2015-11-29 13:34:00

ஏழைகளை மறக்காதீர்கள், ஏழைகளை மறக்காதீர்கள்! - திருத்தந்தை


நவ.29,2015. Nalukolongo பிறரன்பு இல்லத்தில் திருத்தந்தை வழங்கிய உரை:

அன்பு நண்பர்களே, கர்தினால் Nsubuga அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த பிறரன்பு இல்லத்தைப் பார்வையிட நான் மிகவும் விரும்பினேன். அடிமைத்தனத்திலிருந்து குழந்தைகளை மீட்பது, மற்றும், பெண்களுக்கு மறைக்கல்வி புகட்டுவது போன்ற பணிகளை இந்த இல்லம் துவக்கத்திலிருந்து ஆற்றி வருகிறது. நல்ல சமாரியர் அருள் சகோதரிகள் இந்த உன்னத பாரம்பரியத்தை தற்போது தொடர்ந்து வருகின்றனர். வறியோர், நோயுற்றோர், குற்றம் சுமத்தப்பட்டோர், கைவிடப்பட்டோர் நடுவில் தான் என்றும் இருப்பதாகக் கூறிய இயேசு, இங்கு இருக்கிறார்.

இன்று, இவ்வில்லத்திலிருந்து, உகாண்டாவில் உள்ள பங்குத்தளங்கள், சமுதாயங்கள் அனைத்திற்கும், ஆப்ரிக்கா முழுமைக்கும் நான் ஒரு விண்ணப்பத்தை விடுக்கிறேன் - ஏழைகளை மறக்காதீர்கள், ஏழைகளை மறக்காதீர்கள்! சமுதாயத்தின் விளிம்புகளுக்குச் சென்று, அங்கு தேவையிலும் வேதனையிலும் இருப்போரிடம் கிறிஸ்துவைக் கண்டுபிடிக்க, நற்செய்தி நம்மைப் பணிக்கிறது. இதன் அடிப்படையில்தான் நாம் தீர்ப்பு பெறுவோம் என்று ஆண்டவர் கூறியுள்ளார்.

தூக்கியெறியும் கலாச்சாரம், சுயநலம், அக்கறையின்மை ஆகியவை வளர்ந்துள்ள இன்றைய உலகில், வயது முதிர்ந்தோர், கருவில் இருக்கும் குழந்தைகள், இளையோர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிறிஸ்தவர்கள் என்ற முறையில், இக்கொடுமைகள் நடப்பதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. நமது குடும்பங்கள், இறைவனின் பொறுமையான, இரக்கம் மிகுந்த அன்புக்குச் சாட்சிகளாக இருக்க வேண்டும். நமது பங்குத் தளங்கள், வறியோரை வரவேற்க வேண்டும். பொருள்களைக் காட்டிலும் மக்கள் மதிப்பு பெற்றவர்கள் என்பதை இவ்விதம் நாம் உலகிற்கு எடுத்துரைக்க முடியும்.

மிகச் சிறியோரான நம் சகோதர, சகோதரிகளுக்கு நாம் ஆற்றும் சிறு, சிறு செயல்கள் வழியே கிறிஸ்துவுக்கு நாம் மரியாதை செலுத்தமுடியும்.

உங்கள் அனைவருக்காகவும் நான் எப்போதும் செபிப்பேன். எனக்காக செபியுங்கள்.

உங்கள் அனைவரையும் மரியன்னையின் பாதுகாவலில் ஒப்படைத்து, உங்களுக்கு என் ஆசீரை வழங்குகிறேன்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.