2015-11-17 16:13:00

நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் விழிப்புணர்வு வாரம்


நவ.17,2015. நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளுக்கு குணமாக்கும் ஆற்றல் எவ்வளவு தூரம் உள்ளது என்பது குறித்த புரிந்துகொள்ளுதல் மக்களிடம் இன்னும் தெளிவாக இல்லை என்று WHO உலக நலவாழ்வு நிறுவனம் கூறியுள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளின் ஆற்றல் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தவும், இம்மருந்துகள் பயன்படுத்தப்படும் விதத்தை மாற்றவும், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் உலக விழிப்புணர்வு வாரத்தில் முயற்சித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 22, வருகிற ஞாயிறு வரை முதல் முறையாக கடைப்பிடிக்கப்பட்டுவரும் இந்த உலக விழிப்புணர்வு வராம் குறித்துப் பேசிய WHO நிறுவனத்தின் இயக்குனர் மருத்துவர் மார்கிரேட் சான் அவர்கள், இம்மருந்துகளின் குணமாக்கும் சக்தி குறித்த புரிந்துகொள்தலை உருவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று கூறினார்.

இதற்கிடையே, உலகில் உள்ள பல நோய்களுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த நோய்களைக் குணப்படுத்துவதற்காக நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளையே மருத்துவர்கள் கொடுக்கிறார்கள். அது மட்டுமல்லாமல், மற்ற நோய்களின் தாக்கத்தைக் குறைப்பதற்கும், நோய் வராமல் தடுப்பதற்கும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. ஆனால் இனிமேல் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் வேலை செய்யாது என்று உலக நலவாழ்வு நிறுவனம் ஏற்கனவே எச்சரித்துள்ளது.

நோயை உண்டாக்கும் சூப்பர் பக்ஸ் எனும் கிருமிகள் முன்பு இருந்ததைவிட இப்போது வீரியத்துடன் உருவாகி வருகின்றன. எனவே தற்போது உள்ள நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை இனி பயன்படுத்தினால், அதனால் எந்த பயனும் கிடைக்காது. எனவே சூப்பர்சக்தி கொண்ட நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றும் அந்த நிறுவனம் கூறுகிறது.

மருத்துவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை அதிக அளவில் பரிந்துரைப்பது,  நோயாளிகள் இத்தகைய மருந்துகளை பரிந்துரைக்கப்பட்ட காலம் முழுவதும் சாப்பிடாமல், இடையில் நிறுத்துவது போன்ற காரணங்களால் நோய் கிருமிகள் வீரிய சக்தியுடன் மாறி இருப்பதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். 

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.