2015-11-29 14:35:00

கடுகு சிறுத்தாலும்:வீழ்த்தித்தான் வெல்ல வேண்டும் என்பதில்லை


அண்டை நாட்டு அரசரை அடிபணிய வைக்காமல் நான் ஓயமாட்டேன் என்பதுதான் அந்தச் சீனத்துப் பேரரசரின் அன்றாட முழக்கமாக இருந்தது. ஆனால் திடீரென ஒருநாள் அந்தச் சீனத்துப் பேரரசரும், அவர் சவால்விட்ட அவரின் அண்டை நாட்டு அரசரும், ஒரே தேரில் அமர்ந்து மகிழ்வோடு உரையாடிக் கொண்டு வீதியிலே உலா வந்து கொண்டிருந்தனர். இதைப் பார்த்த அந்தச் சீனப் பேரரசின் மக்களுக்கு நம்ப முடியவில்லை. அதனால் அவர்கள் பேரரசரின் மாளிகையில் கூடினார்கள். அரசே, அண்டை நாட்டு அரசரை அடிபணிய வைத்தபின்தான் வேறு வேலை என்றல்லவா சவால்விட்டு வந்தீர்கள், இப்போது ஏன் இப்படி? என்று கேட்டார்கள். அதற்கு அந்தச் சீனத்துப் பேரரசர் புன்னகைத்துக்கொண்டே சொன்னார்:ஆமாம். அடிபணிய வைத்துவிட்டேனே, நயமாகிப் பேசி அந்த அரசரை என் நண்பனாக்கி விட்டேன். நான் என்ன சொன்னாலும் அதன்படி கேட்கிற மனநிலையில்தான் அவர் இப்போது இருக்கிறார் என்று. உண்மைதான். ஒருவரை வீழ்த்தித்தான் வெல்ல வேண்டும் என்பதில்லை, ஒருவரை வசப்படுத்தியும் வெல்லலாம் அல்லவா?

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.