2015-11-27 15:56:00

நைரோபி ஐ.நா.அவையில் திருத்தந்தை ஆற்றிய உரை


நவ.27,2015. நைரோபி ஐ.நா.அவை அலுவலகத்தின் இயக்குனர் அவர்களே, ஏனைய அதிகாரிகளே, பணியாளர்களே, நான் இந்த அரங்கத்திற்கு வருவதற்கு முன், இம்மையத்தின் பூங்காவில் ஒரு மரக்கன்றை நடும்படி கேட்டுகொள்ளப்பட்டேன். மரம் நடுதல் என்ற பொருளுள்ள அடையாள செயல் பல கலாச்சாரங்களில் உள்ளது.

காடுகளை அழித்தல், பாலைவனங்களை உருவாக்குதல் போன்ற தீமைகளுக்கு எதிராகப் போராடுவதற்கு, இந்த அடையாளச் செயல் ஓர் அழைப்பாகச் செயல்படுகிறது. உலக வளங்களில் ஒன்றான, காங்கோ பள்ளத்தாக்கினை தன்னகத்தே கொண்டுள்ள ஆப்ரிக்கக் கண்டத்தில், இயற்கையைப் பேணும் பொறுப்பாளர்கள் நாம் என்பதை நினைவுறுத்தும் செயல் இது. இன்று நாம் சந்திக்கும் அனைத்து அநீதிகளையும், சீரழிவுகளையும் மாற்றியமைக்க, ஒரு உந்துசக்தியாக, மரம் நடுதல் என்ற இந்தச் செயல் உள்ளது.

இன்னும் சில நாட்களில், பாரிஸ் நகரில், காலநிலை மாற்ற உலக உச்சி மாநாடு .நடைபெறவிருக்கிறது. இந்த மாநாட்டில், ஒரு சில தனிப்பட்ட ஆசைகளால், பொது நலன் திசை திருப்பப்பட்டால், அது மிக வேதனையாக, ஏன், சொல்லப்போனால், பெரும் அழிவாக அமையும். இத்தருணத்தில், சுற்றுச்சூழலை அழிப்பது, அல்லது, அதைக் காப்பாற்றி, முன்னேற்றுவது என்ற இரு நிலைகள், நம் முடிவுக்காகக் காத்திருக்கின்றன.

COP 21 என்ற பெயரில் துவங்கவிருக்கும் காலநிலை உலக உச்சி மாநாட்டில், படிம எரிபொருளின் மிகக் குறைவானப் பயன்பாடு குறித்தும், கார்பன் வெளியேற்றம் குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. சமத்துவம், உடன்பிறந்தோர் உணர்வு, நீதி, என்ற நியதிகளின் அடிப்படையில், COP 21 உச்சி மாநாடு தீர்மானங்களை நிறைவேற்றும் என்று நம்புகிறேன்.

இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் அரசியல் தலைவர்கள், வர்த்தகர்கள், பொதுத்துறை பிரதிநிதிகள் நடுவே நேர்மையான, திறந்த மனம் கொண்ட உரையாடல் இடம்பெற வேண்டியது அவசியம். அரசியல், அறிவியல், வர்த்தகம் ஆகிய துறைகள் நல்லெண்ணத்துடன் இணைந்தால் நல்லவை நடக்கும் என்பதற்கு எத்தனையோ எடுத்துக்காட்டுகள் உள்ளன.

21ம் நூற்றாண்டின் துவக்கத்தில் வாழும் நம் தலைமுறை, தன் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டால், வருங்காலத் தலைமுறையினர் நம்மை பொறுப்புள்ளவர்கள் என்று நினைவுகூர்வர். இத்தகையச் சூழல் உருவாகவேண்டுமெனில், நாம் பொருளாதரத்தையும், அரசியலையும் மக்களின் பணிக்கென அர்ப்பணிக்கவேண்டும். நாம் விழையும் மாற்றங்கள் உருவாக, கல்வியிலும், இளையோரை பயிற்றுவிப்பதிலும் கவனம் செலுத்தவேண்டும். ஒரு புதிய கலாச்சாரத்தை உருவாக்கவேண்டும்.

இலாபம், மற்றும் பொருள்களைக் குவித்தல் என்ற பொய் தெய்வங்களுக்கு, மக்கள் பலியாகிவருவதைக் காண்கிறோம். பொருள்களை வீணடிக்க மனமிருக்கும் இவ்வுலகில் பகிர்வதற்கு மனம் இல்லாமல், நம்மிடையே, "உலகமயமாக்கப்பட்ட அக்கறையின்மை" வளர்ந்துள்ளது. சுயநலம், பேராசை என்ற தீமைகளின் எதிரொலியாக, புலம் பெயர்ந்தோரின் எண்ணிக்கை கூடியுள்ளது; புதிய அடிமைத்தனமான மனித வர்த்தகம் அதிகரித்துள்ளது.

இயற்கையின் செல்வம், அழகு இவற்றை உலகிற்கு வெளிப்படுத்தும் ஆப்ரிக்கா, படைத்தவரைப் புகழ்வதற்கு தூண்டுதலாக அமைந்துள்ளது. இந்த அழகும், செல்வமும் மனிதர்களின் தன்னலத்தால் அழிந்து வருகின்றன. வைரங்கள், அரிய உலோகங்கள், மரம், தந்தம் என்று பலவகை இயற்கைச் செல்வங்கள், சட்டங்களுக்குப் புறம்பாக, வரைமுறையற்ற வகையில் வர்த்தகம் செய்யப்படுகின்றன. மனித குலத்திற்கும், இயற்கைக்கும் எதிராக எழும் இந்த அழுகுரலைக் கேட்கவேண்டும்.

பாதுகாப்பான, மகிழ்வான எதிர்காலத்தை உருவாக்குவது, ஐ.நா.வின் முக்கிய பணி என்று, அண்மையில் நியூ யார்க் நகரில், ஐ.நா. தலைமையகத்தில் என் விருப்பத்தை வெளியிட்டேன். தங்கள் சுயநலன்களைத் தள்ளிவைத்து, பொது நலனில் அக்கறைகொண்டு அரசுகள் கூட்டுறவு முயற்சிகளில் ஈடுபடவேண்டும் என்பதே என் ஆவல்.

மக்களின் நலனுக்கென கூட்டுறவு முயற்சிகள் மேற்கொள்ளும் அனைத்து இடங்களிலும், கத்தோலிக்கத் திருஅவையின் உறுதுணை இருக்கும் என்பதை உறுதி கூறுகிறேன்.

இறைவனின் ஆசீர் உங்கள் மீதும், உங்கள் மக்கள் மீதும் தங்குவதாக. நன்றி.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.