2015-11-20 16:12:00

அருள்பணியாளர்கள் பயத்திலும் பதட்டத்திலும் இருக்கக் கூடாது


நவ.20,2015. ஒரு நல்ல அருள்பணியாளர் அமைதியான சூழலை உருவாக்குகிறார் என்றும், ஓர் அருள்பணியாளர் அடிக்கடி வருத்தத்திலும், பதட்டத்திலும் அல்லது கடினப் பண்புடனும் இருக்கும்போது, அது அவருக்கும், அவரின் மக்களுக்கும் நல்ல பயன்தராது  என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தின் பயனாக உருவாக்கப்பட்ட, திருப்பணி பயிற்சி பற்றிய விதித் தொகுப்பு(Optatam Totius), திருப்பணியாளர்களின் பணியும் வாழ்வும்(Presbyterorum Ordinis) ஆகிய இரு ஏடுகள் வெளியிடப்பட்டதன் 50ம் ஆண்டு நிறைவையொட்டி, திருப்பீட குருக்கள் பேராயம், உரோம் உர்பானியா பாப்பிறைப் பல்கலைக்கழகத்தில் இவ்வியாழன், இவ்வெள்ளி ஆகிய இரு நாள்கள் நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்ட பிரதிநிதிகளைச் சந்தித்த திருத்தந்தை இவ்வாறு கூறினார். "ஒரே அழைப்பு, ஒரே உருவாக்கம், ஒரே பணி" என்ற தலைப்பில் இக்கருத்தரங்கு நடைபெற்றது.

திருப்பணியாளர்களின் பணியும் வாழ்வும் என்ற தொகுப்பிலுள்ள, மனிதர்களிடமிருந்து தேர்ந்தெடுத்த, மனிதர்களுக்காக திருப்பொழிவு செய்யப்பட்ட, பிற மனிதர் மத்தியில் வாழ்கின்ற ஆகிய சொற்றொடர்களை மையப்படுத்தி தனது சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டார் திருத்தந்தை.

அருள்பணியாளர்களுக்கும் ஒரு சுயசரிதை உள்ளது, அவர்கள் திருப்பொழிவு நாளில் பேராலயத்தில் திடீரென தளிர்விடும் காளான்கள் அல்ல என்றும், பயிற்சியாளர்கள் இதனைக் கருத்தில் கொண்டு பயிற்சியளிக்க வேண்டும் என்றும் திருத்தந்தை கூறினார்.

ஓர் அருள்பணியாளர் அமைதியின் மனிதர், கடின நேரங்களிலும் இவரை அமைதி சூழ்ந்திருக்கும் என்று கூறிய திருத்தந்தை, ஓர் அருள்பணியாளர் அடிக்கடி வருத்தமாகவும், பதட்டமாகவும் இருப்பது சாதாரணமானதுதான், ஆனால் இது அவருக்கோ, அவரின் மக்களுக்கோ பலனளிக்காது என்றும் கூறினார். அருள்பணியாளர்கள் தங்கள் சகோதர, சகோதரிகளுக்குப் பணி செய்ய வேண்டும் என்றும், அருள்பணியாளர்கள் தங்களுக்காக வாழ்பவர்கள் அல்ல என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.