2015-11-29 14:41:00

எதிர்மறை அனுபவங்களை நேர்மறை அனுபவங்களாக மாற்றுங்கள்


நவ.29,2015. உகாண்டா, மறைசாட்சிகளின் இரத்தத்தால் நிறைந்துள்ள ஓர் ஆப்ரிக்க நாடு. இந்நாட்டில் ஆங்லிக்கன் மற்றும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் என 45 பேர், கிறிஸ்தவ விசுவாசத்தைக் கைவிட மறுத்ததற்காக 19ம் நூற்றாண்டில் உயிரோடு எரிக்கப்பட்டும், அம்பால் எறியப்பட்டும் என, பலவகை கொடூர சித்ரவதைகளால் கொல்லப்பட்டனர். இச்சனிக்கிழமையன்று தனது டுவிட்டர் செய்தியாக, “உகாண்டா, கிறிஸ்தவ மறைசாட்சிகளின் சான்றை அனுபவித்துள்ளது. அச்சமின்றி நற்செய்தியின் மகிழ்வை பரப்புவதற்கு இம்மறைசாட்சிகள் உதவுவார்களாக” என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டிருந்தார். மேலும், அதேநாளில் நிறைவேற்றிய திருப்பலியில், இந்த மறைசாட்சிகளின் வாழ்வைப் பின்பற்றி, தொடர்ந்து சாட்சிய வாழ்வு வாழுமாறு உகாண்டா மக்களை கேட்டுக்கொண்டார். கம்ப்பாலா விமானத்தளப் பகுதியில் அந்நாட்டின் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட இளையோரை இச்சனிக்கிழமை மாலையில் சந்தித்த திருத்தந்தையிடம், இவ்விளையோர் பிரதிநிதிகளாக, எம்மானுவேல், வின்னி ஆகிய இரு இளையோர் சில சவாலான கேள்விகளை முன்வைத்தனர். எம்மானுவேல், கடத்தப்பட்டு, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு சித்ரவதைக்கு உள்ளாகியவர். வின்னி, எய்ட்ஸ் நோயோடு பிறந்தவர். இவ்விருவரின் வாழ்வு பற்றிக் கேட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எம்மானுவேலும், வின்னியும் தங்கள் வாழ்வில் பல்வேறு எதிர்மறை அனுபவங்களை சந்தித்தவர்கள். எதிர்மறை அனுபவங்கள், வாழ்வில் சில நோக்கங்களுக்குப் பயன்படலாம். வாழ்வு பெரிய புதுமையானது என்பதை இயேசு புரிய வைக்கிறார். இயேசு மற்றும் அவரின் அருளின் துணையுடன் எதிர்மறை அனுபவங்களை நேர்மறை அனுபவங்களாக மாற்றுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.   ஊழல், வாழ்வுக்கு இட்டுச் செல்லும் பாதை அல்ல, ஆனால் அது மரணத்திற்கு இட்டுச் செல்வது என்றும், ஊழல்வாதிகள் அமைதியில் வாழ்வதில்லை என்றும், நீங்கள் பல்வேறு இனங்களைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், நீங்கள் ஒருவர் ஒருவரோடு நன்றாகப் பேசினால், ஒருவர் ஒருவரை சகோதர, சகோதரிகளாக ஏற்க முடியும் என்றும் கூறினார். இச்சனிக்கிழமை மாலையில் இளையோர் சந்திப்பை முடித்து, கம்ப்பாலா விமானத்தளத்திற்கு பத்து கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்ற Nalukolongo பிறரன்பு இல்லத்திற்குச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.