2015-11-19 16:12:00

"ஒரே அழைப்பு, ஒரே உருவாக்கம், ஒரே பணி" – உரோம் கருத்தரங்கு


நவ.19,2015. இரண்டாம் வத்திக்கான் சங்கத்தில் பங்கேற்ற தந்தையர் அருள் பணியாளர் அழைப்பைக் குறித்து கூறியிருப்பவை நமக்கு ஒரு கருவூலமாக அமையவேண்டும் என்று திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் கூறினார்.

நவம்பர் 19, 20 ஆகிய இரு நாட்கள் உரோம் நகரின் உர்பானியா பாப்பிறைப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றுவரும் ஒரு கருத்தரங்கில் துவக்க உரை வழங்கிய கர்தினால் பரோலின் அவர்கள் இவ்வாறு கூறினார்.

இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் பயனாக உருவாக்கப்பட்ட Optatam Totius மற்றும் Presbyterorum Ordinis என்ற இரு ஏடுகளின் 50ம் ஆண்டு நிறைவையொட்டி, இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அருள் பணியாளர் ஒவ்வொருவரும் இரக்கத்தின் தூதர்களாகப் பணியாற்ற அழைக்கப்பட்டுள்ளனர் என்பதை வத்திக்கான் ஏடுகளும், திருத்தந்தையர் வழங்கியுள்ள திருமடல்களும் மீண்டும் மீண்டும் நமக்கு நினைவுறுத்துகின்றன என்று கூறிய கர்தினால் பரோலின் அவர்கள், வரவிருக்கும் இரக்கத்தின் யூபிலி அருள் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பான வாய்ப்பு என்று குறிப்பிட்டார்.

அருள் பணியாளர்களை மையப்படுத்தி, "ஒரே அழைப்பு, ஒரே உருவாக்கம், ஒரே பணி" என்ற தலைப்பில், நிகழும் இக்கருத்தரங்கில் உலகின் பல நாடுகளிலிருந்து வந்துள்ள ஆயர்களும், அருள் பணியாளர்களும் பங்கேற்கின்றனர்.

அருள் பணியாளர்கள் திருப்பேராயத்தின் தலைவர், கர்தினால் பென்யமினோ ஸ்டெல்லா (Beniamino Stella) அவர்களின் தலைமையில் இக்கருத்தரங்கு இவ்வியாழன், மற்றும் வெள்ளி ஆகிய நாட்கள் நடைபெறுகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.