2015-11-28 12:51:00

கடுகு சிறுத்தாலும் – இறைவனின் ஞானத்தை அளப்பவர் யார்?


ஒரு நாள் நீண்ட நேரம் நடந்து களைத்த முல்லா நசுருதீன் அவர்கள் வழியில் இருந்த ஆலமரத்தடியில் அக்காடா என்று நீட்டிப் படுத்தார். அது நண்பகல் வேளை. வெயில் கொளுத்திக்கொண்டிருந்தது. மேலே பார்த்தார் முல்லா. மரம் முழுவதும் சிவப்புநிற சிறிய ஆலம்பழங்கள். பிறகு, சற்று தூரத்தில் பார்வையை உலவ விட்டபோது மெலிதான பூசணித் தண்டுகளில் பெரிய பூசணிக்காய்கள் காய்த்துக்கிடப்பது முல்லா அவர்களின் கண்ணில் பட்டது. சிந்தனையில் மூழ்கினார் முல்லா. பரந்து விரிந்த இந்த அரசாளும் மரத்தில் சிறிய பழங்கள். ஆனால் அந்த நோஞ்சான் கொடியில் பெரிய காய்கள். இறைவனின் படைப்புக்களே விநோதம்தான் என்று எண்ணி வியந்து கொண்டிருந்தபோது ஓர் ஆலம்பழம் முல்லா அவர்களின் தலையில் உதிர்ந்து வந்து விழுந்தது. ஞானம் கிடைத்ததுபோல் துள்ளி எழுந்தார் முல்லா. ஆஹா.. இறைவன் ஏன் இப்படி படைத்திருக்கிறார் என்பதைப் புரிய வைத்துவிட்டார். இல்லாவிட்டால் என் தலையல்லவா நொறுங்கிப் போயிருக்கும்?... என்று சொல்லிக்கொண்டார் முல்லா.    இறைவனின் ஞானத்தை அளப்பவர் யார்? அவருக்கு அறிவுரையும், ஆலோசனையும் சொல்லக்கூடியவர் யார்? 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.