2015-11-23 15:22:00

விசுவாசமாக இருக்கும் கைம்பெண்கள் திருஅவையின் அடையாளங்கள்


நவ.23,2015. திருஅவையின் ஒரே ஆர்வமும், ஒரே சொத்தும் இயேசுவாக இருந்தால், திருஅவை தன் கண்களை எப்போதும் இயேசு மீது பதித்திருந்தால், அது எப்போதும் பிரமாணிக்கமுள்ளதாக இருக்கும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இத்திங்களன்று கூறினார்.

வத்திக்கானிலுள்ள சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இத்திங்கள் காலையில் நிறைவேற்றிய திருப்பலி மறையுரையில் இவ்வாறு கூறிய திருத்தந்தை, திருஅவை உலகப் பொருள்களில் தனது வசதியைத் தேடினால், அது ஆர்வம் குன்றிய மற்றும் சாதாரண திறமையுடையதாக மாறிவிடும் என்று எச்சரித்தார்.

வறுமையில் வாடிய ஏழைக் கைம்பெண் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே காணிக்கைப் பெட்டியில் போட்டது பற்றிக் கூறும் இத்திங்கள் திருப்பலியின் நற்செய்தி வாசகத்தை(லூக்.21: 1-4) மையமாக வைத்து மறையுரை வழங்கிய திருத்தந்தை, திருஅவையின் ஒரே சொத்து இயேசு என்று கூறினார்.

காணிக்கைப் பெட்டிக்குள் போட்ட அனைவரும் தங்களுக்கு இருந்த மிகுதியான செல்வத்திலிருந்து காணிக்கை போட்டனர், ஆனால் இந்த ஏழைக் கைம்பெண் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டார் என்று இயேசு கூறியதை குறிப்பிட்ட திருத்தந்தை, இந்தக் கைம்பெண் ஆண்டவரில் மட்டுமே தனது நம்பிக்கையை வைத்திருந்தார் என்றும் கூறினார்.

நற்செய்திகளில் சொல்லப்பட்டுள்ள கைம்பெண்கள், இயேசுவின் வருகைக்காக காத்திருக்கும் திருஅவையின் கைம்பெண்மையின் அடையாளங்களாக உள்ளனர் என்றும், திருஅவையின் இதயம் விண்ணக மணவாளராகிய இயேசுவோடு எப்போதும் உள்ளது என்றும் கூறினார் திருத்தந்தை.

திருவழிபாட்டு ஆண்டின் கடைசி கட்டத்தில் இருக்கும் நாம், நம் இதயங்கள் இயேசுவைத் தேடுகின்றனவா அல்லது இயேசுவைத் திருப்திப்படுத்தாத பொருள்களில் வசதியைத் தேடுகின்றனவா என்று நம்மையே நாம் கேட்டுக்கொள்வோம் என்றும் மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.