2015-11-29 14:57:00

மத்திய ஆப்ரிக்க குடியரசில் திருத்தந்தை பிரான்சிஸ்


நவ.29,2015. இஞ்ஞாயிறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 11வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தின் 5வது நாள். இன்று காலை 8 மணிக்கு, அதாவது இந்திய இலங்கை நேரம் இஞ்ஞாயிறு காலை 10.30 மணிக்கு, கம்ப்பாலா திருப்பீட தூதரகத்தில் நன்றியுடன் விடைபெற்று 45 கிலோ மீட்டர் தூரம் காரில் சென்று உகாண்டா நாட்டு Entebbe பன்னாட்டு விமான நிலையம் சென்று மத்திய ஆப்ரிக்க குடியரசுக்கு, A330 ஆல் இத்தாலியா விமானத்தில் புறப்பட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். உகாண்டா வான் பகுதியில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது, உகாண்டா அரசுத்தலைவர் யோவேரி முசெவேனி அவர்களுக்குத் தந்திச் செய்தியையும் அனுப்பினார். அந்நாட்டில் தனக்கு கிடைத்த இனிய வரவேற்புக்கு நன்றி தெரிவித்து, அந்நாட்டினர் அமைதி, மகிழ்வு மற்றும் வளமை பெற செபிப்பதாக அதில் எழுதியிருந்தார் திருத்தந்தை. காங்கோ சனநாயக குடியரசின் வான் பகுதியில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது, அந்நாட்டு அரசுத்தலைவர் ஜோசப் கபிலா அவர்களுக்கு அனுப்பிய தந்திச் செய்தியில், அந்நாட்டினர் அமைதி மற்றும் நல்வாழ்வைப் பெறச் செபிப்பதாகத் தெரிவித்திருந்தார். மேலும், மத்திய ஆப்ரிக்க குடியரசின் இடைக்கால அரசுத்தலைவர் Catherine Samba-Panza அவர்களுக்கும் தந்திச் செய்தி ஒன்றை அனுப்பினார் திருத்தந்தை பிரான்சிஸ். உங்களின் வான்பகுதியில் நுழையும் இவ்வேளையில் உங்கள் நாட்டினருக்கு இறையாசிர் பெருகச் செபிக்கிறேன் என்று அதில் குறிப்பிட்டிருந்தார் திருத்தந்தை. 2 மணி 45 நிமிடங்கள் பயணம் செய்து மத்திய ஆப்ரிக்க குடியரசின் தலைநகர் Bangui பன்னாட்டு விமான நிலையத்தைச் சென்றடைந்தார். அப்போது உள்ளூர் நேரம் இஞ்ஞாயிறு காலை பத்து மணியாகும். அமைதி மற்றும் நம்பிக்கையின் திருத்தூதுவராக மத்திய ஆப்ரிக்க குடியரசுக்கு வருகிறேன் என்று, இஞ்ஞாயிறன்று டுவிட்டரில் பதிவுசெய்து, இத்திருத்தூதுப் பயணத்தைத் தொடங்கியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, பாங்கி விமான நிலையத்தில், மத்திய ஆப்ரிக்க குடியரசின் இடைக்கால அரசுத்தலைவர் Catherine Samba-Panza, பான்கி பேராயர் Dieudonné Nzapalainga உட்பட பல முக்கிய தலைவர்கள் வரவேற்றனர். மஞ்சளும், வெண்மையும் கொண்ட வத்திக்கான் கொடிகளுடன் பல சிறார் அங்கிருந்தனர். இராணுவ அணிவகுப்பு மரியாதைக்குப் பின்னர் அங்கிருந்து 9 கிலோ மீட்டர் தூரம் திறந்த காரில் சென்று அரசுத்தலைவர் மாளிகையைச் சென்றடைந்தார். திருத்தந்தையின் கார் சென்ற சாலைகளில் இரு பக்கங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் ஆரவாரத்துடன் நின்று கொண்டிருந்தனர். கூட்டத்தை ஒழுங்கு செய்வதற்கு உதவியாக, நூற்றுக்கணக்கான சாரணர் படை மாணவர்களும் பணியில் இருந்தனர். அரசுத்தலைவர் மாளிகையில்  இடைக்கால அரசுத்தலைவரைத் தனியே சந்தித்துப் பேசிய திருத்தந்தை, அவரின் குடும்பத்தினரையும் சந்தித்தார். பரிசுகளும் பரிமாறப்பட்டன. அதன்பின்னர் அந்த மாளிகையில் அரசியல் தலைவர்கள் மற்றும் தூதரக அதிகாரிகளைச் சந்திப்பதற்குச் சென்றார் திருத்தந்தை. முதலில் இடைக்கால அரசுத்தலைவர் Catherine அவர்கள் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார். அதன் பின்னர் திருத்தந்தையும் உரையாற்றினார்.இந்நிகழ்வை முடித்து, இஞ்ஞாயிறு பகல் 12 மணியளவில், பாங்கி நகர் புனித சவேரியார் பங்கின் புலம்பெயர்ந்தோர் முகாமைப் பார்வையிடச் சென்றார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.