2015-11-27 16:36:00

நைரோபியில் Kangemi சேரியைப் பார்வையிட்டார் திருத்தந்தை


நவ.27,2015. இவ்வெள்ளி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 11வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தின் மூன்றாவது நாள். கென்யத் தலைநகர் நைரோபியிலுள்ள திருப்பீடத் தூதரகத்திலுள்ள  சிற்றாலயத்தில் இவ்வெள்ளி காலை உள்ளூர் நேரம் காலை 7 மணிக்கு திருப்பலி நிறைவேற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ். பின்னர் எட்டு மணிக்கு, அங்கிருந்து ஐந்து கிலோ மீட்டர் தூரத்திலுள்ள Kangemi சேரிக்குத் திறந்த காரில் புறப்பட்டார். கிழக்கு ஆப்ரிக்காவின் பெரிய நகரமான நைரோபியின் ஆறு விழுக்காட்டு நிலப்பகுதியில், அந்நகரின் அறுபது விழுக்காட்டு மக்கள், அதாவது ஏறக்குறைய 25 இலட்சம் மக்கள், அந்நகரிலுள்ள 11 சேரிகளில் வாழ்கின்றனர். இந்த 11 சேரிகளில் Kibera சேரி, உலகிலே பெரிய மற்றும் அதிகமான மக்கள் வாழும் சேரியாகும். திருத்தந்தை இவ்வெள்ளி காலையில் சென்ற Kangemi சேரி, மற்ற சேரிகளைவிட ஆபத்து குறைந்த இடம் மற்றும் கடும் வறுமை நிலையும் குறைவாக உள்ள இடமாகும். ஆயினும், இங்கும் ஏறக்குறைய ஐம்பதாயிரம் மக்கள் எவ்வித அடிப்படை நலவாழ்வு வசதிகளின்றி வாழ்கின்றனர். இங்கு ஒவ்வொரு குடும்பமும் வாழ்கின்ற மண் குடிசைகள் தகரக் கூரைகளைக் கொண்டுள்ளன. இச்சேரியிலுள்ள பங்குத்தளத்தில் இயேசு சபையினர் மேய்ப்புப்பணியாற்றுகின்றனர். திருத்தந்தையின் வருகைக்காக இந்தச் சேரிக்குச் செல்லும் பாதை சீரமைக்கப்பட்டிருந்ததையும் விடுத்து, இச்சேரிக்கு திருத்தந்தையின் கார், அழுக்கான மண் பாதையில் சற்று ஆடி ஆடியேச் சென்றது. பெருந்திரளான சேரி மக்கள் பாதையின் இரு பக்கமும் நின்று கரவொலி எழுப்பி மிகுந்த ஆரவாரத்துடன் வரவேற்றனர். நைரோபியின் அனைத்துச் சேரிகளிலிருந்தும் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, Kangemi சேரியிலுள்ள தொழிலாளரான தூய யோசேப்பு ஆலயத்தில் கூடியிருந்தனர். வயதானவர்களும், மாற்றுத்திறனாளிகளும் சக்கர நாற்காலியில் முன்வரிசையில் அமர்ந்திருந்தனர். இவர்களை ஒவ்வொருவராக கைகுலுக்கி வாழ்த்தினார் திருத்தந்தை. ஒரு சமயம் வன்முறையால் பாதிக்கப்பட்ட   முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான முஸ்லிம் ஒருவரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டார். முதலில் Kangemi பங்குத் தந்தை அருள்பணி ஜோசப் அவர்கள் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார். சேரி மக்களின் பாடல்கள் தொடர்ந்தன. பின்னர், அருள்சகோதரி மேரி, சேரியின் நிலைமை பற்றி எடுத்துச் சொன்னார். இங்கு விருந்தினர் புத்தகத்தில் கையெழுத்திட்ட திருத்தந்தை, உரை ஒன்றும் ஆற்றினார். அச்சேரி மக்களிடம், நம் ஆண்டவர் ஒருபோதும் அவர்களை மறப்பதில்லை என்ற நம்பிக்கைச் செய்தியை வழங்கினார் திருத்தந்தை. இச்சேரியின் நிலைமையைப் பார்த்த திருத்தந்தை கண் கலங்கினார் என்று அங்குப் பணியாற்றும் அருள்சகோதரி ஒருவர் தெரிவித்துள்ளார். Kangemi சேரி மக்களை ஆசிர்வதித்து, அங்கிருந்து 22 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்ற, நைரோபி நகரின் Kasarani விளையாட்டு அரங்கம் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.