2015-11-18 14:50:00

புதன் மறைக்கல்வி உரை – இதயக் கதவுகள் திறந்தே இருக்கட்டும்


நவ.,18,15. திருஅவையில் அறிவிக்கப்பட்டுள்ள‌, ‘இரக்கத்தின் யூபிலி ஆண்டு’ துவங்குவதற்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில், அந்த ஆண்டு குறித்தே தன் சிந்தனைகளை, இவ்வார புதன் மறைக்கல்வி உரையில் எடுத்தியம்பினார் திருத்தந்தை பிரான்சிஸ். டிசம்பர் 8ம் தேதி ஆரம்பிக்கப்பட உள்ள இந்த சிறப்பு யூபிலி ஆண்டின் முக்கியத்துவம் குறித்து இன்று நோக்குவோம் என தன் மறைக்கல்வி உரையைத் துவக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மேலும் தொடர்ந்தார்.

மிகப்பெரும் திறந்த கதவாக இருக்கும் இறைவனின் இரக்கம் குறித்து இன்று நோக்குவோம். யூபிலி ஆண்டின்போது, உலகெங்கும் உள்ள பேராலயங்களில் திறந்து வைக்கப்படும் புனிதக் கதவுகள், இறை இரக்கத்தின் அடையாளங்களாக உள்ளன. இந்த யூபிலி ஆண்டில் திறந்து வைக்கப்படும் புனித வாசல் வழியாக குடும்பங்கள் நுழைந்து செல்வதுடன், தங்கள் இதயங்களையும் மற்றவர்களுக்குத் திறக்கவேண்டும் என அண்மையில் நடந்து முடிந்த 'குடும்பம் குறித்த ஆயர் மாமன்றம்' அழைப்பு விடுத்திருந்தது. நாம் நம் கதவுகளை இறைவனுக்கு திறக்கவேண்டும் என இயேசு, தொடர்ந்து தட்டிக் கொண்டிருப்பதாக அவரே சொல்கிறார். நம் கதவுகளைத் திறந்து, நம் வீடுகளை அனைவரும் ஒன்றிணைந்து சந்திக்கும் இடங்களாகவும், குறிப்பாக, உதவித் தேவைப்படுவோரை வரவேற்கும் இடங்களாகவும் மாற்றும் வகையில் நாம் வாயில் காப்பாளர்களாகச் செயல்பட வேண்டியது எவ்வளவு முக்கியத்துவம் நிறைந்தது என்பதை உணர்வோம். 'நானே வாயில்' என்று இயேசுவும் நம்மிடம் கூறுகிறார். அந்த வாயிலே நம்மை மீட்பு நோக்கி வழிநடத்திச் செல்கின்றது. நாம் அவர் வழியாக நடந்தால், நிலைத்த பாதுகாப்பையும், விடுதலையையும் கண்டுகொள்வோம். திரு அவையில் வாயில் காப்பாளர்களாக இருக்கும் நாம், நல்லாயனின் மந்தையில் இணைய விரும்பும் மக்களை வரவேற்பவர்களாக செயல்பட வேண்டும் என்ற அழைப்பைப் பெற்றுள்ளோம். நம் கிறிஸ்தவ வீடுகள் ஒவ்வொன்றும் இறை இரக்க கதவின் அடையாளமாகவும், எடுத்துக்காட்டாகவும் விளங்கட்டும். இயேசுவைச் சந்திக்க விரும்பி கதவைத் தட்டும் அனைவருக்கும் திறந்ததாக எப்போதும் இருக்கிறது இறை இரக்கத்தின் கதவு.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  இவ்வாரம் வெள்ளியன்று உலகம் முழுவதும் சிறப்பிக்கப்பட உள்ள,  உலக குழந்தைகள் தினம் குறித்து எடுத்துரைத்தார். சிறார்கள் அடிமைகளாக்கப்படாமலும், தவறான முறையில் நடத்தப்படாமலும் இருக்கும் வகையில் குழந்தைகளைப் பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமையாகிறது. குழந்தைகளின் இன்றைய நிலை குறித்து, குறிப்பாக, ஆயுதம் ஏந்திய குழுக்களால் சிறார்கள் ஆயுதம் ஏந்த வைக்கப்படுவது குறித்து, அனைத்துலக சமுதாயம் விழிப்புடன் செயல்படும் என நான் நம்புகிறேன். அதேவேளை, குடும்பங்களும், குழந்தைகளின் பள்ளிக்குச் செல்லும் உரிமை மற்றும் கல்வி கற்பதற்கு இருக்கும் உரிமைகளை உறுதி செய்பவர்களாக செயல்படுவார்களாக என்ற ஆவலை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்மாதம் 21ம் தேதி, 'அன்னை மரி, கோவிலில் காணிக்கையாக ஒப்புக் கொடுக்கப்பட்ட விழா' சிறப்பிக்கப்பட உள்ளது குறித்தும் எடுத்துரைத்து, ஆண், பெண் துறவிகளின் இறையழைத்தல்களுக்காக இந்நேரத்தில் நாம் இறைவனுக்கு நன்றி கூறுவோம், தங்கள் செபம் மற்றும் மௌனப் பணிகள் வழியாக, அடைபட்ட மடங்களில் இருந்து சேவையாற்றும் துறவிகளுக்கு நாம் வழங்கும் ஆன்மீக மற்றும் பொருளுதவிகளுடன் அவர்களுக்கு அருகாமையில் இருப்போம், என விண்ணப்பித்தார்.

மேலும், இப்புதன் பொது மறைக்கல்வி உரையில், போலந்து திருப்பயணிகளை வாழ்த்தியபோது, போலந்தின் Solidarność தொழிற்சங்கத்தின் உறுப்பினர்களைப் பாராட்டினார் திருத்தந்தை. கடந்த 35 ஆண்டுகளாக, மனிதர் மற்றும் சமுதாயத்தின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்காக இச்சங்கம் தன்னை அர்ப்பணித்து உழைத்து வருவதைக் குறிப்பிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.  1989ம் ஆண்டில் முன்னாள் சோவியத் யூனியனில் கம்யூனிசம் கவிழ்க்கப்படுவதற்கு Solidarność சங்கத்தின் நடவடிக்கைகள் உதவியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இப்புதன் பொது மறைக்கல்வி உரையின் இறுதியில் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.

இந்த விண்ணப்பத்திற்குப் பின், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.