2015-11-19 15:38:00

திருத்தந்தை - படைப்பின் உரிமையாளர்கள் அல்ல, பொறுப்பாளர்கள்


நவ.19,2015. வரவேற்பது, கருணை காட்டுவது, புரிந்துகொள்வது, மன்னிப்பது ஆகியவை, இயேசுவின் அன்றாட வாழ்வில் வெளிப்பட்ட குணங்கள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நலவாழ்வுப் பணியாளர்களிடம் கூறினார்.

நலவாழ்வுப் பணியாளர்களின் திருப்பீட அவை முப்பதாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதையொட்டி வத்திக்கானுக்கு வருகை தந்துள்ள 500க்கும் அதிகமான நலவாழ்வுப் பணியாளர்களை இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, இவ்வாறு கூறினார்.

'வாழ்வின் நற்செய்தி' என்ற தலைப்பில் திருத்தந்தை புனித 2ம் ஜான்பால் அவர்கள் எழுதிய திருமடலின் 20ம் ஆண்டு நிறைவும், நலவாழ்வுப் பணியாளர் திருப்பீட அவையின் 30ம் ஆண்டு நிறைவும் இணைந்து வருவதை, தன் உரையின் துவக்கத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சிறப்பாக நினைவுகூர்ந்தார்.

நெருங்கிவரும் இரக்கத்தின் யூபிலி ஆண்டில், துன்புறும் சகோதர, சகோதரிகள் மீது தனி கவனம் செலுத்துவதன் வழியே, வாழ்வின் மீது நாம் கொண்டுள்ள மதிப்பையும், அன்பையும் உலகறியச் செய்யமுடியும் என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.

பயனுள்ளவர்கள், பயனற்றவர்கள் என்ற அளவுகோலைக் கொண்டு, செல்வம் மிகுந்த நாடுகள் அயலவரை எடைபோடும் வேளையில், இத்தகையக் கலாச்சாரத்தை முறியடிப்பது, கத்தோலிக்கத் திருஅவையின் முக்கியப் பணிகளில் ஒன்று என்று திருத்தந்தை தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

படைப்பின் உரிமையாளர்களாக அல்லாமல், பொறுப்பாளர்களாக நாம் நடந்துகொண்டால், மனிதர்கள் மீது மட்டுமல்ல, படைப்பு அனைத்தின் மீதும் தகுந்த அக்கறை காட்ட முடியும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரையில் வலியுறுத்தினார்.

நலவாழ்வுப் பணியாளர் திருப்பீட அவை மேற்கொண்டுள்ள இக்கூட்டத்தில், மனிதர்களின் உடல், மன நலன்களைப் பேணவும், படைப்பினைச் சரிவரப் பேணவும் தேவையான வழிமுறைகளை கலந்து பேசுவதற்கு தன் வாழ்த்துக்களைக் கூறி, திருத்தந்தை தன் உரையை நிறைவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.