2015-11-28 13:57:00

உகாண்டா மறைசாட்சிகள் திருத்தலத்தில் திருத்தந்தையின் மறையுரை


நவ.28,2015. அன்பு சகோதர, சகோதரிகளே, கிறிஸ்துவின் மீதும் அவரது திருஅவை மீதும்  கொண்டிருந்த அன்பிற்காக தங்களையே தியாகம் செய்த உகாண்டா நாட்டு மறைசாட்சிகளுக்காக நன்றி சொல்வோம்.

கத்தோலிக்கரும், ஆங்கிலிக்கன் சபையினரும் இரத்தம் சிந்தி, மறைசாட்சிகளாக இறந்தது, கிறிஸ்தவ ஒன்றிப்பின் இரத்தம் என்பதையும் நமக்கு நினைவுறுத்துகிறது. இவர்களில் பலர் மிக இளம் வயதிலேயே தங்கள் உயிரைத் தியாகம் செய்துள்ளனர்.

நாமும் தூய ஆவியாரைக் கொடையாகப் பெற்றுள்ளோம். அந்தக் கொடையை மற்றவர்களுக்குப் பகிர்ந்தளிக்கவேண்டும். புனிதர்களான ஜோசப் ம்காசா (Joseph Mkasa) மற்றும் சார்ல்ஸ் லுவாங்கா (Charles Lwanga) ஆகிய இருவரும் திருமுழுக்கு பெற்றதும், தாங்கள் பெற்ற கொடையைப் பிறருடன் பகிர்ந்துகொண்டனர். அவர்களின் எடுத்துக்காட்டான வாழ்வு, இன்று உலகில் பலருக்கு உந்து சக்தியாக அமைந்துள்ளது.

தூய ஆவியாரின் கொடைகள் நம்முள்ளங்களில் கொழுந்துவிட்டு எரிந்தால், அதனை மற்றவர்களுடன் பகிரும் மறைபரப்புப்பணியாளர்களாக மாறுவோம். நமது குடும்பத்தினர், நண்பர் என்று மட்டுமல்லாமல், குறிப்பாக, நம்மிடம் பகைமை காட்டுவோருடனும் இந்தக் கொடைகளை நம்மால் பகிர்ந்துகொள்ள முடியும்.

உலக இன்பங்களும், அதிகாரமும், நிலைத்து நிற்கும் மகிழ்வையும், அமைதியையும் நமக்குத் தருவதில்லை என்பதை உகாண்டா மறைசாட்சிகள் நமக்குச் சொல்லித் தருகின்றனர். இறைவனில் நம்பிக்கை கொள்வதும், அடுத்தவருக்கு நன்மை செய்வதில் உண்மையான அக்கறை கொள்வதுமே நமக்கு நீடித்த மகிழ்வைத் தரும். நீதியான சமுதாயத்தை உருவாக்குதல், நமது பொதுவான இல்லமான இவ்வுலகின் இயற்கையைப் பாதுகாத்தல் ஆகியவை நம் வாழ்வுக்கு ஒரு குறிக்கோளையும், பிடிப்பையும் தரும்.

அன்பு சகோதர, சகோதரிகளே, இத்தகையப் பாரம்பரியத்தை உகாண்டா மறைசாட்சிகளிடமிருந்து நீங்கள் பெற்றுக் கொண்டீர்கள். இந்தப்  பாரம்பரியச் சொத்தை, ஒரு அருங்காட்சியகப் பொருளாகப் பாதுகாத்து, அவ்வப்போது கண்டு பெருமைப் படுவதால் பயனில்லை. அவர்கள் விட்டுச்சென்ற இந்தப்  பாரம்பரியத்தை நடைமுறை வாழ்வாக்க வேண்டியது உங்கள் கடமை.

உகாண்டா மறைசாட்சிகளும், மரியன்னையும் உங்களுக்காகப் பரிந்து பேசுவார்களாக! தூய ஆவியானவர், இறைவனின் அன்பை உங்கள் உள்ளங்களில் பற்றியெறியச் செய்வாராக!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.