2015-11-30 15:38:00

11வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயண நிறைவு திருப்பலி


நவ.30,2015. பாங்கி நகர் Barthélémy Boganda கால்பந்து விளையாட்டு அரங்கத்தில் முப்பதாயிரம் மக்களே இருக்கக்கூடியது. ஆனால் இங்கு, பலவண்ண ஆடைகளில் கடலென மக்கள் மிகுந்த ஆரவாரத்துடன் திரண்டிருந்தனர். இம்மக்கள் மத்தியில் திறந்த காரில் வந்து திருப்பலியை ஆரம்பித்தார் திருத்தந்தை. இத்திருப்பலியில் மத்திய ஆப்ரிக்க குடியரசின் இடைக்கால அரசுத்தலைவர் கத்ரீன் Samba Panza, அரசுப் பிரிதிநிதிகள், இஸ்லாம் சமயப் பிரதிநிதி இமாம் Kobine Layama போன்றோரும் கலந்துகொண்டனர். நற்செய்தி வாசகத்திற்கு முன்னர் ஆடல் பாடல்களுடன் விவிலியம் பவனியாக எடுத்துவரப்பட்டது. வத்திக்கான் கொடி நிறத்தில் ஆப்ரிக்க மரபுப் பாணியில் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கு போன்ற ஓர் அமைப்பில் ஒரு சிறுவன் அமர்ந்து விவிலியத்தை பக்தியோடு வைத்துக் கொண்டிருந்தான். நற்செய்தி அந்நாட்டில் முதலில் அறிவிக்கப்பட்டதன் அடையாளமாக இந்நிகழ்வு நடந்தது. ஆடவர் குழு அப்பல்லக்கைச்  சுமந்து வந்தது. பெண்கள் குழு நடனம் ஆடியது. காணிக்கைப் பவனியிலும், ஒவ்வொரு மறைமாவட்டத்தில் கனிந்த கனிகள், விலங்குகளின் தோல்கள், மரச் சிலுவை ஆகியவற்றை சிறாரும் பெரியவர்களும் மரபு நடனம் ஆடிக்கொண்டே கொண்டு சென்றனர். இத்திருப்பலியின் இறுதியில் அந்நாட்டின் ஆயர்கள் ஒவ்வொருவருக்கும் திருநற்கருணை கதிர்பாத்திரத்தைப் பரிசாக அளித்தார் திருத்தந்தை. மேலும், ஒரு வயதான பெண், ஓர் ஆப்ரிக்க சட்டியில் மண்ணை நிறைத்து திருத்தந்தையிடம் கொடுத்தார். திருத்தந்தையும் அதனை ஆசிர்வதித்தார். மத்திய ஆப்ரிக்க குடியரசு மண்ணை ஆசிர்வதிப்பதாக இது இருந்தது.   

நவம்பர் 30 மறைசாட்சியான திருத்தூதர் புனித அந்திரேயா திருவிழா. இப்புனிதரைப் பாதுகாவலராகக் கொண்டிருக்கும் கான்ஸ்டான்டிநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்புத் திருஅவையின் தலைவரான முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயோ அவர்களுக்கு, இத்திருப்பலியின் இறுதியில் வாழ்த்தும் சொன்னார் திருத்தந்தை பிரான்சிஸ். எனது அன்புக்குரிய சகோதரருக்கு ஆப்ரிக்காவின் இதயத்திலிருந்து மகிழ்வும், உடன்பிறப்பு உணர்வும் கொண்ட வாழ்த்தைத் தெரிவிக்கிறேன். ஒருவர் ஒருவர் மீது நம்பிக்கை, மதிப்பு, பிறரன்பு, ஒப்புரவு ஆகிய கிறிஸ்தவ விழுமியங்களுக்கு கத்தோலிக்கரும், ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவரும் நம்பத்தகுந்த மற்றும் உறுதியான சான்று வழங்குகிறார்கள் என்று கூறினார். மேலும், இத்திருப்பலியின் இறுதி ஆசிருக்கு முன்னர் விசுவாசிகளிடம், இக்காலத்தில் நீங்கள் அனுபவிக்கும் இன்னல்களையும் விடுத்து, அடுத்த கரை உங்களிடம் இருக்கின்றது. இயேசு நம்மோடு சேர்ந்து ஆற்றைக் கடக்கிறார். இயேசு மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தவர். எனவே இயேசுவைப் பின்செல்ல நீங்கள் விருப்பம் தெரிவித்தால், இக்காலத் சோதனைகளும் துன்பங்களும், புதிய வருங்காலத்திற்கு வாய்ப்புக்களை எப்போதும் திறந்து வைக்கின்றன என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். அனைவருக்கும் தனது அப்போஸ்தலிக்க ஆசிரை அளித்த பின்னர், எளிய மரச்சிலுவையை செங்கோலாக ஏந்திக்கொண்டு ஆயர்கள் மற்றும் அருள்பணியாளர்களுடன் பவனியாகத் திருத்தந்தை சென்றபோது சிறார் குழு இரு பக்கமும் நின்று கொண்டு ஆப்ரிக்க மரபு நடனத்தை ஆடிக்கொண்டிருந்தது. இத்திருப்பலியே திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 11வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தின் நிறைவு நிகழ்வாகும். Boganda விளையாட்டு அரங்கத்திலிருந்து 5 கிலோ மீட்டர் தூரம் திறந்த காரில் M’Poko பன்னாட்டு விமான நிலையம் சென்று அனைவருக்கும் நன்றியும் வாழ்த்தும் சொல்லி, இத்திங்கள் மதியம் 12.30 மணியளவில் உரோமைக்குப் புறப்பட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். 6 மணி 15 நிமிடங்கள் கொண்ட இந்த விமானப் பயணத்தில் தன்னோடு பயணம் செய்த பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கும் பதில் சொன்னார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.