2015-11-20 16:08:00

திருத்தந்தை : திருஅவை, இலஞ்சத்தை வழிபடக் கூடாது


நவ.20,2015. பணத்தாலும், அதிகாரத்தாலும், இலஞ்சத்தை வழிபடுவதாலும் திருஅவை ஆட்கொள்ளப்படக் கூடாது, மாறாக, திருஅவை, தனது வல்லமையையும் மகிழ்வையும் கிறிஸ்துவின் திருச்சொற்களிலிருந்து பெற வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

வத்திக்கானிலுள்ள சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இவ்வெள்ளி காலையில் நிறைவேற்றிய திருப்பலி மறையுரையில் இவ்வாறு கூறிய திருத்தந்தை, திருஅவைக்குள் இலஞ்ச ஊழல் ஆபத்து எப்போதும் இருக்கின்றது என்று கூறினார்.

வேற்றுத் தெய்வத்தை வழிபட்டவர் மற்றும் உலகப் போக்கினால் முழுமையாய் ஆட்கொள்ளப்பட்டவர்களால் அழிக்கப்பட்ட எருசலேம் புனித ஆலயம் மீண்டும் திருப்பொழிவு செய்யப்பட்டதால் மக்கள் அடைந்த மகிழ்வைப் பற்றி விளக்கும் மக்கபேயர் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இத்திருப்பலியின் முதல் வாசகத்தை (1மக்கபேயர்4: 36-37,52-59) மையப்படுத்தி, தன் மறையுரையை வழங்கிய திருத்தந்தை, தங்களின் தனி அடையாளம் மீண்டும் உயிரூட்டம் பெற்றதால் இறைமக்கள் அகமகிழ்ந்தனர் என்று உரைத்தார்.

மக்கபேயர் காலத்தில், உலகப் போக்கு நிறைந்த ஆசைகள் வாழும் கடவுளின் இடத்தைப் பிடித்திருந்தது, ஆயினும் இக்காலத்தில் இது முற்றிலும் மற்றொரு வழியில் இடம்பெறுகின்றது என்று வருத்தத்துடன் குறிப்பிட்டார் திருத்தந்தை.

ஆலயக் குருக்களும் மறைநூல் அறிஞர்களும் பொருள்களை மாற்றினர் என்று இத்திருப்பலியின் நற்செய்தி கூறுகிறது, அவர்கள் ஆலயத்திற்கு அவமரியாதை செய்தனர், ஆலயம் திருஅவையின் அடையாளமாக உள்ளது, திருஅவை எப்போதும், ஆம், எப்போதும் உலகப்போக்கு மற்றும் அதிகாரத்தின் சோதனைக்கு உள்ளாகின்றது என்று கூறினார் திருத்தந்தை

இயேசு, குருக்களையும் மறைநூல் அறிஞர்களையும் ஆலயத்தைவிட்டு விரட்டவில்லை, ஆனால், அங்கே வர்த்தகம் செய்தவர்களையே, ஆலயத்தின் வணிகர்களையே விரட்டினார் என்றும், ஆலயத் தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞர்களும் இந்த வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தனர் என்றுரைத்த திருத்தந்தை, இது புனித இலஞ்சம் என்று குறிப்பிட்டார். இயேசுவின் வல்லமையை, அவரின் அன்பிலும், திருச்சொற்களிலும் காண வேண்டும், இயேசு இருக்குமிடத்தில் உலகப்போக்குக்கு இடமில்லை, இது நம் ஒவ்வொருவருக்கும் சவால், இந்தப் போராட்டத்தையே திருஅவை தினமும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்றும் கூறினார் திருத்தந்தை.

இக்காலத்திய மறைசாட்சிகளை நம் இதயத்தில் தாங்கி, திருஅவைக்காக நாம் செபிக்க வேண்டும் என்று மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.