2015-11-26 14:30:00

நைரோபியில் திருத்தந்தையின் முதல் நாள் நிகழ்வுகள்


நவ.26,2015. அன்பு நெஞ்சங்களே, ஆப்ரிக்கக் கண்டத்தில் கத்தோலிக்கத் திருஅவை வேகமாக வளர்ந்து வரும் சூழலில், அக்கண்டத்தில் 2012ம் ஆண்டில் இருபது கோடியாக இருந்த கத்தோலிக்கரின் எண்ணிக்கை, 2050ம் ஆண்டில் ஐம்பது கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஆப்ரிக்க மக்களை நேரில் கண்டு, அவர்களை விசுவாசத்தில் மேலும் உறுதிப்படுத்தவும், வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ள அக்கண்டத்தில் அமைதி, ஒப்புரவு, புரிந்துகொள்தல் ஆகியவற்றை ஊக்குவிக்கவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆப்ரிக்காவுக்கான தனது முதல் திருத்தூதுப் பயணத்தை இப்புதனன்று தொடங்கியுள்ளார். உரோம் நேரம் காலை 7.45 மணிக்கு A330 ஆல் இத்தாலியா விமானத்தில் கென்யா, உகாண்டா, மத்திய ஆப்ரிக்க குடியரசு ஆகிய மூன்று ஆப்ரிக்க நாடுகளுக்கு ஆறு நாள் பயணத்தைத் தொடங்கிய திருத்தந்தை, விமானத்தில் பத்திரிகையாளர்களையும் சந்தித்து வாழ்த்தினார். இப்புதன் உள்ளூர் நேரம் மாலை 5 மணிக்கு, அதாவது, இந்திய இலங்கை நேரம் இப்புதன் மாலை 7.30 மணிக்கு, கென்யத் தலைநகர் நைரோபியின் Jomo Kenyatta அனைத்துலக விமான நிலையத்தில் சென்றிறங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, கென்ய அரசுத்தலைவர் Uhuru Kenyatta, நைரோபி ஆளுனர் Evans Kidero, கென்ய கர்தினால் John Njue உட்பட பல ஆயர்கள் வரவேற்றனர். ஆப்ரிக்க மரபு நடனக் குழுக்களும் பாடலுடன் ஆடி திருத்தந்தையை வரவேற்றன. அவ்விமான நிலையத்திலிருந்து நைரோபி அரசு இல்லத்திற்கு திருத்தந்தை காரில் சென்ற 19 கிலோ மீட்டர் தூரம் முழுவதிலும் பெருந்திரளான மக்கள் திரண்டிருந்து கைகளை ஆட்டி மகிழ்வோடு ஆரவாரம் செய்து தங்களின் வரவேற்பை வெளிப்படுத்தினர். நூற்றுக்கணக்கான காவல்துறையினரும் சாலைகளில் பாதுகாப்புப் பணியில் இருந்தனர். அச்சமயத்தில் பாதுகாப்புப் படையின் ஹெலிகாப்டர் வானத்தில் வட்டமிட்டுக் கொண்டிருந்தது. நைரோபியில் குறைந்தது பத்தாயிரம் காவல்துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று செய்தியாளர்கள் கூறுகின்றனர். நைரோபி அரசு மாளிகையில், வத்திக்கான் மற்றும் கென்ய நாடுகளின் பண்கள், 21 துப்பாக்கிகள் என அரச வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது. பின்னர், கென்ய அரசுத்தலைவர் Uhuru Kenyatta அவர்களைத் தனியே சந்தித்துப் பேசினார் திருத்தந்தை. அதன்பின்னர் அவரின் குடும்பத்தினரையும் சந்தித்தார். கென்ய அரசுத்தலைவர் Kenyatta கத்தோலிக்கத்தைச் சார்ந்தவர். கலைஞர் Gian Lorenzo Bernini அவர்கள் வரைந்த வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா ஓவியத்தை அரசுத்தலைவருக்குப் பரிசாக அளித்தார் திருத்தந்தை. பின்னர் அரசு இல்லத் தோட்டத்தில், அரசியல், பொருளாதார, கலாச்சார மற்றும் தூதரக அதிகாரிகளைச் சந்தித்தார் திருத்தந்தை. இந்நிகழ்வில் முதலில் அரசுத்தலைவர் Kenyatta, திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார்.  

பின்னர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் கென்ய நாட்டுக்கான தனது முதல் உரையை ஆங்கில மொழியில் வழங்கினார். வன்முறை, மோதல்கள், பயங்கரவாதம் ஆகியவை, அச்சத்தையும், நம்பிக்கையின்மையையும், மனத்தளர்ச்சியையும், வறுமையையும் விதைத்துள்ளன, எனவே பொதுநலனைப் பேணுவது அனைவரின் முதன்மை இலக்காக இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

“Mungu abariki Kenya! இறைவன் கென்யாவை ஆசிர்வதிப்பாராக என்று தனது முதல் உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ். அந்த இல்லத் தோட்டத்தில், ஒரு செடியை நட்டு தண்ணீர் ஊற்றினார் திருத்தந்தை. இச்சந்திப்புக்குப் பின்னர், நைரோபி திருப்பீடத் தூதரகம் சென்று இரவு உணவருந்தி உறங்கச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்துடன்  ஆறு நாள்கள் கொண்ட இந்த 11வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தின் முதல் நாள் பயண நிகழ்வுகள் நிறைவுக்கு வந்தன. கிழக்கு ஆப்ரிக்காவிலே பெரிய நகரமான நைரோபியின் தெருக்கள் திருத்தந்தையின் உருவப் படங்களால் நிறைந்துள்ளன. கென்ய மக்களும் ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் உள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.