2015-11-20 16:08:00

சிறாரின் சுதந்திரத்தைக் காப்போம், பான் கி மூன்


நவ.20,2015. வருங்காலத்தில் சிறார் எவரும் தங்களின் சுதந்திரத்தை இழக்காமல் இருப்பதற்கு, அனைத்துலக சிறார் தினமான இவ்வெள்ளியன்று உறுதி எடுப்போம் என்று கூறியுள்ளார் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன்.

சிறாரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு உறுதியளித்துள்ள உலக சமுதாயம், அடிக்கடி மறக்கப்பட்டு அல்லது மேம்போக்காகப் பார்க்கப்படும் சிறாரின் உரிமைகளையும், சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்போம் என்று, அனைத்துலக சிறார் தினச் செய்தியில் வலியுறுத்தியுள்ளார் பான் கி மூன்.

இன்று உலகில் ஆறு கோடி மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு கட்டாயமாக வெளியேறியுள்ளனர். இது, 2ம் உலகப் போருக்குப் பின்னர் பெரிய எண்ணிக்கையாக உள்ளது. மேலும், அடக்குமுறை, பயங்கரவாதம், வன்முறை, மற்றும் பிற மனித உரிமை மீறல்களால் புலம்பெயரும் மக்களில் ஏறக்குறைய பாதிப்பேர் சிறார் என்றும்  தனது செய்தியில் கூறியுள்ளார் பான் கி மூன்.

1989ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி, சிறாரின் உரிமைகள் அனைத்துலக ஒப்பந்தம் ஐ.நா. பொது அவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அந்நாளே, அனைத்துலக சிறார் தினமாகவும் கடைப்பிடிக்கப்படுகிறது.  

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.