2015-11-29 14:47:00

Nalukolongo பிறரன்பு இல்லத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்


நவ.29,2015. இச்சனிக்கிழமை மாலையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சென்ற Nalukolongo பிறரன்பு இல்லம் 1978ம் ஆண்டில், உகாண்டா நாட்டின் முதல் கர்தினால் Emmanuel Nsubuga அவர்களால் உருவாக்கப்பட்டது. கர்தினால் Nsubuga அவர்கள், உகாண்டாவின் முன்னாள் சர்வாதிகாரி இடி அமீன் ஆட்சியில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை வெளிப்படையாய்க் கண்டித்தவர் மற்றும் 1969ம் ஆண்டில் சுதந்திரம் அடைந்திருந்த புதிய நாடான உகாண்டாவுக்கு, திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள் மூன்று நாள் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ள உதவியவர். இந்தப் பிறரன்பு இல்லத்தில், 11 வயது சிறுவன் முதல் 102 வயது முதியவர் உட்பட பல்வேறு வயதுடைய மற்றும் பல்வேறு மதங்களைச் சேர்ந்த ஏறக்குறைய நூறு பேர் வாழ்கின்றனர். இவர்கள், உகாண்டா தவிர, கென்யா, டான்சானியா, ருவாண்டா, புருண்டி ஆகிய அண்டை நாடுகளையும் சார்ந்தவர்கள். ஏழைகளான இவர்களில் எய்ட்ஸ் நோயாளிகளும், மாற்றுத்திறனாளிகளும் உள்ளனர். இம்மக்களையும், இவ்வில்லப் பணியாளர்களையும் சந்திப்பதற்கு முன்னர், ஆப்ரிக்க அன்னை மரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள அவ்வில்லச் சிற்றாலயத்திலும், பின்னர், அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள கர்தினால் Nsubuga அவர்களின் கல்லறையிலும் சிறிது நேரம் செபித்தார் திருத்தந்தை. பின்னர் அங்கிருந்தவர்களைச் சந்தித்து  உரையாற்றிய திருத்தந்தை, அவ்வில்லத்தை நடத்தும் நல்ல சமாரியர் சபை சகோதரிகளுக்கு முதலில் நன்றி சொன்னார். ஆப்ரிக்காவிலுள்ள அனைத்துப் பங்குகளும், சமூகங்களும் ஏழைகளை மறக்க வேண்டாம், ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று துன்புறும் மற்றும் தேவையில் இருப்போர் மத்தியில் கிறிஸ்துவைக் காணுமாறு கேட்டுக்கொண்டார். Nalukolongo பிறரன்பு இல்லத்தில் திருத்தந்தைக்கு இனிய வரவேற்பும் கொடுக்கப்பட்டது. நம் சமூகங்களில் வயதானவர்கள் புறக்கணிக்கப்படுவதும், இளையோர் மனித வர்த்தகத்தில் நவீன அடிமைத்தனத்தில் பயன்படுத்தப்படுவதும் எவ்வளவு கவலை தருகிறது என்றுரைத்து இவ்வில்லத்தினருக்குத் தனது ஆசிரை வழங்கி ஊக்கப்படுத்தினார் திருத்தந்தை. இந்நிகழ்வை முடித்து கம்ப்பாலா பேராயர் இல்லம் சென்று உகாண்டா நாட்டு ஆயர்களைச் சந்தித்தார். பின்னர் உள்ளூர் நேரம் இரவு 7 மணிக்கு, கம்ப்பாலா இயேசுவின் திரு இதய பேராலயத்தில் அந்நாட்டின் அருள்பணியாளர்கள், இருபால் துறவியர் மற்றும் குருத்துவ மாணவர்களைச் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.