2015-11-21 16:07:00

தீவிரவாதிகள் இஸ்லாமின் எதிர்காலத்தை அழிக்கின்றனர்


நவ.21,2015. முஸ்லிம் இளையோரைத் தவறாகப் பயன்படுத்தி, உலகளாவிய இஸ்லாம் மதத்தை வகுப்புவாத மதமாகவும், வெறுப்புக்குரியதாகவும் மாற்றும் வெளிநாட்டு முஸ்லிம் மதக் குருக்களுக்கு எதிரான தங்களின் கண்டனத்தை வெளியிட்டுள்ளது பிரான்ஸ் இஸ்லாம் மதகுருக்கள் அவை.

பாரிசில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதல்கள் பின்னணியில் இஸ்லாம் மதக் குருக்கள் அவை வெளியிட்ட அறிக்கை, பிரான்சின் 2,500 மசூதிகளில் இவ்வெள்ளியன்று தொழுகை நேரத்தில் வெளியிடப்பட்டது.

ஐரோப்பாவில் தாங்கள் அனுபவிக்கும் சுதந்திரங்களை முஸ்லிம் மக்கள் பாராட்ட வேண்டும், தங்களின் பிள்ளைகள் தீவிரவாத இஸ்லாமியர்களாக மாறாதவண்ணம் அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அவ்வறிக்கை கேட்டுள்ளது.

கிறிஸ்தவர்கள், யூதர்கள் மற்றும் மதநம்பிக்கையற்றவர்களுக்கு, முஸ்லிம் உலகத்தில் வாழ்க்கை கடினமாக உள்ளது, முஸ்லிம் நாடுகளில் ஆலயத்தையோ தொழுகை கூடத்தையோ கட்டுவது, அரசுத்தலைவர் தலையீடின்றி, இயலாத கனவாக உள்ளது, ஆனால் அதற்கு மாறாக, பிரான்சிலும், ஐரோப்பாவிலும் முஸ்லிம்கள் சுதந்திரம் மற்றும் மாண்புடன் வாழ்கின்றனர் என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.

பயங்கரவாத தாக்குதல்களுக்கு எதிராக கண்டனம் தெரிவிப்பதோடு நிறுத்திவிடாமல், இளையோர் மற்றும் இஸ்லாமின் வருங்காலத்தை நினைவில் கொண்டு, இஸ்லாம் மதம் வெறுப்புக்குரியதாய் மாறாமல் இருப்பதற்கு அனைத்து முஸ்லிம்களும் முயற்சிக்குமாறும் கூறியுள்ளது அவ்வறிக்கை.

அமைதியின் மதமாகிய இஸ்லாம், தீவிரவாதிகள் மற்றும் அறிவற்றவரின் கரங்களில் பிணையல் கைதியாக மாறியுள்ளது என்று கூறும் அவ்வறிக்கை, பயங்கரவாதிகளுக்குப் பெற்றோரும் குடும்பங்களும் உள்ளனர், அவர்கள் என்ன செய்கின்றார்கள் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. 

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.