2015-11-26 15:06:00

நைரோபி பல்கலைக்கழக திருப்பலியில் திருத்தந்தையின் மறையுரை


நவ.26,2015. அன்பு சகோதர, சகோதரிகளே, இறைவன் நம்மைத் தேர்ந்துள்ளார், எனவே, நாம் அஞ்சத் தேவையில்லை (காண்க. எசாயா 44:2) என்ற உறுதிமொழியை இன்றைய முதல் வாசகத்தில் கேட்டோம்.

தாகமுற்ற நிலத்தில் நீரை ஊற்றுவேன் என்றும், உன் வழித் தோன்றல்கள் நீரோடை அருகிலுள்ள புல் போலும் நாணல்கள் போலும் செழித்து வளருவர் என்றும் இறைவன் நமக்கு உறுதி அளிக்கிறார். தூய ஆவியார் பொழியப்பட்டதையே இந்த இறைவாக்கு சுட்டிக்காட்டுகிறது. தூய ஆவியாரின் பொழிவால், இந்த நாடு நற்செய்தியைக் கேட்டு, கிறிஸ்தவக் குடும்பத்தில் ஓர் அங்கமாக இணைந்தது.

இறைவாக்கினர் ஏசாயாவின் வார்த்தைகள், நம் குடும்பங்களை உற்றுநோக்க அழைக்கிறது. கென்யாவில் குடும்ப வாழ்வு ஆசீர் பெற்றுள்ளது, முதியோர் மீது மதிப்பும், குழந்தைகள் மீது அன்பும் காணப்படுகிறது.

ஆண்களின் அகங்காரத்தால், பெண்கள் இழிவுபடுத்தப்படுதல், வன்முறைக்கு உள்ளாதல், பிறக்காத மாசற்ற உயிர்களின் வாழ்வு ஆபத்திற்குள்ளாதல் என்ற தீமைகளைத் தடுக்க, கிறிஸ்தவக் குடும்பங்கள் அழைக்கப்பட்டுள்ளன. பொருள்களை மதித்து, மற்றவர் மீது அக்கறையின்றி நடக்கும் கலாச்சாரத்தின் வளர்ச்சியால் பெருகிவரும் பாலைவனங்கள் நடுவில் இந்தப் பணி மிக முக்கியம்.

நைரோபி பல்கலைக் கழகத்தின் நடுவில் நடைபெறும் இத்திருப்பலியில், நான் இந்த நாட்டின் இளையோரிடம் குறிப்பாக விண்ணப்பிக்கிறேன். அனைவரையும் உள்ளடக்கும், அனைவரையும் மதிக்கும் நீதிநிறைந்த ஒரு சமுதாயத்தை உருவாக்க, ஆப்ரிக்காவின் பாரம்பரிய விழுமியங்களும், உங்கள் இளமைக்கே உரிய தாராள மனமும் உங்களை வழிநடத்தட்டும்.

பாறையின் மீது கட்டாமல், மணல் மீது வீடுகட்டியவரைப் பற்றி இயேசு கூறிய உவமையை நாம் அறிவோம் (மத்தேயு 7:24-27) கடவுள் என்ற கல்லின் மீது வீடுகட்டும்படி நாம் அழைக்கப்பட்டுள்ளோம். இயேசு கிறிஸ்துவையும், அவரது வார்த்தைகளையும் அடித்தளமாகக் கொண்டு நமது வாழ்வைக் கட்டியெழுப்ப இறைவன் விரும்புகிறார்.

எங்கே மனிதர்கள் சகோதர, சகோதரிகளாக வாழ்கின்றனரோ, அங்கு வீடுகள் இல்லங்களாக மாறுகின்றன.

நல்லாயனாம் இயேசு என்ற பாறையின் மீது உங்கள் வாழ்வு கட்டப்படவும், அவரே உங்களையும், உங்கள் குடும்பங்களையும் தன் நன்மைத் தனத்தாலும், கருணையாலும் நிறைக்கவும் வேண்டுகிறேன். கென்யா நாட்டு மக்கள் அனைவரையும் இறைவன் தன் அமைதியால் ஆசீர்வதிப்பாராக!

"நம்பிக்கையில் உறுதியாக நில்லுங்கள்! அஞ்சாதீர்கள்!" ஏனெனில் நீங்கள் கடவுளுக்கு உரியவர்கள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.