2015-11-25 15:52:00

திருத்தந்தையின் வருகை நம்பிக்கையைப் புதுப்பிக்கும்


நவ.25,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கென்யா நாட்டுக்கு வருகை தருவது, இந்நாட்டு மக்களின் நம்பிக்கையைப் புதுப்பிக்கும் ஒரு செயல்பாடாகவும், திருஅவையின் பணிகளை முன்னெடுத்துச் செல்ல உந்து சக்தியாகவும் அமையும் என்று நைரோபி பேராயர், கர்தினால் John Njue அவர்கள் கூறியுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இப்புதனன்று மூன்று ஆப்ரிக்க நாடுகளில் துவங்கியுள்ள திருத்தூதுப் பயணம் குறித்து, வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romanoவுக்கு, "மதம் மற்றும் அரசியல் சகிப்புத்தன்மையற்ற நிலைக்கு எதிராக ஒரு குரல்" என்ற தலைப்பில், கர்தினால் Njue அவர்கள் வழங்கியுள்ள ஒரு கட்டுரையில் இவ்வாறு கூறியுள்ளார்.

1980, 1985, 1995 ஆகிய மூன்று ஆண்டுகள், திருத்தந்தை புனித 2ம் ஜான்பால் அவர்கள் தங்கள் நாட்டுக்கு வருகை தந்ததை தன் கட்டுரையில் சுட்டிக்காட்டும் கர்தினால் Njue அவர்கள், கடந்த 20 ஆண்டுகளில் தங்கள் நாடு பல வழிகளில் மாறியிருந்தாலும், நாட்டில் நிலவும் சவால்களும் கூடியுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தொடர்ந்து நிலவும் வறுமை, மேலை நாட்டு தாக்கத்தால் உடைந்துபோகும் குடும்பங்கள், பிரித்தாளும் அரசியல் நிலைகள் போன்ற சவால்கள், திருத்தந்தை சந்திக்கும் கென்யாவின் இன்றைய சவால்கள் என்று கர்தினால் Njue அவர்கள் தன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.