2015-11-30 14:42:00

எவாஞ்செலிக்கல் கிறிஸ்தவ சபையினருக்கு திருத்தந்தையின் உரை


நவ.30,2015. பாங்கி நகர், எவாஞ்செலிக்கல் கிறிஸ்தவ சபையினருக்கு திருத்தந்தை வழங்கிய உரை:

அன்பு சகோதர, சகோதரிகளே, உயிர்த்த இயேசுவின் பணியில் ஈடுபட்டிருக்கும் நம் அனைவரையும் அவரே இங்கு அழைத்து வந்துள்ளார். மத்திய ஆப்ரிக்காவில் நற்செய்தியின் மகிழ்வை எடுத்துரைக்க நாம் அனைவரும், நமது திருமுழுக்கின் வழியே அழைப்பு பெற்றுள்ளோம்.

வன்முறையால் பல ஆண்டுகளாய் துன்புற்றுவரும் உங்கள் மக்களுக்கு, நற்செய்தியை பறைசாற்றுவது உடனடியாக அவசியம். வறியோர், கைவிடப்பட்டோர், குழந்தைகள், முதியோர் ஆகியோரின் வடிவில், கிறிஸ்துவின் உடல் இங்கு துன்புறுகிறது.

துன்புறுவோர் நடுவே இறைவன் எந்த பாகுபாடும் பார்ப்பது கிடையாது. கிறிஸ்தவ ஒன்றிப்பின் இரத்தம் குறித்து நான் அடிக்கடி பேசி வந்துள்ளேன். கிறிஸ்தவ சமுதாயத்தின் அனைத்து குழுக்களும் சாத்தானால் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அநீதியாலும்,  குருட்டுத்தனமான வெறுப்பினாலும் துன்புற்று வருகின்றன. நாம் அனைவருமே அனுபவித்துவரும் இத்துன்பம் நம்மை ஒருங்கிணைக்கும் ஒரு பாதை.

கிறிஸ்தவர்களிடையே நிலவி வரும் பிளவுகள் ஒரு பெரும் இடறல். ஏனெனில் இது கடவுளின் சித்தத்திற்கு எதிரானது. பிளவுகளால் இவ்வுலகில் பெருகியுள்ள வன்முறைகளின் நடுவே, கிறிஸ்தவர்களிடையே உள்ள பிளவுகள் பெரும் இடறலாக அமைந்துள்ளது. மத்திய ஆப்ரிக்க குடியரசில், கிறிஸ்தவர்களிடையே நிலவும் ஒற்றுமையையும், ஒருவரை ஒருவர் மதிப்பதையும் நான் பாராட்டுகிறேன். இதே பாதையில் நீங்கள் தொடர்ந்து நடக்க உங்களை ஊக்குவிக்கிறேன்.

உங்கள் அனைவரையும் இறைவன் ஆசீர்வதிப்பாராக!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.