2015-11-20 16:36:00

திருத்தந்தையின் ஆப்ரிக்கத் திருப்பயணத்தில் மாற்றம் இல்லை


நவ.20,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மத்திய ஆப்ரிக்கத் திருத்தூதுப் பயணம் ஏற்கனவே திட்டமிட்டபடி இடம்பெறும் என்று திருப்பீடம் அறிவித்துள்ளது.

இம்மாதம் 25ம் தேதி முதல் 30ம் தேதி வரை கென்யா, உகாண்டா, மத்திய ஆப்ரிக்க குடியரசு ஆகிய நாடுகளின் தலைநகரங்களில் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளும் திருத்தந்தை, புலம்பெயர்ந்தவர் முகாம், Bangui மசூதி போன்றவற்றுக்குச் செல்வது உட்பட அனைத்தும் ஏற்கனவே திட்டமிட்டபடி நடைபெறும் என்று அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி அவர்கள் அறிவித்தார்.

இத்திருத்தூதுப் பயணத்தில் திருத்தந்தை ஆப்ரிக்காவில் புனிதக் கதவைத் திறந்து வைத்து யூபிலி ஆண்டைத் தொடங்கி வைப்பார் என்றும், ஆங்கிலம், ப்ரெஞ்ச், இஸ்பானியம், இத்தாலியம் ஆகிய மொழிகளில் உரை நிகழ்த்துவார் என்றும் திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் அருள்பணி லொம்பார்தி அவர்கள் அறிவித்தார். இது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 11வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணமாக அமையும்  என்றும், இதற்கு முன்னர் இந்நாடுகளுக்கு இரு திருத்தந்தையர்கள் சென்றுள்ளனர் என்றும் கூறினார் அருள்பணி லொம்பார்தி. 1969ம் ஆண்டில் அருளாளர் திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள் சென்றார். மேலும், புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் தனது நீண்ட பணிக்காலத்தில், 1980, 1985 மற்றும் 1995ல் கென்யா, 1993ல் உகாண்டா, 1975ல் மத்திய ஆப்ரிக்க குடியரசு உட்பட ஏறக்குறைய 42 ஆப்ரிக்க நாடுகளுக்குச் சென்றுள்ளார்.

மேலும், வத்திக்கான் காவல்துறை அதிகாரி ஜானி அவர்கள் முன்கூட்டியே சென்று நிலைமைகளை ஆய்வு செய்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.