2015-11-21 15:48:00

உலக மீன்பண்ணைகள் தினம், திருப்பீட செய்தி


நவ.21,2015. மீன்களை வாங்குபவர்கள், மீன்களின் தரத்தை நோக்குவது மட்டுமல்லாமல், மீன்பிடித் தொழிலிலும், மீன் பண்ணைகளிலும் நிலவும் மனித மற்றும் தொழில் நிலைமைகள் குறித்து விழிப்பாய் இருக்குமாறு திருப்பீடம் விண்ணப்பித்துள்ளது.

நவம்பர் 21, இச்சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக மீன் பண்ணைகள் தினத்திற்கென செய்தி வெளியிட்டுள்ள, திருப்பீட குடிபெயர்வோர் மேய்ப்புப்பணி அவை,  மீன் பண்ணைகளில் வேலைசெய்பவரின் மனித மாண்பு காக்கப்படுவதற்கு, பல்வேறு சமூகநல சக்திகள் ஒன்றிணைந்து செயல்படுமாறு கேட்டுள்ளது.

2007ம் ஆண்டில், ILO உலக தொழில் நிறுவனத்தின் உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டுள்ள மீன்பிடித் தொழிலாளர்கள் ஒப்பந்தத்தை முழுமையாக அமல்படுத்துவதற்கு, கடல் சார்ந்த அரசு-சாரா நிறுவனங்கள் அவ்வுறுப்பினர்களை வலியுறுத்துமாறும் பரிந்துரைத்துள்ளது அத்திருப்பீட அவை.

இன்று உலகில் ஐந்து கோடிக்கு மேற்பட்ட மக்களுக்கு, உணவுக்கும், வேலைவாய்ப்புக்கும் காரணமாக அமைந்துள்ள ஆறுகள், ஏரிகள், கடல்கள், மற்றும் பெருங்கடல்கள், கட்டுப்பாடற்ற மீன்பிடித் தொழில்களால் பாதிக்கப்பட்டு, சில உயிரினங்களின் இன அழிவுக்கும் அச்சுறுத்தலை முன்வைத்துள்ளன என்ற கவலையும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பீட குடிபெயர்வோர் மேய்ப்புப்பணி அவைத் தலைவர் கர்தினால் Antonio Maria Vegliò, அதன் செயலர் ஆயர் Joseph Kalathiparambil  ஆகிய இருவரும் இச்செய்தியில் கையெழுத்திட்டுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.