15:57:00

திருத்தந்தை - நான் அங்குச் சென்று அவர்களோடு இருக்கலாமா?


நவ.30,2015. “அமைதியின் திருப்பயணியாகவும், நம்பிக்கையின் திருத்தூதுவராகவும் வந்துள்ளேன்” என்று, இஞ்ஞாயிறு காலை பத்து மணிக்கு மத்திய ஆப்ரிக்கக் குடியரசு மண்ணில் கால் பதித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இந்நாட்டின் தலைநகர் பாங்கி நகர் அரசு மாளிகையில் வரவேற்பைப் பெற்று, பின்னர் அரசியல் அதிகாரிகளுக்கு உரையாற்றிய திருத்தந்தை, ஒற்றுமை, மனித மாண்பு, வேலை ஆகிய மூன்றின் விழுமியங்களை வலியுறுத்தினார். மதியம் ஒரு மணியளவில், பாங்கி திருப்பீடத் தூதரகத்தில் மத்திய ஆப்ரிக்க குடியரசு ஆயர்களைச் சந்தித்து அவர்களுடன் மதிய உணவருந்தினார் திருத்தந்தை. அச்சமயத்தில் திருத்தந்தையின் அருகில் நின்ற ஆயர் ஒருவர், பாங்கி நகர் மசூதிக்கு அருகே இஞ்ஞாயிறு காலையில் இடம்பெற்ற வன்முறையில் மூன்று இளையோர் கொல்லப்பட்ட செய்தியைத் தெரிவித்தார். கொம்போனி மறைப்பணியாளர்கள் நடத்தும் பாங்கி நகர் பாத்திமா அன்னை மரியா கத்தோலிக்க ஆலயத்தைவிட்டு இந்த இளையோர் செல்ல முயற்சித்தபோது இயந்திரத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த பாத்திமா அன்னை மரியா பங்குத்தளம், முஸ்லிம் பகுதியில் அமைந்துள்ளது. வன்முறை இடம்பெற்ற இந்த இடம், திருப்பீடத் தூதரகத்திற்கு ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில்தான் இருந்தது. உடனே திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நான் அங்குச் சென்று அவர்களோடு இருக்கவா என்று கேட்டார். அதற்கு திருப்பீடத் தூதர் பேராயர் Franco Coppola அவர்கள், வேண்டாம், இது மிகவும் ஆபத்தான பகுதி, அங்கு செல்லக் கூடாது என்று கூறினார். திருத்தந்தை இவ்வாறு கேட்டது, துன்புறும் மக்களோடு அவர் இருக்க விரும்புவதையே காட்டுகின்றது.   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.