2015-11-27 16:43:00

இனவாதத்தை வெற்றி கொள்ளும் துணிச்சலை இறைவனிடம் கேளுங்கள்


நவ.27,2015. நைரோபி நகரின் Kasarani விளையாட்டு அரங்கம், ஆப்ரிக்க நாடுகளின் கூட்டமைப்பினர் விளையாடுவதற்காக 1987ம் ஆண்டில் கட்டப்பட்டது. இளையோர் கூடியிருக்கும் இடம் என்றால் நிலைமையை நாமே ஊகித்துக் கொள்ளலாம். ஆப்ரிக்காவின் மரபுப் பாடல்களும் நடனங்களும் இடம்பெற்றன. திருவழிபாடு போன்று நடைபெற்ற இந்த இளையோர் சந்திப்பில், முதலில் பார்வையிழந்த ஓர் இளைஞர் பவுலடிகளார் திமோத்தேயுவுக்கு எழுதிய திருமடலிலிருந்து வாசகம் வாசித்தார். பின்னர் Lynette என்ற இளம்பெண்ணும், Manuel என்ற இளைஞரும் சில கேள்விகளை திருத்தந்தையிடம் கேட்டனர். இறைவனை நம் தந்தை என்று எப்படி புரிந்து கொள்வது? வாழ்வின் துன்ப நிகழ்வுகளில் இறைவனின் கரத்தை எப்படி பார்ப்பது? இறைவன் தரும் அமைதியை எப்படி கண்டுகொள்வது? போன்ற கேள்விகளை மானுவேல் கேட்டார். மேலும், உலகில் பிரிவினைகள், போர்கள், இறப்புகள், அழிவுகள் ஏன் இடம்பெறுகின்றன? இளையோர் மத்தியில் தீவிரவாதமும், பிளவுகளும் ஏன்? என்பன போன்ற கேள்விகளையும் இவ்விருவரும் திருத்தந்தையிடம் கேட்டனர். மேலும், திருத்தந்தையின் கருத்துக்களுக்காக இளையோர் செபித்து வந்ததன் அடையாளமாகச் செபமாலைகளைத் திருத்தந்தையிடம் கொடுத்தனர். திருத்தந்தையும்,  இக்கேள்விகளைக் கவனித்த பின்னர் இளையோர்க்கென தயாரித்து வைத்திருந்த உரையை வழங்காமல், இவர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார். Lynette, Manuel உங்களுக்கு நன்றி. நீங்கள் கொண்டுவந்த செபமாலைகளுக்கும், உங்களின்  இருப்புக்கும் நன்றி சொல்லி, அக்கேள்விகளுக்குப் பதில் சொன்னார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

கென்ய இளையோரை Kasarani அரங்கத்தில் சந்தித்த பின்னர், திறந்த காரில் இளையோர் மத்தியில் வலம் வந்து அனைத்து இளையோரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார் திருத்தந்தை. பின்னர் அந்த அரங்கத்தில் முக்கிய தலைவர்கள் சந்திக்கும் அறையில் கென்ய ஆயர்களைச் சந்தித்தார் திருத்தந்தை. பின்னர் நைரோபி திருப்பீட தூதரகத்திற்கு காரில் சென்று, மதிய உணவருந்தினார். சிறிது நேர ஓய்வுக்குப் பின்னர் அனைவரிடமும் விடைபெற்று அந்நகரின் பன்னாட்டு விமான நிலையம் சென்று உகாண்டா நாட்டுக்குப் புறப்பட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். அந்நாட்டை இந்திய இலங்கை நேரம் இவ்வெள்ளி இரவு 9.35 மணிக்குச் சென்றடைந்தார். கென்யாவில் திருத்தூதுப் பயணத்தை நிறைவு செய்து உகாண்டா சென்றுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருத்தூதுப் பயணத்திற்காகத் தொடர்ந்து செபிப்போம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.