2015-11-21 14:51:00

கிறிஸ்து அரசர் பெருவிழா : ஞாயிறு சிந்தனை


இந்த ஞாயிறு, கிறிஸ்து அரசர் திருநாளை நாம் கொண்டாடுகிறோம். இந்தத் திருநாளைப் பற்றி நினைக்கும்போது, நமக்குள் ஒரு சங்கடம் எழ வாய்ப்புண்டு. அதை முதலில் சிந்திப்போம். கிறிஸ்துவைப் பலகோணங்களில் நினைத்துப் பார்த்திருக்கிறோம், தியானித்திருக்கிறோம். ஆயன், மீட்பர், வழி, ஒளி, வாழ்வு, உணவு, என்று பல கோணங்களில் கிறிஸ்துவை எண்ணிப்பார்க்கும்போது, மனநிறைவு பெறுகிறோம். ஆனால், அரசரான கிறிஸ்து அல்லது கிறிஸ்து அரசர் என்ற எண்ணம், மனதில் சங்கடங்களை விதைக்கிறது. ஏன் இந்த சங்கடம் என்று சிந்திக்கும்போது, ஓர் உண்மை புலப்படுகிறது. சங்கடம் ‘கிறிஸ்து’ என்ற வார்த்தையில் அல்ல, ‘அரசர்’ என்ற வார்த்தையில்தான்.

அரசர் என்றதும், மனதில் எழும் எண்ணங்கள், மனத்திரையில் தோன்றும் காட்சிகள்தாம் இந்தச் சங்கடத்தின் முக்கிய காரணம். அரசர் என்றால்?... ராஜாதி ராஜ, ராஜ மார்த்தாண்ட, ராஜ கம்பீர, ராஜ பராக்கிரம,... என்ற அர்த்தமற்ற பல அடைமொழிகளைச் சுமந்துத் திரியும் உருவம்... பட்டாடையும், வைரமும் உடுத்தி, பலரது தோள்களை அழுத்தி வதைக்கும் பல்லக்கில் அமர்ந்துவரும் உண்டு கொழுத்த உருவம்... ஆயிரமாயிரம் அப்பாவி மக்களின் சடலங்களைப் படிக்கற்களாக்கி, அரியணை ஏறிய அரக்க உருவம்... அரசர் என்றதும் கும்பலாய், குப்பையாய் வரும் இந்தக் கற்பனைக்கும், இயேசுவுக்கும் எள்ளளவும் சம்பந்தமில்லையே. பிறகு, எப்படி இயேசுவை அரசர் என்று சொல்வது? சங்கடத்தின் அடிப்படை, இதுதான்.

அரசர் என்ற சொல்லுக்கு நாம் தரும் வழக்கமான, ஆனால், குறுகலான இந்த இலக்கணத்தை வைத்துப் பார்த்தால், இயேசு கட்டாயம் ஓர் அரசர் அல்ல. ஆனால், மற்றொரு கோணத்தில், இயேசுவும் ஓர் அரசர், ஓர் அரசை நிறுவியவர். அவர் நிறுவிய அரசுக்கு நிலப்பரப்பு கிடையாது... அப்பாடா, பாதி பிரச்சனை இதிலேயேத் தீர்ந்துவிட்டது. நிலம் இல்லை என்றால், போர் இல்லை, போட்டிகள் இல்லை, அதைப் பாதுகாக்கக் கோட்டை, கொத்தளங்கள் தேவையில்லை, படைபலம் தேவையில்லை... எதுவுமே தேவையில்லை.

இன்னும் ஆழமான ஓர் உண்மை இதில் என்னவென்றால், எதுவுமே தேவையில்லாமல், இறைவன் ஒருவரே தேவை, அவர் ஒருவரே போதும் என்று சொல்லக்கூடிய மனங்களில் மட்டுமே இந்த அரசு நிறுவப்படும். யார் பெரியவர் என்ற எண்ணமே இல்லாத இந்த அரசில், எல்லாருக்கும் அரியணை உண்டு, எல்லாரும் இங்கு அரசர்கள்... இந்த அரசர்கள் மத்தியில், இயேசு, ஓர் உயர்ந்த, நடுநாயகமான அரியணையில் வீற்றிருப்பார் என்று நாம் தேடினால், ஏமாந்துபோவோம். காரணம்?... அவர் நமக்குமுன் மண்டியிட்டு, நம் காலடிகளைக் கழுவிக்கொண்டிருப்பார். மக்கள் அனைவரையும் அரியணை ஏற்றி, அதன் விளைவாக, அம்மக்களின் மனம் எனும் அரியணையில் அமரும் இயேசு என்ற மன்னரின் அரசுத்தன்மையைக் கொண்டாடத்தான், இந்த கிறிஸ்து அரசர் திருநாள்.

‘ராஜாதி ராஜ’ என்று நீட்டி முழக்கிக்கொண்டு, தன்னை மட்டும் அரியணை ஏற்றிக் கொள்ளும் அரசர்களும் உண்டு... எல்லாரையும் மன்னர்களாக்கி, அனைவருக்கும் மகுடம் சூட்டி மகிழும் அரசர்களும் உண்டு. இருவகை அரசுகள், இருவகை அரசர்கள். இந்த இரு வேறு அரசுகளின் பிரதிநிதிகளான - பிலாத்துவையும், இயேசுவையும் இணைத்து சிந்திக்க, இன்றைய நற்செய்தி ஒரு வாய்ப்பைத் தருகிறது. இந்த பிலாத்து யார் என்று புரிந்துகொண்டால், இயேசு யார் என்று, அதுவும் இயேசு எந்த வகையில் அரசர் என்று, புரிந்துகொள்ள உதவியாக இருக்கும்.

இந்த பிலாத்து யார்?

சீசரின் கைபொம்மை இந்த பிலாத்து. இவரது முக்கிய வேலையே, யூதர்களிடம் வரி வசூலித்து உரோமைக்கு அனுப்புவது.. தன் ஆளுகைக்கு உட்பட்ட யூதப் பகுதியில் எந்த விதக் கலகமும் இல்லாமல் பார்த்துக்கொள்வது, கலகம் என்று எழுந்தால், எள்ளளவும் தயக்கமில்லாமல், கொடூரமாக அதை அடக்குவது... இந்தப் பதவிக்கு வர பிலாத்து பல பாடுகள் படவேண்டியிருந்தது. அவரது கணக்குப்படி, அவர் அடையவேண்டிய பதவிகள் இன்னும் பல உள்ளன. இறுதியாக, சீசரின் வலது கையாக மாறவேண்டும், முடிந்தால் சீசராகவே மாறவேண்டும். அதற்காக எதையும் செய்யத் துணிந்தவர், பிலாத்து. பதவி ஒன்றே இரவும், பகலும் அவர் சிந்தனையை, மனதை ஆக்ரமித்ததால், வேறு எத்தனையோ உண்மைகளுக்கு அவர் வாழ்வில் இடமில்லாமல் போய்விட்டது. இப்போது, அந்த மற்ற உண்மைகளை நினைத்துப்பார்க்க, அவருடைய மனசாட்சியைத் தட்டி எழுப்ப ஒரு சவால் வந்திருக்கிறது. அதுவும் பரிதாபமாக, குற்றவாளியென்று அவர் முன்னால் நிறுத்தப்பட்டுள்ள ஒரு தச்சனின் மகனான இயேசுவின் வழியே வந்திருக்கும் சவால் அது.

இன்றைய நற்செய்தியில் சித்திரிக்கப்பட்டிருக்கும் இக்காட்சியில், யார் உண்மையிலேயே சக்தி வாய்ந்தவர், யார் பெரியவர் என்பதில் இன்னும் சந்தேகமா? தன் மனசாட்சியும், மனைவியும் கூறும் உண்மைகளைக் காண மறுத்து, எப்போது தன் பதவி போய்விடுமோ என்ற பயத்தில், அரியணையில் தன்னையே இறுக்கமாக அறைந்துகொண்ட பிலாத்தா? அல்லது, பதவி என்ன... உயிரே பறிபோனாலும் உண்மையை நிலைநாட்டுவதே முக்கியம் என்று, பதட்டம் ஏதுமின்றி நிமிர்ந்து நிற்கும் ஏழை இளைஞன் இயேசுவா? யார் பெரியவர்? யார் உண்மையில் அரசர்? இந்தக் கேள்வியின் விடை, அனைவருக்கும் தெரிந்ததே!

சுயநலம் என்ற சுடுகாட்டில் தன்னையே புதைத்துக்கொண்டு, அதுவே நிரந்தரமான வாழ்க்கை என்று, எண்ணிக்கொண்டிருந்த பிலாத்து, இன்றைய உலகின் பல தலைவர்களை நம் நினைவுக்குக் கொணர்கிறார். மற்றவர்களை அடிபணியச் செய்து, அல்லது, அடிபணிய மறுத்தவர்களை சடலங்களாக்கி, அவர்கள் மீது ஏறிச்சென்று, தங்கள் அரியணையில் அமர்ந்துள்ள ஆயிரமாயிரம் தலைவர்களை நாம் அறிவோம். கொள்கை என்ற பெயரில், மதம் என்ற பெயரில், இவ்வுலகில், இவர்கள் விதைப்பதெல்லாம், வெறுப்பும், வேதனையும்தான். நவம்பர் 13ம் தேதி, இந்த வேதனை வரலாற்றின் ஒரு பக்கம் பாரிஸ் மாநகரில், இரத்தத்தால் எழுதப்பட்டது. ISIS தீவிரவாதிகள், இஸ்லாமிய அரசை நிலைநாட்ட, கட்டுப்பாடற்ற வெறிச் செயல்களை ஒவ்வொரு நாளும் செய்து வருகின்றனர். ஆளுநர் பிலாத்தின் வாரிசுகளான இவர்கள், அதிகாரவெறியுடன் அலைவது, இவ்வுலகிற்கு பெரும் ஆபத்து.

பிலாத்தின் எதிர் துருவமான இயேசுவின் பிரதிநிதிகளும் இவ்வுலகில் இன்று உள்ளனர் என்பதற்கு, மியான்மார் நாட்டில் மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள ஆங் சான் சூசி (Aung San Suu Kyi) அவர்கள் ஓர் உன்னத எடுத்துக்காட்டு. 25 ஆண்டுகளாக இராணுவ ஆட்சியில் சிக்கித் தவித்த மியான்மார் மக்கள், தங்கள் தலைவியை தேர்ந்தெடுத்துள்ளனர். பாரிஸ் படுகொலைகளும், மியான்மார் தேர்தல் முடிவுகளும் ஒரே வாரத்தில் வெளிவந்துள்ளது, உண்மையான தலைமை, அரசு இவற்றைக் குறித்த பாடங்களை நமக்குச் சொல்லித் தருகின்றது.

மியான்மார் நாட்டில் மக்கள் பணியில் ஈடுபட்டுள்ள ஓர் இயேசு சபை நண்பர், அருள்பணி அமல்ராஜ் அவர்கள், அந்நாட்டின் புதிய விடிவெள்ளியாக எழுந்துள்ள ஆங் சான் சூசி அவர்களைக் குறித்து ஒரு கட்டுரையை இணையதள பத்திரிகை ஒன்றில் (EurekaStreet.com) வெளியிட்டுள்ளார். அந்தக் கட்டுரையின் ஒரு சில வரிகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்:

"மியான்மாரின் தேர்தல் முடிவுகள், அந்நாட்டின் எல்லைகளைக் கடந்து, உலகினர் கவனத்தை ஈர்த்துள்ளன. பார்ப்பதற்கு, மெலிந்து, சக்தியற்று காணப்படும் ஒரு பெண், ஆயுதம் ஏந்தாத வெறும் கரங்களைக் கொண்டு, சர்வாதிகாரத்தை சிதறடித்துள்ளார் என்பது, அதிசயமான வரலாறு. உலகம் இத்தருணத்தை ஆனந்தமாய் அசைபோடுகிறது. இது ஒரு காந்தியின் தருணம்; இது ஒரு மண்டேலாவின் தருணம்.

இஸ்லாமிய அரசின் கொடூரங்கள், மத்தியக் கிழக்குப் பகுதியின் வன்முறைகள் நிறைந்த இன்றையக் காலக்கட்டத்தில், கிழக்கு நாடுகளிலிருந்து உதித்துள்ள ஒரு பெண், ஆயுதம் ஏதுமற்ற அகிம்சையின் வெற்றியை, மீண்டும் ஒரு முறை அகிலத்திற்குப் பறைசாற்றியிருக்கிறார்."

கடந்த 25 ஆண்டுகளாக, மக்கள் மனங்களில் அரியணை கொண்டு, அமைதியான ஒரு மக்கள் புரட்சிக்குக் காரணமாக இருந்த உன்னதத் தலைவி, ஆங் சான் சூசி அவர்களுக்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம். இயேசுவை அரசர் என்று ஏற்றுக்கொள்ளவும், அவர் நிறுவவந்த அரசைப் புரிந்துகொள்ளவும், உதவியாக இருக்கும் ஆங் சான் சூசி போன்ற தலைவர்களுக்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம். அதே வேளையில், வெறுப்பையும், பழியுணர்வையும் இறைவன் பெயரால் தூண்டிவிடும் சுயநல அரக்கர்களின் அறிவுக் கண்களை இறைவன் திறக்கவேண்டும் என்றும் உருக்கமாக மன்றாடுவோம்.

இறுதியாக, ஓர் எண்ணம்... "அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி" என்று அரசத் துதிபாடும் பழமொழியை நாம் அறிவோம். ஆனால், மற்றொரு கோணத்தில் சிந்தித்தால், "குடிகள் எவ்வழி, அரசன் அவ்வழி" என்றும் சொல்லத் தோன்றுகிறது. அதாவது, குடிகள் அடிமைகளாக வாழ தீர்மானித்துவிட்டால், அரசர்கள் கட்டுப்பாடற்ற அதிகாரத்துடன் ஆள்வர் என்பதும் உண்மை. இந்த எண்ணத்தை, விவிலிய ஆய்வாளரான அருள்பணி இயேசு கருணா அவர்கள் இவ்விதம் கூறியுள்ளார்:

அடிமைகளாக வாழ விரும்புகிறவர்களுக்கு, அதாவது, தங்களைத் தாங்களே ஆளத் தெரியாது என்று தீர்மானித்தவர்களுக்குத்தான் அரசன் தேவை. இரஷ்ய எழுத்தாளர் டால்ஸ்டாய் அவர்கள் எழுதிய 'உயிர்ப்பு' (Resurrection) என்ற நாவலின் ஓரிடத்தில் அவர் அழகாகச் சொல்வார்: “எல்லாருக்கும் எல்லாம் என்று இருந்ததை, ஒருவன் மட்டும் எடுத்துக்கொண்டு, எடுத்துக்கொண்ட அவன், மற்றவர் சொத்தில் வாழ்ந்துகொண்டு, மற்றவர்களுக்குச் சட்டம் இயற்றி, அந்தச் சட்டத்தைக் கொண்டு மற்றவர்களைத் தண்டிப்பான். எல்லாருக்கும் எல்லாம் என இருந்தால், அரசர்களுக்கு வேலையில்லை. அப்படி ஒரு நிலை வந்துவிடக் கூடாது என்பதற்காகவே, அரசர்கள், எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கவிடுவதில்லை.”

இத்தகைய அரசர்கள், தலைவர்கள் நமக்குத் தேவையா? 'தீமை இல்லாத அதிகாரம் என்று ஒன்று இல்லவே இல்லை' என்று சொல்வார், புனித தாமஸ் அக்வினாஸ். எல்லா அதிகாரத்திலும் தீமை உண்டு. சுயநலம் இல்லாத அரசர்களையோ, தலைவர்களையோ காண்பது, மிக அரிது.

தமிழகத்தின் வெள்ளப்பெருக்கிலும், மக்களின் துயரிலும், பசியிலும், வறுமையிலும் தங்களின் இன்பத்தையும், பாதுகாப்பையும் முதன்மைப்படுத்தும் அம்மாக்களும், அய்யாக்களும்தான் இன்று அரசர்களாக இருக்கிறார்கள். அவர்கள் என்ன வேலை செய்கிறார்கள்? அவர்களுக்குக் கீழ் இருப்பவர்கள்தாம் விழுந்து, விழுந்து – சில வேளைகளில், காலில் விழுந்து - வேலை செய்கிறார்கள்.

நாம் அடிமைகளாக இருக்கும்வரை அரசர்கள் இருக்கவே செய்வார்கள். அம்மாக்களும், அய்யாக்களும், தலைவர்களும், அரசர்களும் 'அவசியமான தீமை' (necessary evil) - இல்லையா? (அருள்பணி யேசு கருணா அவர்களின் சிந்தனைகளிலிருந்து...)

கிறிஸ்துவை அரசர் என்று கொண்டாடும் இந்த விழாவன்று, அடிமைத் தளைகளில் சுகம் கண்டு, தலைவர்களையும், தலைவிகளையும் துதிபாடி வாழும் மக்கள், தங்கள் தவறுகளிலிருந்து விழித்தேழவேண்டும் என்றும், உண்மையான தலைவர்களை அடையாளம் கண்டு, அவர்களுடன் இணைந்து உழைக்க முன்வர வேண்டும் என்றும், கிறிஸ்து அரசரிடம் வேண்டுவோம்.

பதவி, அதிகாரம் என்ற பாரங்களால் உண்மை இவ்வுலகில் ஒவ்வொரு நாளும் நசுக்கப்பட்டு கொலையாகிறது. பொய்மைதான் வாழ்வதற்கு ஒரே வழி என்று எண்ணுமளவுக்கு உண்மைகள் ஒவ்வொரு நாளும் புதைக்கப்படுகின்றன. இந்நிலையில் நாம் கொண்டாடும் கிறிஸ்து அரசர் திருநாள், நமக்குச் சொல்லித்தரும் ஓர் உயர்ந்த பாடம் என்ன?

உண்மைக்காக வாழ்ந்தவர்கள், இன்றும் வாழ்பவர்கள் மனிதர்களால் செய்யப்படும் அரியணைகளில் ஏற முடியாது. அவர்களில் பலர், மனிதர்கள் உருவாக்கும் சிலுவைகளில் மட்டுமே ஏற்றப்படுவார்கள். ஆனால், அவர்கள் அனைவருமே இறைவனின் அரசில் என்றென்றும் அரியணையில் அமர்வர் என்ற உண்மையே, இந்தத் திருநாள் நமக்குச் சொல்லித்தரும் பாடம். இப்பாடத்தைப் பயில, கிறிஸ்து அரசருக்கு இவ்வுலகம் தந்த சிலுவை என்ற அரியணையை நாமும் நம்பிக்கையுடன் அணுகி வருவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.