2015-11-26 14:57:00

பல்சமயத் தலைவர்கள் கூட்டத்தில் திருத்தந்தையின் உரை


நவ.26,2015. அன்பு நண்பர்களே, ஒவ்வொரு நாட்டிலும் கத்தோலிக்கச் சமுதாயத்தை நான் சந்திக்கச் செல்லும்போது, அங்குள்ள கிறிஸ்தவ சபைகளையும், பிற மதத்தவரையும் சந்திப்பதை நான் முக்கியமென கருதுகிறேன்.

கத்தோலிக்கத் திருஅவை ஏனைய மதங்களைப் பின்பற்றுவோர் மீது மதிப்பு கொண்டுள்ளது என்பதையும், நமது தோழமை உணர்வு வளர்ந்து, வலுபெறும் என்பதையும் இந்த சந்திப்புக்கள் உணர்த்துகின்றன என்று நம்புகிறேன்.

பல்சமய உறவு என்பது எளிதானதல்ல, சவால்கள் நிறைந்தது. இருப்பினும், இன்றைய காலக்கட்டத்தில், பிரிவுகளாலும், மோதல்களாலும் காயப்பட்டுள்ள நமது உலகில் இந்த உறவு மிகவும் அவசியம்.

பன்முக, குடியரசான கென்யாவில், சமயத் தலைவர்கள் மற்றும் சமுதாயங்கள் நடுவே கூட்டுறவு உருவாவது, நாட்டின் பொது நலனுக்கு மிகவும் அவசியம்.

இறைவன் நம் ஒவ்வொருவருக்கும் வழங்கியுள்ள மதிப்பை புரிந்து ஏற்றுக்கொள்வது, ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும் இவ்வுலகிற்கு மிகவும் தேவையான ஒரு பண்பு. அடுத்தவரை மதிக்கவேண்டும் என்ற அடிப்படை விழுமியத்தை நம் எதிர்காலத் தலைமுறையினருக்கு அளிப்பது மிகவும் முக்கியமானது.

நாம் பணிபுரிய விழையும் கடவுள், அமைதியின் கடவுள் என்பதை நாம் உணரவேண்டும். அவரது பெயரைப் பயன்படுத்தி, வெறுப்பையும், வன்முறையையும் விதைப்பதை, ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது. Westgate அங்காடியிலும், Garissa பல்கலைக் கழகத்திலும் நடைபெற்ற உயிர் பலிகள் இன்னும் நம் நினைவில் பதிந்துள்ளன. இத்தகைய வன்முறைகளில் ஈடுபடுவோரின் இதயங்களை இறைவன் தொடட்டும்.

கிறிஸ்தவ ஒன்றிப்பு, பல்சமய உரையாடல் ஆகியவற்றில் கத்தோலிக்கத் திருஅவை  ஆர்வத்துடன் ஈடுபடவேண்டுமென பணித்த இரண்டாம் வத்திக்கான் சங்கம் நிறைவுற்றதன் 50ம் ஆண்டு இது. இச்சங்கம் வலியுறுத்திய உரையாடல், ஒருமைப்பாடு ஆகியவற்றில் திருஅவை இன்னும் ஆர்வமாக ஈடுபடும் என்று உறுதி அளிக்கிறேன்.

எதிர்காலத்தை நோக்கும்போது, அனைத்து மனிதர்களும் உடன்பிறந்தோராய் வாழவேண்டும் என்று மன்றாடுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.