2015-11-21 15:53:00

திருத்தந்தைக்கு கிழக்குஆப்ரிக்க ஆயர் பேரவை வரவேற்பு


நவ.20,2015. வருகிற புதனன்று ஆப்ரிக்காவுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, AMECEA என்ற கிழக்கு ஆப்ரிக்க ஆயர் பேரவை கூட்டமைப்பு மிகவும் மகிழ்வுடன் வரவேற்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

இம்மாதம் 25ம் தேதி முதல் 30ம் தேதி வரை, கென்யா, உகாண்டா, மத்திய ஆப்ரிக்க குடியரசு ஆகிய நாடுகளுக்கு திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளும் திருத்தந்தையை வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார் இக்கூட்டமைப்பின் தலைவர் கர்தினால் Souraphiel Berhaneyesus.

நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை ஏரோது அரசர் கொல்லத் தேடியபோது, இயேசுவுக்கு இரண்டாவது இல்லமாக அமைந்த ஆப்ரிக்க கண்டத்திற்கு திருத்தந்தை வருகை தருவதால் ஆப்ரிக்கர்கள் மதிப்பு பெறுகின்றனர் என்றும் Addis Abeba பேராயர் கர்தினால் Berhaneyesus கூறியுள்ளார்.

AMECEA கூட்டமைப்பின் செயலகம் அமைந்துள்ள கென்யாவுக்கு முதலில் வருவதுடன் இத்திருத்தூதுப் பயணம் தொடங்குகின்றது என்றும், இக்கூட்டமைப்பில் ஆப்ரிக்காவின் கொம்பு நாடுகள், கிழக்கு ஆப்ரிக்கா, Djibouti, Somalia என்று 11 நாடுகள் உள்ளன. அனைத்து நாடுகளின் மக்களும் திருத்தந்தைக்காகச் செபிக்கின்றனர் என்றும் அவ்வறிக்கை தெரிவிக்கின்றது.

ஆப்ரிக்கர்கள் பொதுவாக வாழ்வையும், குடும்ப வாழ்வையும், குறிப்பாக கூட்டுக் குடும்பங்களையும் அன்புகூருபவர்கள், வயதானவர்கள், விருந்தினர்கள், இன்னும், விலங்குகள், சுற்றுச்சூழலை மிகவும் மதிப்பவர்கள், இந்த நல்ல நேர்மறை விழுமியங்களை பரப்ப விரும்புகிறோம் என்றும் கூறுகின்றது அவ்வறிக்கை.

அதேநேரம், சிறார் படைவீரர்கள், ஆவணங்கள் இல்லாத குடியேற்றதாரர், பாலியல் தொழிலுக்காக அல்லது சட்டத்திற்குப் புறம்பே இடம்பெறும் மனித வர்த்தகம் உட்பட சில சமூகத் தீமைகளைக் களைய ஆயர்கள் முயற்சிக்கின்றனர் என்றும் அவ்வறிக்கை மேலும் கூறுகின்றது. மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது வாழ்நாளில் இதுவரை ஆப்ரிக்காவுக்குச் சென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.