2015-11-23 15:37:00

திருத்தந்தை : அமைதியின் தூதுவராக வருகிறேன்


நவ.23,2015. வருகிற புதனன்று கென்யா, உகாண்டா, மத்திய ஆப்ரிக்க குடியரசு ஆகிய நாடுகளுக்கு திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அம்மக்களுக்குச் செபமும் வாழ்த்தும் நிறைந்த காணொளிச் செய்தி ஒன்றை இத்திங்களன்று அனுப்பியுள்ளார்.

இயேசு கிறிஸ்துவின் அன்பையும், ஒப்புரவு, மன்னிப்பு, அமைதி ஆகிய இயேசுவின் செய்தியையும் அறிவிப்பதற்கு, நற்செய்தியின் திருப்பணியாளராக வருகிறேன் என்று அக்காணொளிச் செய்தியில் பேசியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒவ்வொரு மனிதரின் மாண்பைப் போதித்து, நம் இதயங்களைப் பிறருக்கு, குறிப்பாக, ஏழைகளுக்கும் தேவையில் இருப்போருக்கும் திறப்பதற்கு நம்மை வலியுறுத்தும் நற்செய்திக்குச் சான்று பகர்கின்ற மற்றும் இறைவனை வழிபடுகின்ற கத்தோலிக்க சமூகத்தை மேலும் உறுதிப்படுத்த இத்திருத்தூதுப் பயணத்தை மேற்கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

அதேநேரம், கென்யா மற்றும் உகாண்டா மக்கள் அனைவரையும் நான் சந்திக்க விரும்புகிறேன், அனைத்து மதத்தினரும், நல்மனம் கொண்ட அனைவரும் ஒருவர் ஒருவரைப் புரிந்து மதித்து, ஒரே மனிதக் குடும்பத்தின் உறுப்பினர்களாக ஒருவர் ஒருவருக்கு ஆதரவளிக்க நாம் அழைக்கப்படும் ஒரு காலத்தில் வாழ்ந்து வருகிறோம், எனது இப்பயணத்தில், இளையோரைச் சந்திப்பது முக்கியமாக அமையும் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மத்திய ஆப்ரிக்க குடியரசுக்கென கூறிய செய்தியில், இம்மாதம் 29ம் தேதி Bangui பேராலயத்தில் புனிதக் கதவைத் திறப்பேன், இது யூபிலி ஆண்டுக்கு சற்று முன்னதாகவே இடம்பெறுகின்றது, இத்திருத்தூதுப் பயணம் உண்மையான மன்னிப்புப் பெறவும், வழங்கவும் வழியமைத்து அன்பைப் புதுப்பிக்கும் என்று நம்புகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இம்மாதம் 25ம் தேதி முதல் 30ம் தேதி வரை கென்யா, உகாண்டா, மத்திய ஆப்ரிக்க குடியரசு ஆகிய ஆப்ரிக்க நாடுகளுக்கு திருத்தூதுப் பயணம் மேற்கொள்கிறார்  திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் இப்பயணத்திற்காகச் செபிக்கும்படி அனைவரையும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.