2015-11-24 15:20:00

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முதல் சிறார் நூல்


நவ.24,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, உலகின் பல பகுதிகளிலிருந்து சிறார் எழுதிய கடிதங்களுக்கு அவர் எழுதிய பதில்களை புத்தக வடிவில் சிகாகோ லொயோலா அச்சகம் வெளியிடவுள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சிறார்க்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு, “அன்புள்ள திருத்தந்தை பிரான்சிஸ்:உலகின் சிறார்க்கு திருத்தந்தையின் பதில் கடிதங்கள்” என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவரவுள்ளது. இதனை, இயேசு சபை அருள்பணியாளர் Antonio Spadaro, லொயோலா நூல் வெளியீட்டு அச்சகத்தின் Tom McGrath ஆகிய இருவரும் தயாரித்துள்ளனர்.

சிரியா, சீனா, கென்யா, அல்பேனியா உட்பட 26 நாடுகளிலிருந்து, ஆறு வயதுக்கும் 13 வயதுக்கும் உட்பட்ட ஏறக்குறைய 259 சிறார் திருத்தந்தைக்கு பல தலைப்புகளில் கேள்வி கேட்டு கடிதம் எழுதியிருந்தனர். இந்நூல் வருகிற மார்ச் மாதத்துக்குள் தயாராகிவிடும் என்று கூறப்பட்டுள்ளது. இச்சிறார் திருத்தந்தைக்கு கைப்பட எழுதிய 31 கடிதங்களுக்கு திருத்தந்தையே தனது கைப்பட பதில் எழுதிய கடிதங்களை ஒன்றாகச் சேர்த்து இந்நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நூலை, இஸ்பானியம் மற்றும் ஆங்கிலத்தில் சிகாகோ லொயோலா வெளியீட்டு அச்சகம் அமெரிக்க ஐக்கிய நாட்டில் வெளியிடவுள்ளது. அதேநேரம், இத்தாலி, மெக்சிகோ, போலந்து, இந்தோனேசியா, இந்தியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலுள்ள இயேசு சபை வெளியீட்டு நிறுவனங்களும் இந்நூலை வெளியிடவுள்ளன.

திருத்தந்தை பிரான்சிஸ், சுற்றுச்சூழல், போர் ஏன், உலகில் ஏழைகள் ஏன் உட்பட பல்வேறு தலைப்புகளில் சிறார் தங்கள் மனதில் தோன்றியதை எவ்வித தயக்கமுமின்றி கேள்வி கேட்டு கடிதம் எழுதியிருந்தனர் என்று Tom McGrath அவர்கள் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.