2015-11-19 15:53:00

புனித பேதுரு பசிலிக்கா புனிதக் கதவின் சுவர் நீக்கப்பட்டது


நவ.19,2015. புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தின் முகப்பில் அமைந்துள்ள புனிதக் கதவின் மீது கட்டப்பட்டிருந்த சுவர், இச்செவ்வாய் மாலையில், புனித பேதுரு பசிலிக்காவின் தலைமை அருள் பணியாளர், கர்தினால் ஆன்ஜெலோ கொமாஸ்த்ரி அவர்கள் முன்னிலையில் நீக்கப்பட்டது.

திருத்தந்தை புனித 2ம் ஜான்பால் அவர்கள் அறிவித்திருந்த 2000மாம் ஆண்டு யூபிலி கொண்டாட்டங்களின் இறுதியில், இப்புனிதக் கதவு முற்றிலும் மூடப்பட்டு, அதன் மீது ஆலயத்தின் உள்புறமாக, சுவர் ஒன்று கட்டப்பட்டது.

இரக்கத்தின் யூபிலி ஆண்டு  துவங்கவிருக்கும் வேளையில், இப்புனிதக் கதவை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாண்டு டிசம்பர் 8ம் தேதி திறப்பதற்கு ஏதுவாக, Recognitio, அதாவது, 'மீண்டும் அடையாளம் காணுதல்' என்ற ஒரு சடங்கின் வழியே, இக்கதவை மூடியிருந்த சுவர் அகற்றப்பட்டது.

இப்புனிதக் கதவைத் திறக்கும் சாவியும், 2000மாம் ஆண்டு நடைபெற்ற யூபிலியின் நினைவுப் பொருள்களும்  அடங்கிய ஒரு வெண்கலப் பெட்டி இச்சுவரிலிருந்து நீக்கப்பட்டு, பசிலிக்காவின் திருவழிபாடுகளுக்குப் பொறுப்பாகப் பணியாற்றும் அருள்பணி Guido Marini அவர்களிடம் அளிக்கப்பட்டது.

இரக்கத்தின் யூபிலி ஆண்டில் உரோம் நகரில் அமைத்துள்ள நான்கு பசிலிக்கா பேராலயங்களிலும் புனிதக் கதவுகள் திறக்கப்படும்.

இந்தச் சிறப்பு யூபிலி ஆண்டையொட்டி, உலகெங்கிலும் உள்ள மறைமாவட்ட பேராலயங்கள், மற்றும் உலகின் பல இடங்களில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்துள்ள திருத்தலங்களின் ஆலயங்கள் இவற்றில் புனிதக் கதவுகள் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.