2015-11-19 15:46:00

கடுகு சிறுத்தாலும் – மதித்து நடந்தால் மதிப்பு கிடைக்கும்


பழங்காலத்தில் முரட்டு மனிதர் ஒருவர் முடி திருத்தும் நிலையத்திற்கு கத்தியுடன் சென்றார். “எனக்கு மிகக் கச்சிதமாக சவரம் செய்ய வேண்டும். காயம் ஏதும் ஏற்பட்டுவிடக் கூடாது. ஒரு சின்ன வெட்டு ஏற்பட்டால்கூட இந்தக் கத்தியால் ஒரு போடு போட்டு விடுவேன்” என்று மிரட்டி கத்தியை மேஜை மீது வைத்தார். அந்நிலையத்தின் முதன்மைப் பணியாளர், “எனக்குக் கையில் பிடிப்பு இருக்கிறது, என்னால் முடியாது” என்று பின்வாங்கினார். பின்னர் முதலாவது உதவியாளரும் வெளிறிப்போய், “எனக்கு சளி, இருமல், அது உங்களுக்கும் தொற்றிக் கொள்ளும், எனவே இரண்டாவது உதவியாளர் உங்களுக்கு முகச் சவரம் செய்வார்” என்றார். அந்த உதவியாளரோ, நான் உங்களுக்குச் செய்கிறேன் என்று உற்சாகமாக வேலைக்குத் தயாரானார். என்மீது வெட்டுப்படாமல் பார்த்துக் கொள் என்றார் அந்த முரட்டு மனிதர். மிகவும் பொறுமையாக, நேர்த்தியாக, நுரை ததும்ப மளமளவென வழித்து அவருக்கு முகச் சவரத்தை முடித்தார் இரண்டாவது உதவியாளர். அந்த முரட்டு மனிதர் தன்னுடைய தாடையைத் தடவி திருப்தியடைந்து, நூறு ரூபாய் நோட்டை பரிசாக கொடுத்துவிட்டு, ஆமாம், எப்படி இவ்வளவு துணிச்சலாக என் கத்திக்குச் சிறிதும் அஞ்சாமல் செய்ய முன்வந்தாய் என்று கேட்டார். சார், இதில் எனக்கு ஒன்றும் ஆபத்தில்லை. நீங்கள்தான் ஆபத்தில் இருந்தீர்கள். நான் உங்களை எப்பொழுதாவது வெட்டியிருந்தால் என் கத்தி உங்கள் குரல்வளைக்கு இரண்டு அங்குலம் தொலைவில்தான் இருந்திருக்கும், ஆனால் உங்கள் கத்தியோ இரண்டு அடிக்கும் அதிகத் தொலைவில் இருந்ததே என்று பதில் சொன்னார். ஆம். எல்லாப் பணிகளிலும் சுகம் உண்டு, பொறுப்பும் உண்டு. மதித்து நடந்தால் மதிப்பு கிடைக்கும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.