2015-11-21 16:08:00

அருள்பணியாளர் தாக்கப்பட்டதைக் கண்டித்து டாக்காவில் பேரணி


நவ.21,2015. பங்களாதேஷ் நாட்டில் ஐ.எஸ். இஸ்லாமியத் தீவிரவாதிகளால் கத்தோலிக்க அருள்பணியாளர் ஒருவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து, தலைநகர் டாக்காவில் அந்நாட்டுக் கிறிஸ்தவர்கள் இச்சனிக்கிழமையன்று கண்டன பேரணி ஒன்றை நடத்தினர்.

பங்களாதேஷ் கத்தோலிக்க ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி ஆணக் குழுவும், அந்நாட்டுக் கிறிஸ்தவக் கழகமும் இணைந்து இப்பேரணியை நடத்தின.

இத்தாலிய அருள்பணியாளர் பரோலாரி பியெரோ அவர்கள் கழுத்திலும், தலையிலும் பலமுறைகள் சுடப்பட்டது குறித்துப் பேசிய, பங்களாதேஷ் ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி ஆணக் குழுச் செயலர் அருள்பணி தெயோபில் நொரேக் அவர்கள், திருஅவை மற்றும் மறைபோதகர்களைத் தாக்குவதன் வழியாக தீவிரவாதிகள் எதைச் சாதிக்க விரும்புகிறார்கள் என்பது தெரியவில்லை என்று கூறினார்.

இவ்விவகாரம் குறித்து தெளிவான விசாரணைகள் நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமென்று அரசை வலியுறுத்தி இருப்பதாகவும் அருள்பணி நொரேக் அவர்கள் கூறினார்.

பாப்பிறை மறைபோதக சபையின் 64 வயது நிரம்பிய அருள்பணியாளர் பியெரோ அவர்கள், கடந்த புதனன்று(நவ.18) தினாஜ்பூரில் மூன்று பேரால் கழுத்திலும், தலையிலும் பல தடவைகள் சுடப்பட்டார். தினாஜ்பூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் தற்போது, டாக்கா இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அருள்பணியாளர் பியெரோ அவர்கள் தாக்கப்பட்டதற்கு ஐ.எஸ். இஸ்லாமிய அரசு பொறுப்பேற்றுள்ளது. மேலும், கடந்த செப்டம்பர் 28ம் தேதி டாக்காவில் இத்தாலிய பிறரன்புப் பணியாளர் Cesare Tabella அவர்கள் கொல்லப்பட்டதற்கும் இந்த ஜிகாதி குழுவே பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.