2015-11-18 15:04:00

அமைதி ஆர்வலர்கள் : 2000மாம் ஆண்டின் நொபெல் அமைதி விருது


நவ.11,2015.  “கடவுள் என்னோடு எப்பொழுதும் இருக்கிறார் என்ற நம்பிக்கையில் நான் வாழ்ந்தேன். தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன். கடவுள் என்னோடு எப்பொழுதும் இருக்கிறார் என்பதை எனது அனுபவத்தால் உணரந்திருக்கிறேன். நான் நாடு கடத்தப்பட்டு ஜப்பானில் இருந்தபோது, 1973ம் ஆண்டு ஆகஸ்டில், டோக்கியோவில் எனது தங்கும் விடுதி அறையிலிருந்து, அப்போதைய தென் கொரிய இராணுவ அரசின் புலனாய்வுப் பிரிவினரால் நான் கடத்தப்பட்டேன். இந்தச் செய்தி உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. புலனாய்வுப் பிரிவினர், தங்களின் படகில் நங்கூரத்தில் என்னை இறுக்கி, பார்க்க முடியாத அளவுக்கு கண்களைக் கட்டினார்கள், பேச முடியாத அளவுக்கு வாயில் துணியைத் திணித்தார்கள். அவர்கள் படகை கடற்கரை ஓரமாகக் கொண்டு சென்று என்னைப் படகிலிருந்து தூக்கி எறியத் தொடங்கிய அந்நேரத்தில் இயேசு கிறிஸ்து என் முன்னால் அவ்வளவு தெளிவாகத் தோன்றினார். நான் அவரைக் கட்டிப்பிடித்து என்னைக் காப்பாற்றும் என்று கெஞ்சினேன். அந்தக் கண நேரத்தில் ஒரு விமானம் வானத்திலிருந்து கீழே வந்து மரணப் பிடியிலிருந்து என்னைக் காப்பாற்றியது”.

அன்பு நெஞ்சங்களே, இவ்வாறு 2000மாம் ஆண்டில் நொபெல் அமைதி விருது பெற்ற நிகழ்வில் உரையாற்றியபோது பகிர்ந்துகொண்டார் தென் கொரிய அரசியல்வாதி கிம் தெ ஜூங்(Kim Dae-jung). இரண்டாயிரமாம் ஆண்டின் நொபெல் அமைதி விருதைப் பெற்ற இவர், ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவர். "ஆசியாவின் நெல்சன் மண்டேலா" என தனக்குத் தானே பெயர் சூட்டிக் கொண்ட இவர் 1924ம் ஆண்டு சனவரி 6ம் தேதி பிறந்தார். அச்சமயத்தில் கொரியா, ஜப்பான் பேரரசின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்ததால், இராணுவத்தில் கட்டாயமாகச் சேர்க்கப்படுவதைத் தவிர்க்கும் விதமாக, கிம் அவர்கள், தனது பிறந்த தேதியை 1925ம் ஆண்டு டிசம்பர் 3 என்று மாற்றிக் கொண்டார். இவர், 1998ம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டு வரை தென் கொரியாவின் எட்டாவது அரசுத்தலைவராகப் பணியாற்றியவர். அந்நாட்டின் சர்வாதிகார ஆட்சியை நீண்டகாலமாக உறுதியுடன் எதிர்த்து வந்தது மற்றும் வட கொரியா மீது கொண்டிருந்த சர்ச்சைக்குரிய Sunshine வெளிநாட்டுக் கொள்கைக்காக கிம் தெ ஜூங் அவர்களுக்கு நொபெல் அமைதி விருது வழங்கப்படுவதாக அச்சமயத்தில் கூறப்பட்டது. 1998ம் ஆண்டில் கிம் அவர்கள் அரசுத் தலைவராகப் பதவியேற்றதிலிருந்து, 2007ம் ஆண்டில் Lee Myung-bak அவர்கள் அரசுத் தலைவருக்குப் போட்டியிடும் வரை தென்கொரியாவின் Sunshine கொள்கை அமலில் இருந்தது. இக்கொள்கையால் தென் கொரியாவுக்கும், வட கொரிய கம்யூனிச நாட்டுக்கும் இடையே பெரிய அளவில் அரசியல் தொடர்புகள் ஏற்பட்டன. இவ்விரு நாடுகளின் உறவுகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணங்களும் இடம்பெற்றன. வடகொரியத் தலைநகர் Pyongyangல் 2000மாம் ஆண்டு ஜூனிலும், 2007ம் ஆண்டு அக்டோபரிலும் இரு கொரிய நாடுகளின் உச்சி மாநாடு நடந்தது. இவ்விரு நாடுகளுக்கு இடையே வர்த்தகம் இடம்பெறவும், கொரியச் சண்டையில் பிரிந்த குடும்ப உறுப்பினர்கள் சந்திப்பதற்கும் இக்கொள்கை வாய்ப்பளித்தது.

ஒரு நடுத்தரவர்க்க விவசாயக் குடும்பத்தில் பிறந்த கிம் அவர்கள், வணிகயியலில் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்தார். கொரியா, ஜப்பானிய பேரரசின்கீழ் இருந்ததால், ஜப்பானிய கப்பல் கட்டும் நிறுவனத்தில் அலுவலக எழுத்தாளராகப் பணியில் சேர்ந்தார். பின்னர் இந்த நிறுவனத்தின் உரிமையாளராகி செல்வந்தரானார். கொரியச் சண்டையில் கம்யூனிசவாதிகளின் கைதிலிருந்து தப்பித்தார். கொரியாவின் முதல் அரசுத்தலைவர் Syngman Rhee அவர்களின் நிர்வாகத்தின்போது, 1954ல் அரசியலில் நுழைந்தார் கிம். இவர் 1961ல், மக்களவைக்கு பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், இராணுவ அதிபர் Park Chung-hee அவர்களால் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு இடம்பெற்றதால் தேர்தல்கள் இரத்து செய்யப்பட்டன. ஆயினும், 1963 மற்றும் 1967ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் கிம் வெற்றியடைந்து எதிர்க்கட்சித் தலைவராக உயர்ந்தார். சிறந்த பேச்சாளரான இவர், தனது ஆதரவாளர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையைப் பெற்றார். 1971ம் ஆண்டு அரசுத்தலைவர் தேர்தலில், எதிர்க்கட்சியாக இருந்த புதிய சனநாயக கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு, 46  விழுக்காட்டுக்கு மேல் வாக்குகள் பெற்றார். இத்தேர்தல் பிரச்சாரத்தின்போது குறைந்தது ஐந்து முறை அரசியல் எதிரிகளால் தாக்கப்பட்டார். ஒரு விபத்தில் ஏற்பட்ட கால் காயத்தால் அவர் கடைசி வரை துன்புற்றார் கிம். ஆயினும் அதிபர் பார்க், இத்தேர்தலுக்குப் பின்னர் இராணுவச் சட்டத்தை அமல்படுத்தி, அனைத்து அரசியல் நடவடிக்கைகளையும் தடை செய்தார். அரசுத்தலைவர், வாழ்வு முழுவதும் பதவியில் இருப்பதற்கு வழியமைக்கும் "Yushin" அரசியல் அமைப்புமுறையை மக்களவை வழியாக கொண்டுவந்தார் அதிபர் பார்க். இதற்கு எதிராக அமெரிக்க ஐக்கிய நாட்டிலும், ஜப்பானிலும் கடும் போராட்டங்களை நடத்தினார் கிம். இதனால் 1973ம் ஆண்டு டோக்கியோவில் கடத்தப்பட்டார் கிம் தெ ஜூங். அப்போது கிம் அவர்கள் ஏறக்குறைய கொல்லப்பட்டதுபோல் ஆனார். மேலும், Jeolla மாநிலத்தில் 95 விழுக்காடு வாக்குகள் பெற்று தேர்தலில் வெற்றியடைந்தார் கிம். இவ்வெற்றி தென்கொரிய அரசியலில் இதுவரை எவரும் அடைந்திராத வெற்றியாகும்.

கிம் அவர்கள் கடத்தல்காரர்களிடமிருந்து காப்பாற்றப்பட்டு செயோல் திரும்பினாலும், உடனடியாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். 1976ல் மீண்டும் சனநாயக ஆதரவு போராட்டங்களில் இறங்கினார். இதனால் மீண்டும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். அச்சமயத்தில் இவரை, மனச்சான்றின் கைதி என்று, ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு பெயரிட்டது. 1979, அக்டோபரில் பார்க், அவரின் நெருங்கிய உதவியாளர்களில் ஒருவரால் கொல்லப்பட்டதற்குப் பின்னர், கிம், அனைத்து உரிமைகளையும் பெற்றார். ஆயினும் இது நடந்த சில மாதங்களிலிலேயே மற்றோர் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு நடந்து, ஒரு படைவீரர் குழு ஆட்சியைக் கைப்பற்றியது. கிம், மீண்டும், தேசத்துரோகம் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டார். பின்னர் இத்தண்டனை ஆயுள் தண்டனையாகவும், பின்னர் இருபது ஆண்டு தண்டனையாகவும் குறைக்கப்பட்டது. அமெரிக்க ஐக்கிய நாட்டின் தலையீட்டினால் இது நடந்தது. அப்போதைய திருத்தந்தை புனித 2ம் ஜான் பால் அவர்கள், கிம் தெ ஜூங் அவர்களின் விடுதலைக்காக விண்ணப்பித்தார்.

கிம் தெ ஜூங், விடுதலையாகி அமெரிக்க ஐக்கிய நாட்டில், நாடு கடந்த வாழ்வு வாழ்ந்து, 1985ல் மீண்டும் தென் கொரியா திரும்பினார். ஆயினும் உடனடியாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். 1987ம் ஆண்டு ஜூனில் இவர் மீதிருந்த எல்லாக் குற்றச் சாட்டுகளிலிருந்தும் விடுதலை செய்யப்பட்டார். 1997ல் தேர்தலில் வெற்றி பெற்று தென் கொரியாவின் 8வது அரசுத்தலைவரானார். கொரியாவின் நவீன வரலாற்றில் எதிர்க்கட்சிக்கு இப்பதவி கிடைத்த முதல் நிகழ்வாக இது இருந்தது. கடும் நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் ஆட்சிக்கு வந்த கிம் தெ ஜூங் அவர்கள், பொருளாதாரத்தைச் சீர்படுத்தி, திவாலாகும் நிலையிலிருந்த நாட்டை மீட்டெடுத்தார். 2000மாம் ஆண்டு ஜூன் 15ல், வட கொரியத் தலைவர் Kim Jong-il அவர்களுடன் இணைந்து ஓர் அறிக்கையில் கையெழுத்திட்டார். இது அனைத்துக் கொரியர்களுக்கும், அமைதியை விரும்பும் அனைவருக்கும் ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழியமைப்பதாய் அமைந்தது. 2000மாம் ஆண்டின் நொபெல் அமைதி விருதைப் பெற்ற Kim Dae-jung அவர்கள், 2009ம் ஆண்டு ஆகஸ்ட் 18ல் காலமானார்.

"சனநாயகமும், சந்தைப் பொருளாதாரமும் ஒரு வண்டியின் இரு சக்கரங்கள் போன்றவை என்று சொன்ன கிம் தெ ஜூங் அவர்கள், நான் இராணுவ அரசால் 1980ல் மரண தண்டனை விதிக்கப்பட்டேன், நான் தூக்கிலிடப்படும் நாளுக்காகக் காத்திருந்தேன், மரண பயத்தால் நடுங்கினாலும், இறுதியில் நீதியே வெல்லும் என்ற வரலாற்று உண்மையில் நான் அமைதியைக் கண்டேன் என்றுரைத்துள்ளார்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.