2015-11-23 15:42:00

வாரம் ஓர் அலசல்– உயர்ந்த எண்ணங்களை மட்டுமே சிந்திப்பாயாக


நவ.23,2015. தமிழகத்தில் ஒரு பள்ளியில் புத்தக கண்காட்சி நடைபெற்றது.  ஒவ்வொரு வகுப்பு மாணவிகளும் தங்களின் வகுப்பறைகளை பல்வேறு புத்தகங்களால் அழகுபடுத்தியிருந்தனர். ஆனால் 11ம் வகுப்பு மாணவிகள் மட்டும் சற்று வித்தியாசமாக, படிக்காதீங்க... படிக்காதீங்க!ன்னு தங்கள் வகுப்பறைச் சுவர்களில் ஒட்டி வைத்திருந்தனர். அப்படி எதைத்தான் படிக்கக் கூடாது என்று வாசித்தால், நல்ல நேர்மறை கூற்றுகள் தடித்த எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்தன. படிக்காதீங்க... தினமும் படித்தால், அதிக மதிப்பெண் வாங்கிடுவீங்க. ‘வெற்றி’ என்னும் மகிழ்வைக் கொடுக்கும் படிப்பைப் படிக்காதீங்க! தேர்வில் நல்ல மதிப்பெண் பெற மட்டும் படிக்காதீங்க!..... வகுப்பறையை பல்வேறு புத்தகங்களால் அழகுபடுத்தியிருந்ததோடு, இப்படி படிக்காதீங்க... படிக்காதீங்க!ன்னு எழுதி ஒட்டியதற்கு அம்மாணவிகள் விளக்கமும் சொன்னார்கள். “இப்போ எல்லாம், பெரிய கதாநாயகர்கள் வில்லன்கள்போன்று நடிக்கும் திரைப்படங்களை மக்கள் அதிகம் ரசிக்கிறாங்க. நல்லதையே சொல்றதா இருந்தாலும் எதிர்மறையாச் சொல்லி எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைக்கணும்கிறது எங்கள் ஆவல். படிங்க, படிங்கன்னு சும்மா சொல்லிட்டே இருந்தா, கடுப்பா இருக்கும். அதையே வேற மாதிரி சொல்றோம்...” என்று விளக்கினார்கள். இந்த விளக்கத்தைக் கேட்டபோது, ஒரு நல்ல காரியத்தைக்கூட எதிர்மறையாகச் சொல்லி மனதில் பதிய வைக்க வேண்டும் சூழல் இக்கால இளைய தலைமுறையிடம் உருவாகி வருகிறதோ என்று சிந்திக்க வைத்தது. இன்றைய இளையோர் பலர் எதிர்மறையாகவே சிந்திக்கின்றார்கள். எதையெடுத்தாலும் குற்றம் காணும் மனப்பான்மை அவர்களிடம் அதிகமாக வளர்ந்து வருகிறது. ஆனால், எந்த ஒரு முயற்சியிலும் சில குறைகள் இல்லாமல் இருக்காது. ஆயினும், அவற்றையும் மீறி நல்ல விடயங்களைப் பார்ப்பது நம் உடலையும், மனதையும் நலமாக வைத்திருக்கும் என்பது சுகமான செய்தி. இன்றைய நிகழ்ச்சியில் இதை ஏன் சொல்கிறோம் என்றால், பத்து நாள்களுக்கு முன்னர்(நவ.13,2015) பாரிசில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களின் எதிரொலி நடவடிக்கைகளே காரணம். ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்களில் சிலர் எதிர்மறைச் செயல்களில் இறங்கியுள்ளனர் என்பதற்காக அச்சமூகத்தைச் சேர்ந்த எல்லாரையும் எதிர்மறையாக, அச்சத்துக்குரியவர்களாக பார்ப்பது சரியல்ல.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், பாரிஸ் நகரம் எதிர்கொண்ட இந்தப் பயங்கரவாத தாக்குதல்களிலிருந்து அந்நகரம் இன்னும் சாதாரண வாழ்வுக்குத் திரும்பவில்லை.  அத்தாக்குதல்களுக்கு ஐ.எஸ். இஸ்லாமிய அரசும் பொறுப்பேற்றுள்ளது. பாரிஸ் தாக்குதலுக்குப் பின்னர் மாலி நாட்டில் ஐ.எஸ். தாக்குதல். மேலும் சில நாடுகளிலும் தாக்குதல்கள். இப்பயங்கரவாதிகளின் துப்பாக்கிகளுக்கு அப்பாவி மனிதர்கள் பலர் பலியாகி வருகின்றனர். அதேநேரம், பயங்கரவாதத் தாக்குதல்களால், நாடுகள் எடுத்துவரும் கடும் நடவடிக்கைகள் புலம்பெயரும் அப்பாவி மக்களுக்கு பாதிப்பையும் ஏற்படுத்தி வருகின்றன. சிரியா மற்றும் ஈராக்கில் இடம்பெறும் சண்டைகளுக்குப் பயந்து புலம்பெயரும் மக்கள் மீது, குறிப்பாக புலம்பெயரும் முஸ்லிம்கள் மீது காட்டப்படும் தவறான சந்தேகங்கள், பிரிவினைகளையும் அச்சத்தையுமே ஏற்படுத்தும் என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள் கூறியுள்ளார். பாரிஸ் தாக்குதல்கள் பற்றி இஞ்ஞாயிறன்று பிபிசி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இங்கிலாந்தின் கான்டர்பரி ஆங்லிக்கன் பேராயர் Justin Welby அவர்கள், பாரிசில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்கள் இதயத்தை வெடிக்கச் செய்தன, ஆயினும், இதற்குப் பதிலடியாக நாம் தாக்குதல்களை கண்மூடித்தனமாகத் தொடங்கினால், தவறுகள் எதுவுமே செய்யாதவர்களும் இதற்குப் பலியாவார்கள், இதனால் தீர்வுகள் கிடைக்காது, இரண்டு அநீதிகள், நீதியைக் கொண்டு வராது, எனவே அரசுகள் நீதியின் கருவிகளாகச் செயல்பட வேண்டும் என்று கேட்டுள்ளார்.

எம் அன்புக்குரிய நேயர்களே, பாரிஸ் பயங்கரவாத தாக்குதல்களின் விளைவாக நல்ல முஸ்லிம்கள் பலரும் தவறாக நோக்கப்படும் சூழல் பரவலாக உருவாகியுள்ளது. உரோமையில் இத்திங்களன்று பேருந்தில் ஓர் அப்பாவி வெளிநாட்டு மனிதரைப் பார்த்து, ஒரு பெரியவர், cattivo அதாவது தீயவர், கெட்ட மனிதர் என்று வசைபாடிக்கொண்டே இருந்தார். பாரிசில் பயங்கரவாத தாக்குதல்களில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு கடந்த வாரத்தில், அம்மாநகரின் குடியரசு வளாகத்தில் நடைபெற்றது, அதில் கலந்துகொண்ட மக்கள், மலர்கொத்துகளை வைத்துவிட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது அந்தப் பாதையில் நின்றுகொண்டிருந்த நபர் ஒருவர், தனது கண்களை கட்டிக்கொண்டு, ”நான் ஒரு இஸ்லாமியனாக இருப்பதால் என்னைத் தீவிரவாதி என்று கூறுகின்றனர். ஆனால், நான் உங்களை நம்புகிறேன். நீங்களும் என்னை நம்பினால், என்னைக் கட்டியணையுங்கள்” என்று கேட்டுள்ளார். இதனைக் கவனித்த அஞ்சலி செலுத்த வந்த மக்கள், ஒருவர் பின் ஒருவராகச் சென்று அவரைக் கட்டியணைத்து ஆரத் தழுவியுள்ளனர். இது குறித்து அந்த நபர் கூறுகையில், என்னைக் கட்டியணைத்த உங்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி, மேலும் இதன் மூலம் ஒரு செய்தியையும் உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன். நான் ஒரு இஸ்லாமியர்தான், ஆனால் நான் தீவிரவாதி கிடையாது, மேலும் யாரையும் நான் கொலை செய்யவில்லை. கடந்த 13ம் தேதி எனது பிறந்தநாள், அந்நாளில் நான் எங்கும் வெளியில் செல்லவில்லை, மேலும் அந்த நாளில் பாரசில் நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்காக நான் வருந்துகிறேன். ஆனால், நான் உங்களிடம் ஒன்று சொல்கிறேன், எல்லா இஸ்லாமியர்களையும் தீவிரவாதிகளாகக் கருதாதீர்கள், சிலர் மற்றவர்களைக் கொலை செய்வதற்குத் தயாராக இருப்பார்கள், ஆனால் இஸ்லாமியர்கள் அப்படி செய்யமாட்டார்கள், ஏனெனில் இஸ்லாமிய மதத்தில் இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.. என்று கூறியுள்ளார்.

“இஸ்லாமியர் என்றாலே தீவிரவாதிகளா? என்னை நம்பினால் கட்டியணையுங்கள்” என்ற தலைப்பில் Youtubeல் வெளியான இந்தக் காட்சியை ஒரு கோடிக்கு மேற்பட்டோர் பார்த்துள்ளனர். மேலும் 1,50,000 பேருக்கு மேல் விருப்பம் தெரிவித்துள்ளனர். அன்பர்களே, ஒரு நபரின் தோற்றத்தையும், மத நம்பிக்கையையும் அடிப்படையாக வைத்து அந்நபரைத் தவறாக எடைபோடப்படக் கூடாது என்பதையே இந்த ஒளிப்பதிவு உணர்த்துகிறது. மேலும், பாரிசில் இடம்பெற்ற அண்மைத் தாக்குதல்கள் பின்னணியில், உலகின் அனைத்து முஸ்லிம்களுக்கும், பிரான்ஸ் இஸ்லாம் மதகுருக்கள் அவை எழுதியுள்ள நீண்ட அறிக்கை, உண்மையான இஸ்லாமியரின் மனக்குமுறல்களை வெளிப்படுத்தியுள்ளது. இவ்வறிக்கை கடந்த வெள்ளியன்று பிரான்சின் 2,500 மசூதிகளில் தொழுகை நேரத்தில் வெளியிடப்பட்டது.

அன்பு முஸ்லிம் ஆண்களே, அன்பு இஸ்லாம் பெண்களே, அமைதியின் மதமாகிய இஸ்லாம், தீவிரவாதிகள் மற்றும் அறிவற்றவரின் கரங்களில் பிணையல் கைதியாக மாறியுள்ளது. இஸ்லாம், ஐரோப்பாவில் ஒரு நூற்றாண்டளவாக இருந்து வருகிறது. சில முஸ்லிம்கள் இங்கு வரும்வரை, ஐரோப்பிய சமூகங்களுடன் அவர்கள் நல்லிணக்கத்துடனே வாழ்ந்து வந்துள்ளனர். ஐரோப்பாவில் பிறந்த இளையோருக்கு அரபு மொழியை நன்றாகப் பேசத் தெரியாது. இந்த இளையோருக்கு இஸ்லாமிய இறையியலில் எந்தச் சான்றிதழும் கிடையாது. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இஸ்லாமியக் குருக்களுக்கு ப்ரெஞ்ச் மொழியை சரியாகக்கூட பேசத் தெரியாது. மேற்கத்திய சமூகங்களில் ஐரோப்பிய முஸ்லிம்கள் மற்றும் ப்ரெஞ்ச் இளையோர் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சனைகள் என்னவென்று அவர்களுக்குத் தெரியாது. மேற்கத்திய முறையிலுள்ள இஸ்லாம், நாங்கள் அறிந்துள்ள இஸ்லாம் போன்றது இல்லை என்று ஆண்டுகளாய் பேசப்பட்டது. பிரான்சிலுள்ள முஸ்லிம் அதிகாரிகள் இஸ்லாத்தின் உண்மையான விழுமியங்களின்படி வாழவில்லை என்றும் கூறப்பட்டது.  ஆனால், பிரான்சிலும், ஐரோப்பாவிலும் முஸ்லிம்கள் சுதந்திரம் மற்றும் மாண்புடன் வாழ்கின்றனர். எவ்வித இடையூறும், தனிமைப்படுத்தலுமின்றி, மசூதிகள், இஸ்லாமிய மையங்கள் மற்றும் சமயப் பள்ளிகளை, ஐரோப்பாவில் முஸ்லிம்கள் கட்டுகின்றனர். அதேநேரம், முஸ்லிம் உலகத்தில் கிறிஸ்தவர்கள், யூதர்கள் மற்றும் மதநம்பிக்கையற்றவர்களுக்கு, வாழ்க்கை கடினமாக உள்ளது. முஸ்லிம் நாடுகளில் ஆலயத்தையோ தொழுகை கூடத்தையோ கட்டுவது, அரசுத்தலைவர் தலையீடின்றி, இயலாத கனவாக உள்ளது. ஐரோப்பாவில் முஸ்லிம்கள் அனுபவிக்கும் சுதந்திரங்கள் பாராட்டப்பட வேண்டும், முஸ்லிம்கள் தங்களின் பிள்ளைகள் தீவிரவாத இஸ்லாமியர்களாக மாறாதவண்ணம் அவர்களைப் பாதுகாக்க வேண்டும். பயங்கரவாத தாக்குதல்களுக்கு எதிராக கண்டனம் தெரிவிப்பதோடு நிறுத்திவிடாமல், இளையோரின் வருங்காலம் மற்றும் இஸ்லாமின் வருங்காலத்தை நினைவில் கொண்டு, இஸ்லாம் மதம் வெறுப்புக்குரியதாய் மாறாமல் இருப்பதற்கு அனைத்து முஸ்லிம்களும் முயற்சிக்க வேண்டும். தீவிரவாதிகள் இஸ்லாமின் எதிர்காலத்தை அழிக்கின்றனர், முஸ்லிம் இளையோரைத் தவறாகப் பயன்படுத்தி, உலகளாவிய இஸ்லாம் மதத்தை வகுப்புவாத மற்றும் வெறுப்புக்குரிய மதமாக மாற்றும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். பயங்கரவாதிகளுக்குப் பெற்றோரும் குடும்பங்களும் உள்ளனர், நீங்கள் என்ன செய்கின்றார்கள்? அன்பு முஸ்லிம் ஆண்களே, பெண்களே, உங்கள் மதத்தின் எதிர்காலமும், உங்கள் பிள்ளைகளின் தலைவிதியும் ஆபத்தில் உள்ளன. செயல்படுவதற்கும், செயல்படாமல் இருப்பதற்கும் தீர்மானிப்பது முஸ்லிம்களாகிய உங்களைச் சார்ந்தது.  

அன்பர்களே, மதத்தின் உண்மையான விழுமியங்கள் வாழப்பட வேண்டும் என்றே ஒவ்வொரு மதத்தினரும் விரும்புகின்றனர். தங்கள் மதத்தின் போதனைகளையும், கோட்பாடுகளையும் உண்மையாகவே வாழ்பவர்கள் நிச்சயமாக வன்முறைச் செயல்களில் ஈடுபடமாட்டார்கள், அவற்றுக்கு மற்றவர்களைத் தூண்டவும் மாட்டார்கள். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியிருப்பது போல, இவ்வுலகம் போட்டி, பேராசை மற்றும் ஆயுதங்களின் அச்சுறுத்தலால் நிறைந்துள்ளது. ஒருசமயம் மாணவர்கள் தங்கள்  குருவிடம், “மிக மோசமான பாவச் செயல் எது?” என்று கேட்டனர். “தான் நல்லவன் என்றும், பிறர் பாவிகள் என்றும் தீர்ப்பிடும் செயலே உலகிலே மோசமான பாவச் செயல்” என்று அவர் பதில் சொன்னார். எனவே, ஆள்களின் உருவத்தை, மத நம்பிக்கையை வைத்து தீர்ப்பிடாமல் மனித நேயத்துடன் வாழ்வோம். இவ்வுலகில் எல்லாரும் நல்லவர்கள் அல்ல, எல்லாரும் கெட்டவர்களும் அல்ல. ஒவ்வொருவரிலும் ஓர் இருண்ட மனிதன் இருக்கிறான். அதை உணர்ந்து கட்டுக்குள் வைத்து, அன்புணர்வில் மனிதர்களாக பலர் வாழ்ந்து வருகின்றனர். மனத்தில் நற்சிந்தனைகள் தொடர்ந்து ஊற்றெடுக்கும்போது இவ்வுலகம் சுவர்க்கப் பூமியாய்த் தோன்றும். மாறாக, வீணாண எண்ணங்களைச் சுமந்தால் சண்டை சச்சரவுகள் நிறைந்த கலகப் பூமியாய் அது காட்சியளிக்கும். மனமே, உயர்ந்த எண்ணங்களை மட்டுமே சிந்திப்பாயாக என்று, அன்பர்களே சொல்லிச் சொல்லி வாழ்வோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.