2015-11-28 13:40:00

மறைகல்வி ஆசிரியர்களுக்கு திருத்தந்தை வழங்கிய உரை


நவ.28,2015. அன்பு மறைக்கல்வி ஆசிரியர்களே, ஏனைய ஆசிரியர்களே, அன்பு நண்பர்களே, நமது ஆண்டவரும், ஆசிரியருமான இயேசு கிறிஸ்துவின் பெயரால் உங்களை வாழ்த்துகிறேன்.

"ஆசிரியர்!" என்ன அழகான பெயர் இது! நற்செய்தியை அறிவிப்பதற்காக அருள்பொழிவு பெறும் ஆயர்கள், அருள் பணியாளர்கள், தியாக்கோன்கள் ஆகியோருடன், மறைக்கல்வி ஆசிரியர்களான நீங்களும், உங்கள் மந்தையைக் காப்பதில் அற்புதமான பங்கு வகிக்கிறீர்கள்.

இந்தப் பணியைச் செய்வதற்கு, நீங்களும், உங்கள் குடும்பங்களும் செய்துவரும் தியாகங்களை நான் பாராட்டுகிறேன். குழந்தைகளுக்கும், இளையோருக்கும் செபிக்கக் கற்றுத்தரும் உங்கள் பணிக்காக குறிப்பாக நன்றி கூறுகிறேன்.

நீங்கள் ஆற்றும் பணி எளிதானதல்ல; குறிப்பாக, ஆள் பலம், பொருள் பலம் ஆகியவை குறைவாக இருக்கும்போது, நீங்கள் மனம் தளர்ந்துபோக வாய்ப்புண்டு. இந்தக் கடினமானச் சூழல்களிலும் நீங்கள் தொடர்ந்து முயற்சி செய்ய உங்களை நான் ஊக்குவிக்கிறேன். நம் மத்தியில் வாழும் தூய ஆவியார் உங்களுக்கு ஒளியும், சக்தியும் தருவார்! ஓர் ஆசிரியர் என்ற முறையில் மட்டுமல்ல, சாட்சிய வாழ்வு வாழ்பவர் என்ற முறையிலும், நீங்கள் இளையோர் மனங்களில் இடம் பிடித்துள்ளீர்கள்.

மறைசாட்சிகளின் சாட்சிய வாழ்வால், உகாண்டா சமுதாயம் உறுதி அடைந்தது. நாம் நிற்கும் இந்த முனியோன்யோவில் (Munyonyo), அரசன் முவாங்கா (Mwanga) கிறிஸ்துவைப் பின்பற்றுவோரை வேரோடு அழிக்க நினைத்தார். ஆனால், இயேசுவைக் கொல்ல ஏரோது மன்னனால் முடியாமல் போனதுபோல், கிறிஸ்தவர்களை அழிக்க, மன்னன் முவாங்காவால் முடியாமல் போனது.

புனித ஆண்ட்ரு காக்வா (Andrew Kaggwa) மற்றும் அவரது தோழர்களின் துணிவான சாட்சியத்தைக் கண்ட உகாண்டா கிறிஸ்தவர்கள், கிறிஸ்துவின் உறுதிமொழிகளில் இன்னும் ஆழமாக நம்பிக்கை கொண்டனர்.

மறைக்கல்வி ஆசிரியர்களின் பாதுகாவலரான புனித ஆண்ட்ருவும், ஏனைய உகாண்டா மறைசாட்சிகளும் உங்களை நல்லாசிரியர்களாக வழிநடத்துவார்களாக!

இறைவன் உங்களை ஆசீர்வதிப்பாராக!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.