2015-11-28 13:21:00

உகாண்டா அரசு வரவேற்பு நிகழ்வில் திருத்தந்தையின் உரை


நவ.28,2015. அரசுத் தலைவரே, அதிகாரிகளே, பன்னாட்டுத் தூதர்களே, சகோதர ஆயர்களே, மாண்புமிகு பெரியோரே, தாய்மாரே, உகாண்டா நாட்டிற்கு வந்திருப்பதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி. திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், உகாண்டா மறைசாட்சிகளை புனிதர்களாக உயர்த்திய நிகழ்வின் 50ம் ஆண்டைக் கொண்டாடுவதே, என் பயணத்தின் முக்கிய நோக்கம்.

'கடவுளுக்கும், என் நாட்டிற்கும்' என்ற இந்நாட்டின் விருதுவாக்கை, உகாண்டா மறைசாட்சிகள் தங்கள் வாழ்வின் இலட்சியமாகக் கொண்டிருந்தனர். நம்மிடையே நிலவும் வேறுபாடுகளைக் கடந்து, அனைவரும் உண்மையைத் தேடவும், நீதிக்கும், ஒப்புரவிற்கும் உழைக்கவும் இந்த மறைசாட்சிகள் நமக்கு நினைவுறுத்துகின்றனர்.

உலகத்தின் கவனத்தை ஆப்ரிக்காவின் மீது திருப்புவதும், என் பயணத்தின் ஒரு நோக்கம். ஆப்ரிக்கக் கண்டத்தை ஒரு நம்பிக்கையின் கண்டமாக இவ்வுலகம் காண்கிறது. உகாண்டா நாடு இயற்கை வளங்களால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. இந்த வளங்களை தகுந்த வகையில் பராமரிக்கும் சவால் உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த நாடு தன் மக்களால் ஆசீர் பெற்றுள்ளது. நான் இந்த நாட்டு இளையோரைச் சந்திப்பதில் ஆர்வம் கொண்டுள்ளேன். வருங்காலத்தைக் குறித்த நம்பிக்கையையும், பொறுப்பையும் இளையோருக்கு வழங்குவது முக்கியம்.

வயது முதிர்ந்தோர் வழியே நீங்கள் பெறும் ஆசீரை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். அனுபவத்தின் வழியே அவர்கள் பெற்றுள்ள அறிவுத்திறன் இந்த நாட்டை நல்வழியில் நடத்தும்.

நாம் வாழும் இன்றைய உலகம், போர், வன்முறை, அநீதி ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. முன் எப்போதும் இல்லாத அளவு, மக்கள், நாடுவிட்டு நாடு துரத்தப்படுகின்றனர். இவர்களுக்கு நாம் என்ன செய்கிறோம் என்பதே, நம் மனிதத்தைத் தீர்மானிக்கும் அளவுகோலாக அமையும்.

புலம்பெயர்ந்தோரை வரவேற்பதில் உகாண்டா மிகச் சிறந்த பரிவைக் காட்டியுள்ளது. அவர்களை வரவேற்பதோடு நின்றுவிடாமல், மதிப்பிற்குரிய தொழில் வாய்ப்புக்களை உருவாக்கி, அவர்கள் தங்கள் வாழ்வை மீண்டும் கட்டியெழுப்ப உங்கள் நாடு ஆவன செய்துள்ளது.

நான் மேற்கொண்டுள்ள இந்தக் குறுகியப் பயணத்தில், வறியோருக்கும், நோயுற்றோருக்கும் நீங்கள் செய்துவரும் பணிகளை ஊக்குவிப்பேன் என்று நம்புகிறேன்.

உங்கள் அனைவரையும் இறைவன் ஆசீர்வதிப்பாராக!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.