2015-11-26 14:49:00

கென்யா அரசு வழங்கிய வரவேற்பு நிகழ்வில் திருத்தந்தையின் உரை


நவ.26,2015. அரசுத் தலைவரே, அரசு அதிகாரிகளே, பிறநாட்டுத் தூதர்களே, சகோதர ஆயர்களே, பெரியோரே, தாய்மாரே, கென்யா மிகவும் துடிப்புள்ள ஒரு நாடு. ஏனைய ஆப்ரிக்க நாடுகளைப் போல இதுவும் ஒரு பன்முக சமுதாயத்தைக் கொண்டுள்ளது.

உங்கள் நாடு இளையோரைக் கொண்டுள்ள ஒரு நாடு. இங்குள்ள இளையோரைச் சந்தித்து, அவர்களுக்கு எதிர்காலத்தின் மீது நம்பிக்கையையும், ஒரு பிடிப்பையும் உருவாக்க விரும்புகிறேன். எந்த ஒரு நாட்டிலும் இளையோர் மதிப்பு மிக்க கருவூலம். அவர்களுக்கு நல்ல பாரம்பரியமான விழுமியங்களை தருவதே, நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்கும் வழி.

கென்யா நாடு, இயற்கை வளங்கள் நிறைந்த ஒரு நாடு என்பது மட்டுமல்ல, இந்த வளங்கள் இறைவனால் வழங்கப்பட்டக் கொடை என்பதை இந்நாட்டு மக்கள் உணர்ந்து பாராட்டுகின்றனர்.

இந்த இயற்கை வளங்களை வருங்காலத் தலைமுறையினருக்கு நல்ல முறையில் விட்டுச்செல்வது நமது கடமை. எனவே, இயற்கையைப் பராமரிக்கும் பொறுப்பாளர்களாக வாழ்ந்து, நாம் பெற்ற இயற்கை வளங்களை, நாம் பெற்றவாறே அடுத்தத் தலைமுறைக்கு விட்டுச்செல்வோம்.

இயற்கையைப் பாதுக்காப்பதற்கும், நீதி நிறைந்த சமுதாயத்தை உருவாக்குவதற்கும் நெருங்கியத் தொடர்புள்ளது. அத்தகைய சமுதாயத்தை உருவாக்க, ஒப்புரவு, சமாதானம், மன்னிப்பு, ஒருவர் ஒருவர் மீது கொண்டுள்ள மதிப்பு ஆகிய முயற்சிகள், அரசியல், பொருளாதார, சமய உலகங்கள் அனைத்திலும் நிகழவேண்டும்.

வன்முறை, மோதல், தீவிரவாதம் ஆகியவை, அச்சம், நம்பிக்கையின்மை, வறுமையால் உருவாகும் விரக்தி இவற்றிலிருந்து பிறக்கின்றன என்பதை நமது அனுபவம் சொல்கிறது.

மாண்புமிக்க பெரியோரே, தாய்மாரே, இந்நாட்டின் எதிர்காலம் உங்கள் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. "மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும்" (லூக்கா 12:48) என்று நற்செய்தியில் கூறப்பட்டுள்ளது. இதை மனதில் கொண்டு, நேர்மையாக, திறமையாக, ஒளிவு மறைவின்றி உங்கள் பொறுப்பை நிறைவேற்ற உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.

பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், அடுத்த தலைமுறையினருக்கென ஒரு மரம் நடுவதென்பது கென்யா நாட்டில் நிலவும் மரபு என்று கேள்விப்பட்டேன். கடவுள் மீதும், எதிர்காலத்தின் மீதும் நம்பிக்கையை வளர்க்கும் இந்த உன்னதமான அடையாளம், இந்த நாட்டையும், ஆப்ரிக்கக் கண்டம் அனைத்தையும் நீதியிலும், அமைதியிலும் வளமான பாதையில் வழிநடத்தட்டும். உங்கள் அனைவர் மீதும், உங்கள் குடும்பங்கள் மீதும், இந்த நாட்டு மக்கள் இறையாசீரை இறைஞ்சுகிறேன்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.