2015-11-19 16:19:00

நிபந்தனை ஏதுமின்றி மன்னிக்க கர்தினால் கிரேசியஸ் அழைப்பு


நவ.19,2015. நிபந்தனை ஏதுமின்றி, அளவற்ற முறையில் மன்னிப்பது நம் விண்ணகத் தந்தையின் பண்பு என்பதால், அந்தப் பண்பை, அனைத்து கிறிஸ்தவர்களும் பின்பற்ற, இரக்கத்தின் யூபிலி ஆண்டு நமக்கு அழைப்பு விடுக்கிறது என்று மும்பை பேராயர், கர்தினால் ஆஸ்வால்ட் கிரேசியஸ் அவர்கள் கூறினார்.

இலத்தீன் வழிபாட்டு முறை இந்திய ஆயர் பேரவையின் தலைவரான கர்தினால் கிரேசியஸ் அவர்கள், நெருங்கிவரும் இரக்கத்தின் யூபிலி ஆண்டையொட்டி, ஆயர்கள், அருள் பணியாளர்கள், துறவியர் மற்றும் பொதுநிலையினர் ஆகிய அனைவருக்கும் அனுப்பியுள்ள ஒரு சுற்று மடலில் இவ்வாறு கூறியுள்ளார்.

'இரக்கத்தின் முகம்' என்று பொருள்படும் 'Misericordiae Vultus' என்ற தலைப்புடன், திருத்தந்தை பிரான்சிஸ்  அவர்கள் அறிவித்துள்ள இந்த யூபிலி ஆண்டில் இந்திய இலத்தீன் வழிபாட்டு முறை திருஅவை ஆற்றக்கூடிய பணிகளை 15 எண்ணங்களாக இம்மடலில் குறிப்பிட்டுள்ளார், கர்தினால் கிரேசியஸ்.

புனிதக் கதவைத் திறப்பது, உடல் அளவிலும், மனதளவிலும் இரக்கச் செயல்கள் மேற்கொள்வது, திருப்பயணம் செல்வது  என்ற பல முயற்சிகளைக் குறித்து கர்தினால் கிரேசியஸ் அவர்கள் இம்மடலில் விளக்கிக் கூறியுள்ளார்.

மேலும், இந்த யூபிலி ஆண்டில் வரும் தவக்காலத்தில், ஒப்புரவு அருள் அடையாளத்தைப் பெறுவது குறித்தும், இரக்கத்தின் அருள் பணியாளர்கள் என்று திருத்தந்தை அனுப்பவிருக்கும் பிரதிநிதிகள் குறித்தும் இம்மடலில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டிற்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உருவாக்கியுள்ள செபத்தை ஒவ்வொருவரும் அடிக்கடி பயன்படுத்தவேண்டும் என்ற வேண்டுகோளுடன், கர்தினால் கிரேசியஸ் அவர்கள் தன் சுற்றுமடலை நிறைவு செய்துள்ளார்.

ஆதாரம் : CCBI / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.