2015-11-26 15:20:00

திருத்தந்தை - கொசுக்களுக்காக நான் அதிகம் பயப்படுகிறேன்


நவ.26,2015. இப்புதன் (நவ.25) உரோம் நேரம் காலை 7.45 மணிக்கு A330 ஆல் இத்தாலியா விமானத்தில் கென்யா, உகாண்டா, மத்திய ஆப்ரிக்க குடியரசு ஆகிய மூன்று ஆப்ரிக்க நாடுகளுக்கு ஆறு நாள் பயணத்தைத் தொடங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விமானத்தில் பத்திரிகையாளர்களையும் சந்தித்து வாழ்த்தினார். அச்சமயத்தில் திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் இயேசு சபை அருள்பணியாளர் பெதரிக்கோ லொம்பார்தி அவர்கள், முதலில் திருத்தந்தைக்கு நன்றி தெரிவித்தார். பின்னர், காலை 7.15 மணிக்கு சாந்தா மார்த்தா இல்லத்திலிருந்து திருத்தந்தை புறப்படுவதற்கு முன்னர், அவ்வில்லத்தில், இத்தாலி, உக்ரேய்ன், ருமேனியா, நைஜீரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 11 பெண்களையும், அவர்களுடன் ஆறு சிறாரையும் சந்தித்தது பற்றியும், இப்பெண்கள், வீட்டு வன்முறைக்கும், பாலியல் முறைகேடுகளுக்கும் பலியானவர்கள். இத்தாலியின் Lazio மாநிலத்தில் ஒரு துறவு சபை நடத்தும் புலம்பெயர்ந்தவர் இல்லத்தில் இப்பெண்கள் வாழ்கின்றனர் என்பதையும் பத்திரிகையாளர்களிடம் எடுத்துச் சொன்னார் அருள்பணி லொம்பார்தி. பின்னர் திருத்தந்தையிடம் ஒலிவாங்கி கொடுக்கப்பட்டது. பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொன்னார் திருத்தந்தை. கென்யா, உகாண்டா மற்றும் மத்திய ஆப்ரிக்க குடியரசு சகோதரர்களைச் சந்திப்பதற்கு மகிழ்ச்சியோடு செல்கிறேன். இத்திருத்தூதுப் பயணம், ஆன்மீக மற்றும் பொருளாதார முறைகளில் சிறந்த பலன்களைக் கொணரும் என்று நம்புவோம் என்றார் திருத்தந்தை. மேலும், இத்திருத்தூதுப் பயணத்தின் பாதுகாப்புப் பற்றி பயமாக, பதட்டமாக இருக்கின்றதா என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, உங்களுக்கு ஓர் உண்மையைச் சொல்ல வேண்டும், கொசுக்களுக்காக நான் அதிகம் பயப்படுகிறேன், நான் பயப்படும் ஒரே விடயம் கொசுக்கள். ஆமாம், கொசுக்கடிக்குப் பயன்படுத்தப்படும் spray எடுத்து வந்திருக்கின்றீர்களா? என்று கேட்டு அனைவரையும் சிரிக்க வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். அன்பர்களே, ஆப்ரிக்காவில் கொசுக்கள் நிறைய இருக்கும், மலேரியா அச்சுறுத்தல் உண்டு என்பது எல்லாருக்கும் தெரிந்த விடயம்தான். மேலும், al Shabaab என்ற சொமாலிய இஸ்லாம் போராளிகள், கடந்த இரு ஆண்டுகளாக கென்ய நாட்டை குறி வைத்து தாக்கி வருகின்றனர். இதில் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர். 2013ம் ஆண்டில் al Shabaab அமைப்பின் போராளிகள், நைரோபியின் பெரிய அங்காடியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 67 பேர் கொல்லப்பட்டனர். இவ்வன்முறையை முன்னிட்டு பத்திரிகையாளர் இக்கேள்வியை திருத்தந்தையிடம் கேட்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.