2015-11-28 13:20:00

Namugongo மறைசாட்சிகள் திருத்தலத்தில் திருத்தந்தை


நவ.28,2015. இச்சனிக்கிழமை உகாண்டா நாட்டுக்கான திருத்தூதுப் பயணத்தின் முக்கியமான நாள். உகாண்டாவில் 1885க்கும் 1887ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில்  22 கத்தோலிக்க மற்றும் 23 ஆங்லிக்கன் மறைசாட்சிகள் கொடூரமாய் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். இந்நாளில் உள்ளூர் நேரம் காலை 8.30 மணிக்கு Namugongo ஆங்லிக்கன் மறைசாட்சிகள் திருத்தலம் சென்றார் திருத்தந்தை. அங்கு செபித்த பின்னர், அங்கிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்ற Namugongo கத்தோலிக்க தேசிய மறைசாட்சிகள் திருத்தலம் சென்றார் திருத்தந்தை. கிறிஸ்தவ விசுவாசத்தை மறுதலிக்க மறுத்ததற்காக கொல்லப்பட்ட 22 கத்தோலிக்கரில் 13 பேர் உயிரோடு எரித்தும், இருவர் அம்பு எறியப்பட்டும் இறந்தனர். இந்தப் புகழ்பெற்ற திருத்தலத்திற்கு முதலில் சென்று செபித்த திருத்தந்தை, அவ்வளாகத்தில் கூடியிருந்த இலட்சக்கணக்கான மக்கள் மத்தியில் திறந்த காரில் வலம் வந்தார். இவ்வெள்ளிக்கிழமையே விசுவாசிகள் அவ்விடத்திற்குப் பாய்களையும் துணிகளையும் விரித்து அமர்ந்திருந்தனர். திருத்தந்தையைப் பார்ப்பதற்காக, பலர் இருபது மணிநேரத்திற்கு முன்னதாகவே இங்கு வந்து விட்டனர். உகாண்டா அரசுத்தலைவர், தென் சூடான் அரசுத்தலைவர், இம்மறைசாட்சிகளைக் கொல்வதற்கு ஆணையிட்ட Buganda அரசர் 2ம் Mwangaவின் வழிவந்தவர்கள் உட்பட பல தலைவர்களும், பிற கிறிஸ்தவ மற்றும் பிற சமயப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். உகாண்டாவில் 47 விழுக்காட்டினர் கத்தோலிக்கர். இருபது இலட்சத்துக்கு மேற்பட்ட விசுவாசிகள் கலந்துகொண்ட இத்திருப்பலியில் முதலில் Kampala பேராயர் Cyprien Kizito Lwanga அவர்கள் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார். பின்னர் திருத்தந்தை ஆற்றிய மறையுரையில், உகாண்டா மறைசாட்சிகளின் மறைப்பணி ஆர்வத்தைப் பின்பற்றி, உகாண்டா மக்கள், தங்கள் நாட்டிலும், வெளி நாடுகளிலும் விசுவாசத்தைப் பரப்புமாறு கேட்டுக்கொண்டார். 1964ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி இம்மறைசாட்சிகள் புனிதர்கள் என அறிவிக்கப்பட்டனர். இதன் பொன் விழா தற்போது சிறப்பிக்கப்படுகின்றது. மறைசாட்சிகள் நிநைவு திருப்பலி என்பதால் எங்கும் சிவப்பு மயம். வெண்மை நிற ஆடையணிந்த விசுவாசிகள் பலரையும் பார்க்க முடிந்தது.

இத்திருப்பலியை நிறைவு செய்து, அங்கிருந்து 12 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்ற கம்ப்பாலா திருப்பீட தூதரகம் சென்று மதிய உணவருந்தி சிறிது நேரம் ஓய்வெடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். மாலை 3.30 மணிக்கு உகாண்டா இளையோரைச் சந்தித்தார் திருத்தந்தை. இரு இளையோரின் சாட்சியத்தைத் தொடர்ந்து திருத்தந்தையின் உரையும் இடம்பெற்றது.

பின்னர் Nalukolongo பிறரன்பு இல்லம் செல்தல், உகாண்டா ஆயர்கள் சந்திப்பு, அருள்பணியாளர்கள், இருபால் துறவியர், குருத்துவ மாணவர் சந்திப்பு ஆகியவை இச்சனிக்கிழமை தின நிகழ்வுகளாகத் திட்டமிடப்பட்டுள்ளன.

உகாண்டாவில் இத்திருத்தூதுப் பயணத்தை நிறைவு செய்து இஞ்ஞாயிறு காலை 9 மணியளவில் மத்திய ஆப்ரிக்க குடியரசு செல்வார் திருத்தந்தை பிரான்சிஸ். அந்நாட்டிலிருந்து வருகிற திங்கள் மாலை 6.45 மணியளவில் உரோம் வந்து சேர்வார். இத்துடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 11வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தை நிறைவுக்கு வரும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.